இணையத்துக்கு அடிமையாதல் என்றொரு நோய்
Sunday, 27 November 2016 by மின் வாசகம்
மனித மூளை இயற்கை தந்த கொடைகளிலேயே மிக அற்புதமனது, அதே சமயம் மிகுந்த ஆபத்தானதும் கூட. மனிதன் எதாவது ஒரு பழக்கத்தினை விரும்பத் தொடங்கி விட்டால், அதனைத் தொடர்ச்சியாகப் பெற்றுக் கொள்ளவே நினைக்கின்றான்.
இன்று உலகில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இணையங்களைப் பயன்படுத்த தொடங்கி விட்டனர். கிட்டத்தட்ட தினமும் அன்றாடத் தேவைகளில் ஒன்றாகவே இணையம் வந்தாகி விட்டது. கல்வி, வேலை, பொழுதுபோக்கு, தொழில் எனப் பல வகைகளிலும் கூட இணையம் தேவைப்படுகின்றன.
தொழில்நுட்ப வளர்ச்சியும், இணையதள பரவலும் அதனால் ஏற்பட்ட மக்கள் ஊடகங்களின் (Social Medias) வருகையும் மனித சிந்தனைகளின் பகிர்தல் முறைகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. உலகில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் யாரோ ஒருவர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் கூட கடல் கடந்த தேசங்களில் பலராலும் அறிய முடிகின்றது. நூறாண்டுகளுக்கு முன் இவற்றை எல்லாம் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். அவ் வகையில் இணையப் பெருவெளி எம்மைப் போன்ற சாமானியர்களின் பெரும் வியப்பையும், பிரமிப்பையும் ஏற்படுத்தி உள்ளது எனலாம்.
ஆனால் இணைய தளங்கள், மக்கள் ஊடகங்கள் நமது அன்றாட வாழ்வின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டே வருகின்றது. இதனால் ஏற்படும் நன்மை தீமைகள் குறித்து சிந்தித்தால் ஒரு தெளிவான பதிலை எட்ட முடியாமலேயே இருக்கின்றது. பல தகவல்களை அறியும் ஆர்வமுடைய என்னைப் போன்ற சாதாரணமானவர்களுக்கு இணையம் ஒரு வர பிரசாதம். வானொலிகள், புத்தகங்கள் என்பது ஊடாக, அதுவும் செலவும் செய்ய வசதி இல்லாமல் ஒவ்வொரு விடயத்தையும் தேடி தேடி வாசித்த காலம் போய் கண் முன்னே உலகை விரிவடையச் செய்தும் உலகின் ஒவ்வொரு அசைவுகளையும் அறியத் தந்து கொண்டிருப்பதில் இணையம் ஒரு மிகப் பெரிய சக்தியே எனலாம்.
ஆனால் இணையம் எல்லா சந்தர்பங்களிலும் வரமாய் அமைந்து விடுவதில்லை என்பதே உண்மை. மக்கள் ஊடங்களும், பிற இணைய ஊடகங்களும் இன்று பல குப்பைகளை கொட்டும் இடமாகவும், தனி மனித குரோதங்களையும், வெறுப்புக்களையும் தீயாய் உமிழும் ஒரு இடமாகவும் மாறிக் கிடக்கின்றது. பல மக்களை நல்ல முறையில் இணைத்து நல்ல மாற்றங்களை உண்டாக்கிய அதே இணையத்தை பலரும் ஆபத்தான, முட்டாள் கருத்துக்களை பரப்பும் கருவியாகவும் கைக்கொண்டு வருகின்றார்கள்.
மக்கள் ஊடகங்களான பேஸ்புக், ட்விட்டர், வலைப்பதிவுகள் என அனைத்திலும் நாம் எதாவது ஒன்றை கிறுக்கிக் கொண்டே இருக்கின்றோம். சில சமயங்களில் புத்தி பேதலித்து விட்ட கூட்டத்தின் பிதற்றல்களை போல அவை காட்சி தரவும் செய்கின்றது. இக் கிறுக்கல்களுக்கு மத்தியில் எவை நல்லது, கெட்டது. எவை பயன் உள்ளவை, பயன் அற்றவை. எவை நம்பகமானவை, நம்பகமற்றவை, எவை மெய், பொய். என எதையும் பிரித்தறிய முடியாத சூழலிலேயே சாதாரண வாசகர்களாகிய நாம் இருக்கின்றோம்.
எதுவும் அளவுக்கு மிஞ்சிப் போகும் போது அது பேராபத்தையே உண்டாக்கும். அதே போலத் தான் இணையப் பயன்பாடும் அளவுக்கு மிஞ்சிப் போகும் போது அது நமது இயல்பு வாழ்க்கையை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கும். ஏற்கனவே மேற்குலகில் மிதம் மிஞ்சிய இணையப் பயன்பாட்டால் பலரும் தமது உள்ளத்தையும், உடலையும் பாழாக்கி வருகின்றனர்.
இணையத்துக்கு அடிமையாகிக் கிடப்பதை ஒரு உளவியல் நோயாக இன்னமும் மருத்துவ உலகம் கருதவில்லை என்ற போதும், அதிகளவு இணையப் பயன்பாட்டைக் கட்டுபடுத்த அறிவுறுத்தியுள்ளது. அதுவும் இப்போது எல்லாம் அனைவரும் கைகளில் செல்பேசிகளும், அச் செல்பேசிகளில் இணைய இணைப்புக்களும் வந்துவிட்டதால் யாரைப் பார்த்தாலும் பேஸ்புக், டிவிட்டர், வலைப்பதிவு, இஸ்ண்டாகிராம், வாட்சாப் எனப் பலரும் சதா இணையத்திலேயே மூழ்கி விடுகின்றனர். பலருக்கு இணையத்தைப் பயன்படுத்த முடியாமல் இருக்க முடிவதில்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது.
மனிதர்களாகி நாம் அன்றாடம் பல சாதனங்களைப் பயன்படுத்துகின்றோம், ஆனால் உதாரணத்துக்குக் கார், பைக், தொலைக்காட்சிகள், ஏசி எனப் பல சாதனங்களுக்கு நாம் அடிமை ஆகிவிடுவதில்லை. ஆனால் இணையம் அவ்வாறானதல்ல.
கெவின் ராபர்ட்ஸ் என்பவர் தினமும் 12 மணி நேரம் வரை கணனியை பயன்படுத்தி வந்த ஒரு நபர். பெரும்பாலும் விளையாடுவது, இணையத் தளங்களை மேய்வது என நேரத்தை செலவழித்துக் கொள்வார். பல சமயங்களில் உறக்கமும், அன்றாட வாழ்வியல் காரியங்களும் கூடப் பாழடைந்தன. ஒரு நாள் மதுப் பழக்கத்துக்கு அடிமையான ஒரு நண்பரை சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கும் போது, ஒரு முக்கியமான விடயத்தை அவர் கவனித்தார். ஆம் ! மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்களிடம் காணப்படும் அத்தனை அம்சமங்களும் தனக்கும் இருந்ததை அவர் உணர்ந்தார். என்ன ஒரு வித்தியாசம் இவர் சைபர் அடிமையாகி இருந்தார்.
பல போராட்டங்களுக்குப் பின் இணைய அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்ட ராபர்ட்ஸ் தமது அனுபவத்தை ஒரு நூலாகவும் வெளியிட்டதோடு, இணைய மற்றும் கணனிப் பயன்பாட்டுக்கு அடிமையானோரை மீட்டு எடுக்கப் பல சொற்பொழிவுகளையும், வழிக்காட்டல் பயிற்சி பட்டறைகளையும் நடத்தி வருகின்றார்.
இது ராபர்ட்ஸ் மட்டும் சந்தித்த ஒரு பிரச்சனை அல்ல, உலகம் முழுவதும் லட்சக் கணக்கானோர் அறிந்தும், அறியாமலும் இணையத்துக்கு அடிமையாகி வருகின்றனர்.
இணையப் பயன்பாட்டு அடிமையானோருக்கும், போதைப் பொருட்களுக்கு அடிமையானோருக்கும் கிட்டத்தட்ட ஒரு விதமான அறிகுறிகள் அவதானிக்கப்பட்டுள்ளது. பல சமயங்களில் ஏன் இணையத்தை மேய்கின்றோம் எனத் தெரியாமலயே பலரும் இணையத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர். பலரும் சமூகத் தளங்களான ட்விட்டர், பேஸ்புக் எனப் பலவற்றில் ஒன்றிப் போய் விடுகின்றனர். அதே போலப் பெரும்பாலானோர் இணைய விளையாட்டுக்கள், காணொளிகள் போன்றவற்றைக்கும் அடிமையாகி விடுகின்றனர்.
இணைய அடிமைத்தனத்துக்கு முறைப்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள் என எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் பென்சில்வானியாவின் பிராட்போர்ட் பகுதி மருத்துவ மையம் 10 நாள் இலவச கலந்தாலோசணைகளை வழங்கவுள்ளது.
அதிகளவு கணனி, செல்பேசி ஊடான இணையப் பயன்பாடு என்பது ஒருவரின் தனி நபர் திறனை மட்டுமில்லாமல் அவரைச் சார்ந்த குடும்பம் மற்றும் உறவுகளைக் கூட மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்க வல்லது. அது மட்டுமில்லாமல் மாணவர்கள் மத்தியில் கல்வித் திறன் குறைபாடுகளையும், பணியாற்றுவோர் மத்தியில் பணித் திறன் குறைவுகளையும் ஏற்படுத்தும் எனக் கெவின் ராபர்ட்ஸ் எடுத்துரைக்கின்றார்.
உலகிலேயே தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த தென் கொரியாவில் அதிகளவு இணையம் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் அங்கு இணைய அடிமைத்தனம் மிகுந்தும் வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த அந் நாட்டு அரசாங்கம் பலவித ஆய்வுகளையும், கொள்கைகளும் வகுத்து வருகின்றது.
இணையத்தில் தொழில் நிமித்தமாகவோ, பொறுப்புடன் எழுதுவதாக காட்டிக் கொள்ளும் பிரபலங்கள் பலரும் கூட வாசிப்போருக்கு நன்மை பயக்கும் வண்ணம் எழுத முற்படுவதில்லை. பலரும் பணம் செய்யும் உத்தியாகவும், தனி மனித சுய விளம்பரங்களுக்காகவும், தாம் நம்பும் கொள்கைகள், மதங்கள், சாதியங்கள், கோட்பாடுகளை பிறர் மீது திணிக்கும் வாய்ப்பாகவுமே இணையத்தை கருதுகின்றார்கள்.
இத்தகைய லட்சக் கணக்கான கருத்துக் குவிப்புக்கள் மத்தியில் இவற்றை எல்லாம் எவ்வாறு தரம் பிரித்து நுகர்வது என்பதில் நமக்கு பல சிக்கல்கள் எழவே செய்கின்றனர். இவற்றை நல்ல முறையில் பயன்படுத்துவது குறித்த போதிய விழிப்புணர்வுகள் நம்மவர்களில் மிகக் குறைவே எனலாம்.
வாசகர்கள் வாசிப்பதன் ஊடாக பேரானந்தம் பெறவும், அறிவூட்டல்கள் அடையவும், சிந்தனை வளம் பெருகவும், அவர் தம் வாழ்வில் இம்மியளவேனும் மாற்றங்களை பெறவும் வேண்டும் என்ற எண்ணத்துடன் இணையத்தை இயக்குவோர் மிக மிகக் குறைவே எனலாம். போலிகளையும், பக்கச்சார்புகளையும், பொறுப்பற்ற பகிர்வுகளையும் இணையம் உள்வாங்கி இருப்பதனால் ஒவ்வொரு வாசகர்களும் தமக்கு எவை உகந்தவை, எவை எல்லாம் உதவாதவை என்பதை ஆய்ந்து சுய தணிக்கை செய்து கொள்வதன் அவசியம் இன்றியமையாத ஒன்றாகும்.
ஏனெனில் இன்று மக்கள் ஊடகங்களை அதிகம் பயன்படுத்துவோர் பலருக்கும் ஒருவித உளவியல் அழுத்தம் காணப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அனைத்தையும் தவற விட்டு விடக் கூடாது என்பதில் பலரும் அதிக அக்கறை செலுத்துவதால் ஒரு வித மன பதற்றம் பலருக்கும் ஏற்பட்டு இணைய மக்கள் ஊடகங்களில் மூழ்கிப் போய் கிடக்கின்றனராம். மக்கள் ஊடகங்களில் கொட்டிக் கிடக்கும் பல தெரிவுகளும், அது கொடுக்கும் ஒருவித கர்வ எழுச்சியும், மகிழ்ச்சியும், பாராட்டுக்களும், விமர்சனங்களும் நம்மை அதில் கட்டிப் போட்டு வைத்துள்ளது.
இன்று பலருக்கும் இணையத்தில் ஒரு பயன் மிக்க கட்டுரையை ஆழமாக வாசிக்கவோ, காட்சிப் பதிவுகளை பொறுமையாக கவனிக்கவோ, இரசிக்கவோ இயலாமல் போய்விட்டது. ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு கண நொடிப் பொழுதில் தாவிக் கொண்டே உள்ளார்கள். இவ்வாறு தாவும் மனப்பான்மையை உளவியலாளர்கள் FOMO ( Fear Of Missing Out ) எனக் கூறுகின்றார்கள். சுமார் 56 % பேருக்கு இத்தகைய பதற்றமும், குழப்பமும் தாவும் மனப்பான்மையும் மிகுந்து காணப்படுவதாக ஓர் அறிக்கை தெரிவிக்கின்றது.
எதையாவது தவற விட்டுவிடுவோமோ என்ற பதற்றத்திலேயே பலதை ஒரு சமயத்தில் காண முற்படுவதால் வாழ்வின் பெரும் பகுதி நேரத்தை இணையத்தில் கழிக்கும் மோசமான சூழலும் எழுந்துள்ளது எனலாம். உண்மையில் நாம் எதையும் இணையத்தில் தவறவிடுவதால் இழப்பதில்லை, நமக்குத் தேவையானவற்றை முறையாக பெற்றுக் கொள்ளவும், பொறுமையாக வாசித்தோ, கண்டோ, கேட்டோ அறிந்து கொள்ள பல செயலிகள் இணையத்தில் உண்டு. அவற்றை சாவகாசமாய் அறிந்து அசைபோட்டு உள்வாங்கி கிரகித்துக் கொள்ளலாம். அதுவே சீரான அறிவு வளர்ச்சிக்கு உகந்ததாய் அமையும் என்பேன். ஆகவே இணையத்தில் அலைபாயும் மனதுக்கு கடிவாளம் போடக் கற்றுக் கொள்வது இணைய வாழ்வின் முதல் படியாகும்.
இது நிச்சயம் இணையத்தின், மக்கள் ஊடகத்தின் குற்றமில்லை. மாறாக அவற்றை சரிவர பயன்படுத்த தெரியாமல் இடறும் மனித மனதின் ஒழுக்கமின்மையும், அறிவின்மையும் தரும் குழப்ப நிலையே எனலாம்.
தொழில்நுட்பம் நமக்குள் ஏற்படுத்தியுள்ள ஒரு பிரமாண்ட உணர்வு, மோக வலைக்குள் சிக்கி விடாது அளவோடு பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சு என்பது போல அளவுக்கு அதிகமான இணையப் பயன்பாடு அதனை ஒட்டிய கணனி, செல்பேசி, சமூகத் தளங்கள் போன்றவற்றின் பயன்பாடும் நமது அன்றாட இயல்பு வாழ்க்கையைப் பாதிப்படையச் செய்துவிடும் என்பதை மட்டும் ஆழமாக மனதில் பதிய வையுங்கள்.
- மின் வாசகம்
- மின் வாசகம்
***

Post a Comment