உலகம் முழுவதும் இன்று ஆங்கிலம் முக்கியமான தொரு மொழியாக பரிணமித்துள்ளது. உலகின் பல நாடுகளில் ஆங்கிலத்தை கற்கின்றனர். இந்தியா போன்ற முன்னாள் பிரித்தானிய காலனித்துவ நாடுகளில் ஆங்கில வழிக் கல்விக்கும் முக்கியத்துவம் வழங்கப் படுகின்றது. இந்நிலையில் ஆங்கிலப் புத்தகங்களின் விற்பனை ஆங்கிலம் பேசப்படும் நாடுகளையும் தாண்டி அதிகம் விற்பனை ஆகத் தொடங்கியுள்ளன. குறிப்பாக இந்தியா, சீனா போன்ற நாடுகளில் அதிகளவு ஆங்கிலப் புத்தகங்களை வாசிக்கத் தொடங்குகின்றனர். இதனால் மேற்கத்திய பிரசுரங்கள் பலவும் இந்தியாவுக்குள் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன.  உலகில் ஆங்கிலப் புத்தகங்கள் அதிகம் விற்கப்படும் மூன்றாம் நாடாக இந்தியா திகழ்கின்றது. ஆங்கிலப் புத்தகங்களின் வாசிப்பு அதிகம் இருப்பதால் மக்கள் அவரவர் தாய்மொழியைக் கைவிட்டு ஆங்கிலத்தை விரும்புகின்றனர் என எடுத்துக் கொள்ளலாமா என்ற எண்ணம் நமக்கு ஏற்படுவது இயல்பானது. ஆனால் அவை எந்தளவுக்கு உண்மை. இதற்கான பின் புல காரணங்களை ஆராய முற்படுதல் வேண்டும்.

*

இந்த வருடம் சென்னை புத்தக் கண்காட்சியில் வழக்கத்தை விட அதிகம் மக்கள் அலைமோதினார்கள். ஏறத்தாழ 750 கடைகள் இடம்பெற்றன. 13 கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை பல பதிப்பகங்கள் விற்றுத் தள்ளியுள்ளன. வழக்கத்தை விட இந்த முறை அதிகளவு புதினங்களே அதிக வரவேற்பை பெற்றன, அவற்றுக்கு அடுத்த படியாக அறிவியல், தன்னம்பிக்கை சார்ந்த புத்தகங்கள் போன்றவையும் இளைய தமிழர்களால் அதிகம் விரும்பப்பட்டன. 

இந்தியாவை எடுத்துக் கொண்டால் தாய்மொழி அறிவுக்கு நிகரான ஆங்கில அறிவையும் பலர் பெறத் தொடங்கி இருக்கின்றனர். இதனால் தாய்மொழிகளில் தரமிக்க புத்தகங்கள் கிடைக்காத பட்சத்தில் ஆங்கிலத்தை நாடுகின்றனர். குறிப்பாக தமிழ் மொழியில் வெளியாகும் புத்தகங்கள் பலவும் புதிய தலைமுறையினருக்கான ரசனை குறைந்தே வெளியாகுகின்றன. அவற்றில் எழுதுவோரும் ஒரு தலைமுறை முந்தியவர்களாகவே இருக்கின்றனர். தரமிக்கத் தகவல் செறிவுள்ள புத்தகங்கள் குறைவாகவே எழுதப்படுகின்றன. பெரும்பான்மையானவை நாவல்கள், கதைகள், கவிதைகள், பழம் இலக்கியங்கள் போன்றவைகளை இளம் தலைமுறையினர் பலர் விரும்புவதில்லை.

பலவும் ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாகவும், மக்களுக்குப் புரிகின்ற மொழி நடையில் அமையாமல் மிகவும் கரடுமுரடான சொற்கள், மொழிப் பெயர்ப்புக்களால் அமைந்துள்ளன.

*

ஆங்கிலப் புத்தகங்களுக்கு வாசகர் வட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட மொழி பேசுவோரை விடவும் அதிகம். சேத்தன் பகத் போன்ற இளம் இந்திய எழுத்தாளர்களின் புத்தகங்களை பரவலாக இந்தியர்கள் பலரும் வாசிக்கின்றனர். சில குறிப்பிட்ட ஆங்கில எழுத்தாளர்கள் அவர்களின் கலாச்சார மொழி பின்புலத்தைச் சேர்ந்தோரால் மட்டுமே வாசிக்கப்படுகின்றது. மேற்கத்திய எழுத்தாளர்களுக்கு உலகம் முழுவதும் வாசகர்கள் கிடைக்கின்றனர். இதனால் பல பிரசுரங்கள் அந்தந்த மக்களின் வாங்கும் திறனுக்கு ஏற்ப புத்தகங்களை வெளியிடுகின்றனர்.

ஆனால் தமிழை பொறுத்த வரை அதன் பெரும் வாசகர்கள் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன என்பதால் தரமற்ற புத்தகங்களை வாங்கவும் விரும்புவதில்லை. அதே போல தரமானவைகளை அதிக விலைக்கு வாங்கவும் முடிவதில்லை. தாய் மொழி புத்தகங்கள் விற்பனைச் சரிவுக்கு மக்கள் மத்தியில் தாய் மொழி அறிவு குறைந்துள்ளது எனக் கூறி விட முடியாது. ஏனெனில் என்றும் இல்லாத இணையத் தளங்கள், சமூக ஊடகங்கள் முதலானவற்றின் அளவுக்குத் தமிழ் உட்பட இந்திய மொழிகளில் எழுதுவோர் தொகை மிகுந்துள்ளது.

*

பல புதிய எழுத்தாளர்களை முன் வந்து ஊக்குவிக்கவும் பல பிரசுரங்கள் தயங்குகின்றன. காரணம் தமிழில் புத்தகங்களை வெளியிடும் பிரசுரங்கள் பலவும் சிறிய முதலீட்டில் இயங்கிக் கொண்டிருப்பவை, கொஞ்சம் அதிகம் நட்டம் ஏற்பட்டாலும் அவர்கள் பிரசுர தொழிலை விட்டு அகலும் சூழல் இருக்கின்றது. இதனால் தரமிக்க தகவல்களையும், வடிவமைப்புக்களையும் கொண்ட தமிழ் புத்தகங்கள் நியாயமான விலையில் கிடைப்பது எளிதான ஒன்றாக இல்லை. இதுவே பல இளம் வாசகர்களை ஆங்கிலப் புத்தகங்களை நோக்கி நகரச் செய்கின்றது.

தமிழ் புத்தகத் துறையில் அந்நிய முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம், தரமிக்க புத்தகங்களை நியாயமான விலையில் வெளியிட முடியும் என நான் கருதுகின்றேன். ஏனெனில் அவர்களால் சிறு நட்டத்தை பொறுத்துக் கொள்ள முடியும். அதே சமயம் புதிய எழுத்தாளர்களையும் கவலையின்றி ஊக்குவிக்க முடியும்.

பன்னாட்டுப் புத்தகங்கள் பலவும் தமிழில் மொழி பெயர்க்கப்படும் சூழல் எழும். இளைய தலைமுறையினர் பலரும் தமிழில் வாசிக்கின்றனர். அவர்கள் பலரும் கூட நல்ல வாங்கும் திறனை கொண்டுள்ளனர். அதே போலத் தமிழர்களின் ரசனை என்பது மாறிக் கொண்டே வருகின்றது. ஒவ்வொரு பிரிவினருக்கும், பகுதிகளில் வாழ்வோருக்கும் வித்தியாசமான ரசனைகள் பல உள்ளன.

Bloomsbury, Simon & Schuster, Hachette Book Publishing India போன்ற வெளிநாட்டு புத்தக நிறுவனங்கள் பலவும்  இந்தியாவுக்கு வரத் தொடங்கியுள்ளன. அவர்கள் இங்கு நிறுவனங்களைத் தொடங்கிப் புத்தக வியாபாரங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். ஆங்கிலப் புத்தகம் மட்டுமன்றி நமது  இந்திய மொழிகளில் கூடப் புத்தகங்களை வெளியிடத் தொடங்கி உள்ளனர். Mills & Boon போன்ற நிறுவனங்கள் குறைந்த விலையில் புத்தகங்களை வெளியிடத் தொடங்கியுள்ளன.

கடந்த ஆண்டு அமேசான் நிறுவனம் தமிழ் புத்தகங்களை இணையம் மூலமாக விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. தமிழின் முன்னணி எழுத்தாளர்களது ஆக்கங்கள் உட்பட சுமார் 8000 தலைப்புகளில் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. இதில் இலக்கியம், புனைவு, தன்வரலாறு, வணிகம், தன்முன்னேற்ற, சமையல், குழந்தைகள் புத்தகங்கள் என பலவகையான புத்தங்கள் இடம்பெற்றிருந்தன. 

உள்நாட்டு நிறுவனங்களை விடவும் வெளிநாட்டு நிறுவனங்களால் குறைந்த விலையில் புத்தகங்களை விற்கும் சாத்தியம் மிகுதியாக உள்ளது.

*

இந்தியாவில் மாநில மொழி பேசுவோரின் தொகையானது பல ஐரோப்பிய மொழி பேசுவோரை விட அதிகமானதாகும். தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை என்பது 8 கோடிக்கும் அதிகமாக இருக்கின்றது.

அத்தோடு தமிழர்கள் இந்தியாவை தாண்டி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஐரோப்பா என வியாபித்தும் உள்ளனர்.

தாய்மொழியில் வாசிப்போருக்கான சந்தை என்றுமே பலமாகவே இருக்கின்றது. பலரும் என்றும் இல்லாத அளவுக்கு அவர்களின் தாய் மொழியில் வாசிக்கும் அறிவை பெற்று வருகின்றனர். இந்திய மொழி சந்தையானது ஜப்பான், ஜெர்மன் மொழிகளுக்கு இணையாகவும் இருக்கின்றது. வளரும் பொருளாதாரத்தில் பல நடுத்தர மக்களால் கூட நல்ல புத்தகங்களை வாங்கி வாசிக்கும் திறன் ஏற்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் ஆங்கிலப் புத்தகங்களை விட அசாமிய புத்தகங்கள் அதிகளவு விற்பனை ஆகின்றன. Bhupen Hazarika-வின் புத்தகங்கள் எந்தக் கடந்த 2012-யில் மட்டும் 37 அசாமிய மொழி புத்தகங்கள் அதிகளவு 10, 000 பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மலையாளம், மராத்தி, உருது போன்ற மொழிகளில் பல லட்சம் புத்தகங்கள் விற்றுத் தள்ளுகின்றன.

சில இந்திய மொழிகளில் அந்நிய பிரசுரங்களே புத்தகங்களையும் வெளியிடத் தொடங்கியுள்ளன என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இணைய வழி சந்தை வந்த பின் இந்தியாவில் இந்தி, மராத்தி, வங்காள மொழிப் புத்தகங்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளன. Flipkart இணையதளத்தின் ஊடாக இந்தி, வங்காள மொழிப் புத்தகங்கள் 40 % அதிகம் விற்றுத் தள்ளியுள்ளன என மித்ரா & கோஸ் பிரசுரத்தின் இயக்குநர் இந்திராணி ராய் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய சூழலைப் பார்த்தோமானால் பல நாடுகளில் தாய் மொழிப் புத்தகங்கள் அதிகம் விற்பனை ஆகின்றன. ஆங்கிலத்தில் வெளியிடப்படும் பல புத்தகங்கள் கூட உடனுக்குடன் அவர்களது தாய் மொழியில் கிடைக்கின்றன. நீலி நிகாஸ் என்ற பெண் எழுத்தாளரின் புத்தகங்கள் 8 கோடி மக்களைக் கொண்ட ஜெர்மனியில் 50 லட்சம் பிரதிகள் விற்றுள்ளன. அவர் ஜெர்மன் மொழியிலேயே எழுதி வருகின்றார்.

*

வட அமெரிக்கா போன்ற நாடுகளில் அச்சில் ஏறும் புத்தகங்களின் விற்பனையை விட டிஜிட்டல் புத்தகங்கள் அதிகளவில் விரும்பி வாசிக்கப்படுகின்றன. கையடக்க செல்பேசிகள், மடிக் கணனிகள், கணனிகள், மின்-வாசிப்பான்கள் போன்றவற்றில் எங்கும், எப்போதும் நினைத்த நேரத்தில் எளிமையாக வாசிக்க இயலும் என்பதால் அச்சுப் புத்தங்களை விட டிஜிட்டல் புத்தகங்களை இளைய தலைமுறையினர் அதிகம் விரும்புகின்றனர். இந்தியாவிலும் வருங்காலத்தில் டிஜிட்டல் புத்தகங்களே அதிகம் வாசிக்கப்படும் சூழல் ஏற்படப் போகின்றது.

எழுத்தாளர் சஞ்சிவ் சப்லோக் எழுதிய Breaking Free Nehru என்ற புத்தகத்தை ஆந்தம் இந்தியா பிரசுரம் வெளியிட்டது. இந்தியாவில் எந்தவொரு புத்தகமும் 500 பிரதிகள் விற்றாலே சாதனையாகக் கருதப்படுகின்றது. ஆனால் சஞ்சிவ் சப்லோக் தமது புத்தகத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். எதிர்பாராத அளவுக்கு அவரது புத்தகங்கள் 24, 000 பிரதிகள் இணையத்தில் தரவிறக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஆங்கில மொழி புத்தகங்கள் ஆங்கிலம் பேசப்படாத நாடுகளில் விற்கப்படுவதற்கு முக்கியக் காரணங்கள் அப் புத்தகங்கள் தத்தமது தாய் மொழிகளில் கிடைக்காமல் இருப்பதால் தான், போலாந்தில் Kindle E-reader -யில் பலரும் முதலில் போலாந்து மொழிப் புத்தகங்களைத் தேடுகின்றனர். அது கிடைக்காத பட்சத்திலேயே ஆங்கிலப் புத்தகங்களைத் தரவிறக்கம் செய்கின்றனர் என எழுத்தாளரும், மின் -நூல் ஆய்வாளருமான Piotr Kowalczyk கூறுகின்றார்.

ஜப்பானில் அதிகளவு விற்கப்பட்டுள்ள முதல் பத்து நூல்களும் ஜப்பானிய மொழியில் எழுந்தவை ஆகும். இவை யாவும் லட்சக் கணக்கான பிரதிகள் புத்தக வடிவிலும், மின்-நூல் வடிவிலும் விற்கப்பட்டுள்ளன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

தமிழிலும் சில புத்தகங்களை மின்-நூல் வடிவில் மின்-வாசிப்பானில் வெளியிடுவதன் மூலம் அவற்றைக் குறைந்த விலைக்கு வாங்கி வாசிக்கவும் இயலும் என்பதையும் பிரசுரங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் பல தமிழ் புத்தகங்கள் இன்னமும் கிண்டள் உட்பட மின்வாசிப்பானில் படிப்பதற்கு ஏதுவாக மின்னூல் வடிவத்தை பெறாமல் இருக்கின்றன. அமேசான் போன்ற நிறுவனங்கள் தமிழ் மின்னூல்களை வெளியிடாமல் இருக்கின்றன. 

*

வழக்கமாக எழுதும் பாணிகளில் இருந்து மாறுபட்டுப் புதுமையாக எழுத முற்பட வேண்டும். புனைவுகள் என்பதையும் கடந்து அறிவுக்கு மனதுக்கும் இன்பம் ஊட்டும் வகையிலான புத்தகங்களை எழுத முற்பட வேண்டும்.

தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் ஆங்கிலப் புத்தகத்தை வாசித்தால் ஆங்கில அறிவு வளரும் என்ற நோக்கில் தாய் மொழி புத்தகங்கள் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இந்த நிலை நீடித்துக் கொண்டே போகும் போது தமிழில் வாசிப்பு பழக்கமும் குறைந்து கொண்டே போகும்.

தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் நூலகங்களை நிறுவவும் அதில் சரி பாதியளவில் தமிழ் புத்தகங்களை வைக்கவும் தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். அது மட்டுமின்றி நூலக வாசிப்பு நேரங்களை மாணவர்களுக்கு வழங்கவும் பள்ளிகளை நிர்பந்திக்க வேண்டும்.

அது போக, தமிழர்கள் முக்கிய வைபவங்கள், விழாக்களில் புத்தகங்களை பரிசளிக்கும் பழக்கங்களையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் தமிழ் வாசிப்பை அதிகரிக்கச் செய்ய இயலும். 

தமிழில் வாசிப்பதன் மூலம் ஒருவரின் மூளைத் திறனும், வாசிக்கும் திறனும் விருத்தியடைகின்றது. அதனையே பின்னர் ஆங்கிலத்திலும் வாசித்து ஒப்பிட்டு நோக்கும் போது, இரு மொழி திறனும், இரு மொழிக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளையும் பிரித்து உணரவும் முடியும். இதனால் இரு மொழி அறிவும் நல்ல முறையில் வளரும் என்பதை பெற்றோர் - ஆசிரியப் பெருமக்கள் உணர வேண்டும்.

உலகில் எந்த மொழி பேசும் மக்களும் முதலில் தமது தாய் மொழியிலேயே வாசிக்கத் தொடங்குகின்றனர். தாய் மொழியில் கிடைக்காத பட்சத்தில் தான் பிற மொழி புத்தகங்களை வாசிக்கத் தொடங்குகின்றனர். தமிழில் வாசிப்பை அதிகப் படுத்த தமிழர்களாகிய நாம் பல மாறுதல்களைச் செய்து கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.

- தமிழ் வண்ணன்

***

0 comments :

Post a Comment