பொதுவாக பலருக்கும் பயணங்கள் மிகப் பிடிக்கும், ஆனாலும் நிறைய பேர் பயணிப்பது கிடையாது. ஏன் தெரியுமா, பயணங்களின் போது ஏற்படும் உபாதைகள் தான் காரணம். சிலருக்கு பயணங்கள் செய்ய போதிய வசதி இருக்காது, சிலரோ சோம்பல் படுவார்கள், சிலருக்கு அக்கறையே கிடையாது. ஆனால் எல்லாவற்றையும் விட பயணங்கள் என்பது இந்தியா போன்ற நாடுகளில் அத்தனை சௌகர்யமானது கிடையாது. குறிப்பாக பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள், முதியோர்கள், நோயாளிகள், உடல் சவால் மிக்கோர் என பலருக்கும் வசதியானதாகப் படுவதில்லை.

ரொம்ப தூரம் பயணிப்போருக்கு சவாலாக இருப்பது நமது தேசத்தில் போதிய கழிவறை வசதிகள் கிடையாது என்பதே. இந்தியா இந்தளவுக்கு வளர்ந்துவிட்டது என பெருமைப் பட்டுக் கொண்டாலும் கூட எங்குமே சுகாதாரமான டாய்லட்கள் என்பவை இன்றளவும் பெருங்கனவாகவே இருக்கின்றது. நானறிந்து மாநகரங்களில் உள்ள பெரும் திரையரங்குகளைத் தவிர வேறு எங்கும் முகம் சுளிக்காத அளவுக்கு இன்னமும் டாய்லட்களை பார்த்ததே இல்லை. அதிலும் கோயில்கள், பேருந்து நிலையங்கள், உணவங்கள் போன்றவைகளில் காணப்படும் டாய்லட்கள் நினைத்தாலே குமட்டுகின்றது.

முன்பு எல்லாம் சென்னையில் இருந்து திருச்சி போகும் வழியில் ரயில் தண்டவாளம் அருகே பலரும் காலை நேரத்தில் குந்திக் கொண்டு இருப்பார்கள். அவ்வளவு ஏன் சென்னை மெரினா கடற்கரையில் காலை நேரத்தில் நடைபவனி போவோர் பல தலைகள் கரைக்கும் கடலுக்கும் இடையில் குந்திக் கொண்டு இருப்பதை கண்டிருப்பர். ஒவ்வொரு முறையும் சென்னையில் இருந்து தெற்கு நோக்கி பயணிப்போருக்கு விழுப்புரத்தில் பேருந்துகள் எதாவது சாப்பாட்டுக் கடைகளில் நிற்கும் போது, அங்கே எவ்வித கூச்சமுமின்றி ஆண்கள் திறந்தவெளியில் ஒன்றுக்குப் போவதை கண்கூடாக காணலாம். பெயரளவில் சில கட்டண டாய்லட்கள் இருந்தாலும் அதன் சுகாதாரம் என்பது மகாமட்டம் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. அந்தப் பக்கம் பெண்களோ, குழந்தைகளோ போவது மிக மிக குறைவு தான்.

இந்தக் காட்சிகள் இப்போது வெகுவாக குறைந்துவிட்டன என்ற போதும், முழுமையான சுகாதார வசதிகளை பெற நாம் இன்னம் வெகு தூரம் செல்ல வேண்டி இருக்கின்றது என்பது மட்டும் உண்மையே. தமிழக அரசு அனைத்து பேருந்து நிலையங்களில் கட்டி வைத்து டாய்லட்கள் தனியார் குத்தகைக்காரர்களுக்கு கொடுக்கப்பட்டு காசு வசூலிக்கும் வியாபாரமாக மாறிவிட்டது. அப்படி காசு கொடுத்து உள்ளே சென்றாலும் பெரும்பான்மையானவை மூக்கைப் பிடித்துக் கொள்ளும் அளவுக்கு பராமறிப்பின்றி இருக்கின்றன என்பது தான் நிதர்சன உண்மை.

கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது தருமபுரி பக்கம் எனது நண்பனின் ஊருக்குப் போயிருந்தேன். நல்ல விசாலாமான வீடுகள், வயல்கள் நிறைந்த ஒரு குக்கிராமம். தென்னந்தோப்புக்கள், மாந்தோப்புக்கள் என ரம்மியமான சிற்றூர் அது. அங்கு தொலைக்காட்சி வசதிகள், கேபிள் சேனல்கள், மின்சாரம் என எல்லாமே வந்துவிட்டது. அனைவரிடமும் ஒரு மோட்டர் பைக் கூட இருந்தது என்றால் பாருங்கள். ஆனால் அங்கு சென்ற பின் மிகுந்த நேரத்துக்குப் பின் கேட்ட கேள்வி, டாய்லட் எங்கே, கொஞ்சம் பயன்படுத்தலாமா என்பது தான். ஆனால் அனைவரும் சிரித்தபடி மிகப் பெருமையாக டாய்லட் எல்லாம் கிடையாதுப்பா, அப்படியே கொல்லைப் புறப் பக்கமாக போறது தான் என்றனர். எனக்கோ மிகுந்த அதிர்ச்சி ! என்ன செய்ய மூன்று நாள்கள் வேறு வழியின்றி திறந்தவெளி புல்களைக் கழகமாக ஜீவிக்க வேண்டிய நிர்பந்தம்.

அதே போல தஞ்சாவூர் பக்கம் ஒரு கிராமத்துக்கும் சென்ற போதும், இதே நிலை தான். வேறு வழியின்றி எனது நண்பன் பள்ளிக்கூட டாய்லட்டைப் பயன்படுத்துமாறு சொன்னான். அங்கு போய் பார்த்த போது தான் தெரிந்தது திறந்தவெளியே தேவலை என்பதை. பல ஆசிரியர்கள், மாணவர்கள் புழங்கும் அந்த பள்ளியில் இருக்கும் டாய்லட்கள் கட்டப்பட்ட நாளில் இருந்து பயன்படுத்தவே இல்லை போல. கதவுகளின் தாழ்பாழ்கள் உடைந்திருந்தன, தண்ணீர் கிடையாது, பூச்சி பூராண் எல்லாம் எட்டிப் பார்த்தன.

இந்தியாவின் வளர்ச்சி கண்ட மாநிலங்களின் ஒன்றான தமிழகத்திலே இந்த நிலைமை என்றால் வடக்கே போக போக ! நிலைமை மகா மோசம் என்பதை சொல்லி உணர வேண்டியதில்லை.

உத்தர பிரதேச மாநிலம் கஞ்சன்பூர் குயியா கிராமத்தில் திருமணம் நடந்த முதல் நாளே பிரியங்கா என்ற இளம் பெண் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் வெளியேறியதற்கு முக்கிய காரணம் கணவனின் வீட்டில் டாய்லட் என்பதே இல்லை என்பது தான். டாய்லட் ஒன்றை கட்டிக் கொடுத்தால் மட்டுமே கணவர் வீட்டுக்கு வருவேன் என தெளிவாக கூறிவிட்டார். இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் சுலாப் இண்டர்நேசனல் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் அவளது கணவர் வீட்டில் ஒரு டாய்லட் கட்டிக் கொடுத்ததோடு, சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்திய பிரியங்காவை பாராட்டி இரண்டு லட்சம் ரூபாய் சன்மானமும் அளித்தது.

உலகிலேயே முதன்முதலாக டாய்லட் கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள் என்பதை அகழ்வாராய்ச்சி கூறுகின்றது. சிந்து சமவெளி நாகரிகத்தில் அமர்ந்து பயன்படுத்தப்படும் டாய்லட்கள் புழக்கத்தில் இருந்துள்ளன. குஜராத்தின் அகமதாபாத் நகரத்தில் இருந்து சுமார் 62-கிமீ தொலைவில் உள்ள லோதல் என்ற ஊரில் அதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கிமு 2500-ம் ஆண்டளவில் அங்கு வாழ்ந்த திராவிட மக்கள் டாய்லட் வசதிகளை பெற்றிருந்துள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீரைக் கொண்டு பயன்படுத்தவல்ல டாய்லட்கள் இருந்துள்ளன. அது பின்னர் ஒன்றிணைக்கப்பட்ட சுடுமண் கால்வாய்களோடு இணைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளது அந்த டாய்ல்ட்களை சுத்தப்படுத்த குழிகள், அறைகள் என்பவை கூட இருந்துள்ளன.

ஆனால் திராவிட நாகரிகம் தொய்வடைந்த பின்னர். டாய்லட்கள் என்பவை இந்தியாவின் வரலாற்றில் இருந்து அகற்றப்பட்டு விட்டது.

பின்னாட்களில் ஐரோப்பியரின் வருகையின் வரை டாய்லட்கள் பரவலாக பயன்படுத்தப்படவில்லை. இந்தியா போன்றே எகிப்து, சுமேரியா, கிரேக்கர், ரோமன் தேசங்களில் பழங்காலங்களில் கழிவறைகள் இருந்துள்ளன.

ஆனால் கிபி 500 முதல் கிபி 1500 வரையிலான காலப் பகுதிகளில் கழிவறை வசதிகள் இல்லாமல் போய் உலகம் எங்குமே திறந்தவெளியில் கழித்து வந்துள்ளனர் என்பது வியப்பான தகவல். இதேக் காலப் பகுதிகளில் மதங்கள், நிலப் பிரபுத்துவம் சார்ந்த சமூங்கள் தோன்றியும் உள்ளன.

உலகம் முழுவதுமே முறையான டாய்லட் வசதி இல்லாதோர் 250 கோடி மக்கள் எனவும். அவற்றில் 100 கோடி பேர் திறந்த வெளியில் கழித்தும் வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் இந்தியாவில் தான் உள்ளனர்.இந்தியா போன்ற ஜன நெருக்கடி மிக்க வசதிகள் குறைந்த தேசத்தில் சுகாதாரம் மற்றும் கழிவறைக் குறித்த போதிய விழிப்புணர்வு மிக மிக அவசியமாக இருக்கின்றன. ஏனெனில் இந்தியாவில் சுமார் 60 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு இன்றளவும் கழிவறை வசதிகள் கிடையாது.

தினமும் திறந்தவெளியிலேயே தமது உடல் கடன்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர். வெறும் 46.9% வீடுகளில் தான் கழிவறைகள் இருக்கின்றன. அதுவும் பிகார், ஜார்க்கண்ட், ஒரிசா போன்ற மாநிலங்களில் 75 % வீடுகளில் கழிவறைகளே கிடையாது என்பது தான் வருத்தமான உண்மையாகும். ஆனால் 75 % மக்கள் செல்பேசி இணைப்பை பெற்றிருக்கின்றனர் என்பதும் கவனிக்கத் தக்கதோர் விடயமாகும்.

இந்தியா கடந்த 20 ஆண்டுகளில் பாரிய சுகாதார திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. ஆண்டுக்கு இருபது லட்சம் பேர் டாய்லட்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர். அத்தோடு 1990-களில் 75 % மக்கள் திறந்தவெளியில் கழித்துக் கொண்டிருந்த வீதம் இன்று 51% ஆக குறைந்து வந்துள்ளது. குறிப்பாக நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் புதிய டாய்லட்களை கட்டிக் கொள்ள உதவி வருகின்றது அரசு. 2017-க்குள் திறந்தவெளியில் கழிக்கும் முறை முற்றாக ஒழிக்கப்படும் என அரசு தெரிவிக்கின்றது.

ஒவ்வொரு நாளும் இத்தகையக சுகாதாரக் குறைவுப்பாடுகளால் ஏற்படும் டயோரியா, மஞ்சள் காமாலை போன்ற நோய்களால் தினமும் ஆயிரம் குழந்தைகள் மரணிக்கின்றனர். இந்தியாவில் இருக்கும் 240, 000 கிராமங்களில் வெறும் 24, 000 கிராமங்கள் மட்டும் தான் பூரண கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் சுமார் 9 கோடியே 70 லட்சம் பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. பெரும்பாலான குடிநீர்கள் மலம் போன்றவைகளாலேயே அசுத்தமடைகின்றன. இந்தியாவின் பாதி பள்ளிகளில் முறையான டாய்லட் வசதிகளே இல்லை. பல தனியார் பள்ளிகளில் கூட ஆயிரம் மாணவர்களுக்கு ஒரு டாய்லட் என்ற நிலையே இருக்கின்றன. 

ஒவ்வொரு ஆண்டும் சுமார் இருபது கோடி டன் மலம் அகற்றப்படாமல் திறந்தவெளிகளில் விடப்படுகின்றன எனவும். ஒவ்வொரு கிராம் மலத்திலும் பத்து மில்லியன் வைரஸ்களும், ஒரு மில்லியன் பாக்டீரியாக்களும், ஆயிரம் பாராசைட் கிருமிகளும் இருக்கின்றன ஐநா சபையின் அறிக்கைக் கூறுகின்றது. 

ஒருமுறை புது தில்லியில் டாய்லட் கண்காட்சி நடந்தது. ஏகப்பட்ட விதமான, வரலாற்றுக் காலம் முதல் நவீன காலம் வரையிலாக பயன்படுத்தப்பட்ட டாய்லட்கள் குறித்த ஒரு கண்காட்சி அதுவாகும். Sublabh International Museum of Toilets என்ற இடத்துக்குப் போனால் நீங்கள் கழிவறைகள் குறித்த முழு விவரங்களையும் பெற்று பயனடையலாம்.

சில பேர் நினைக்கலாம் டாய்லட் இல்லாமல் போவதால் அப்படி என்ன சிக்கல் வந்து விட போகின்றது என. போதிய சுகாதார வசதிகளை பேணாமல் விடுவதால் மிக அதிகமான நோய்கள் பரவுகின்றன. இதனால் கழிவுகளில் இருந்து பரவும் பாக்டீரியா, வைரச், அமீபா போன்ற நுண் கிருமிகளால் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியோர்கள் என அனைவரும் வயிற்றுப் போக்கு, காய்ச்சல், நிமோனியா உட்பட பல்வேறு நோய்களை பெறுகின்றனர்.

அத்தோடு 48 % குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகளையும் பெறுகின்றனர். சிறு வயது முதலே முறையான சுகாதார அறிவையும், டாய்லட் வசதிகளையும் பெற்றிருக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி, கற்கைத் திறன்கள் ஏனையோரை விட அதிகமாகவும் இருக்கின்றன. அத்தோடு அவர்கள் அதிக வளர்ச்சியையும் பெற்றுள்ளனர் என உலக வங்கியின் சுகாதார அறிக்கை எடுத்துரைக்கின்றது.

ஆனால் நமது அண்டை நாடான சீனாவில் நம்மை விட மக்கள் தொகை அதிகம் இருந்து அங்கு வெறும் 5 சதவீதம் மக்களுக்கு மட்டுமே கழிப்பறை வசதிகள் இல்லை எனலாம். வாராணாசியில் கங்கைக் கரையோரங்களில் படையலாக்கப்பட்டுள்ள மலங்களை காணும் போது, புனிதம் எல்லாம் மண்ணாங்கட்டிகள் என சொல்லத் தோன்றும்.மகாராட்ர மாநிலத்தில் மட்டும் அரசின் உதவியோடு 1997 - 2000 ஆண்டுப்பகுதியில் 16 லட்சம் டாய்லட்கள் கட்டப்பட்டன. ஆனால் பெரும்பாலான டாய்லட்களை மக்கள் பயன்படுத்துவதே இல்லையாம். மாறாக தானியங்களை சேகரித்து வைக்கும் கிட்டங்கியாக பயன்படுத்தி வருகின்றனர் என புது தில்லியைச் சேர்ந்த உலக சுகாதார அமைப்பின் பேச்சாளர் கூறினார்.

டாய்லட்களை மக்கள் முறையாக பயன்படுத்துவதை ஊக்குவிக்க மத்திய அரசு நிர்மல் கிமார் புரஸ்கார் என்ற திட்டத்தின் கீழ் தன்னிறைவடைந்த கிராமங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகின்றது. சில ஊர்களில் கழிப்பறையை பயன்படுத்த காசும் தரப்படுவதாக செய்திகள் கூறுகின்றன. உலகில் எங்குமே இல்லாத வழக்கம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு டாய்லட்டை பயன்படுத்த மக்களுக்கு ஊக்கம் தரப்படுகின்றது. தமிழ்நாட்டின் முசிறி நகரில் டாய்லட்டை பயன்படுத்தினால் பயன்படுத்துவோருக்கு சிறிய தொகையைக் கொடுக்கின்றனர். சேகரிக்கப்படும் மலங்களை முறையாக உரங்களாக மாற்றி தோட்டங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர் தமிழ்நாடு விவசாயக் பல்கலைக் கழகத்தினர்.

இந்தியா போன்ற நாடுகளில் போதிய நீர் வசதி இல்லாமையாலும், சேகரிக்கப்படும் கழிவுகளை முறையாக அகற்றும் வசதிகள் இல்லாமையாலும், மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமையாலும் கழிப்பறைகள் என்பது கனவாகவே இருக்கின்றன. மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸின் உதவியோடு குறைந்த அளவு நீரினைப் பயன்படுத்தக் கூடிய டாய்லட்களை உருவாக்கி வருகின்றனர் சில ஆராய்ச்சியாளர்கள். சூரிய ஒளியின் துணையோடு இயங்கக்கூடிய இந்த டாய்லட்கள் பல புற நகர் மற்றும் கிராமப் புறப் பகுதிகளில் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் 75 சதவீதம் நீர்நிலைகள் மனிதர்களாலும், தொழிற்சாலைகளாலும் அசுத்தப்பட்டுள்ளன என ஒரு அறிக்கைக் கூறுகின்றது. ஒவ்வொரு இந்திய நகரங்களில் வாழ்பவர்களும் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ தினமும் நமது உணவுகளில் மலங்கள் வந்து சேர்கின்றன என மத்திய நகர்புற அமைச்சகம் கூறுகின்றது.

இந்தியாவில் மழைக் காலங்களில் விரைவாக நோய்கள் தொற்றிக் கொள்வது ஏன் என யாரும் சிந்தித்தது உண்டா. குறிப்பாக இந்தியாவிலேயேக் கூட சில மாநிலங்களில் நல்ல முறையில் கழிப்பறை வசதிகள் இருக்கின்றன. குறிப்பாக கேரளாவைச் சொல்லலாம். ஓரளவுக்கு நல்ல சூழலில் பல இடங்களில் கழிப்பறைகள் இருக்கின்றன. அங்குள்ள மக்கள் பலரும் கழிப்பறைகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதற்கு நேர்மாறாக தமிழர்கள் கழிப்பறை விடயங்களில் பின் தங்கியே இருக்கின்றனர். மெரினா கடற்கரைக்கு காலையில் சென்றுவிடாதீர்கள் ! அங்கு கடலேய கழிப்பறையாகி இருப்பதைக் கண்டு மலைத்துப் போய்விடுவீர்கள். இதே நிலை பல இந்திய மாநிலங்களில் இருக்கின்றன. வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றிலும் நல்ல முறையில் கழிப்பறைகள் இருக்கின்றன. ஆனால் வடக்கில் பல இடங்களின் நிலைமையோ தலைகீழாக உள்ளன. சென்னையில் கூட நான் பள்ளி சென்றக் காலங்களில் பலர் தெருவோரங்களில் மலம் கழித்து விட்டு போயிருப்பார்கள், அவையாவும் ஈ மொய்த்துக் கொண்டிருக்கும். மழைக் காலங்களில் அனைத்தும் ஒன்றாக கலங்கி குட்டையாக ஓடும். பல நேரங்களில் நாங்கள் டெட்டால் போட்டு காலை கழுவ வேண்டி இருக்கும். 

சொல்ல வந்ததை மறந்துவிட்டேன் பாருங்கள், இந்தியாவில் தான் கழிப்பறை வசதி இல்லாத மக்கள் உலகிலேயே அதிகம் வசிக்கின்றனர். இந்தியாவின் 58 சதவீதம் பேருக்கு கழிப்பறை வசதியே கிடையாது என்றால் பாருங்க. ஆனால் நமது அண்டை நாடான சீனாவில் நம்மை விட மக்கள் தொகை அதிகம் இருந்து அங்கு வெறும் 5 சதவீதம் மக்களுக்கு மட்டுமே கழிப்பறை வசதிகள் இல்லை எனலாம். வாராணாசியில் கங்கைக் கரையோரங்களில் படையலாக்கப்பட்டுள்ள மலங்களை காணும் போது, புனிதம் எல்லாம் மண்ணாங்கட்டிகள் என சொல்லத் தோன்றும். 

ஒரு நாடு ராக்கேட் விடுவதாலும், ஏவுகணைகள் செய்வதாலும் வல்லரசு ஆகிவிட முடியாது. எந்த ஒரு நாடு கழிவறை விடயத்தில் தன்னிறைவாகின்றதோ அது தான் என்னைப் பொறுத்தவரை வல்லரசாக இருக்க முடியும். குறிப்பாக நீங்கள் தாஜ் மகாலுக்கு செல்வீர்களானால் அதன் அருகே இருக்கும் யமுனை நதிக்கரையில் பலர் திறந்தவெளியில் மலம் கழிப்பதைக் காண முடியும். இந்தியாவுக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வரக் கூடிய தாஜ்மகாலுக்கு அருகேயே இப்படியான சூழல் என்றால் மற்ற இடங்களைப் பற்றி சொல்லவா வேண்டும். ஒழுங்காக கக்கூஸ்களைக் கட்டாமல் திறந்தவெளியில் மலம் கழித்துவிட்டு அதனை அள்ள மட்டும் ஒரு சாதியை உருவாக்கி வைத்துள்ளார்கள் நமது புத்திஜீவிகள். 

எது எப்படியானாலும் மக்கள் மனது வைத்தால் மட்டுமே கழிப்பறை சுதந்திரம் என்பது இந்தியாவுக்கு வந்து சேரும். தெருவுக்கு தெரு கோவில் கட்டுவதிலும், கூழ் ஊற்றுவதிலும் மட்டும் ஆர்வம் கொண்டால் போதாது. வீட்டுக்கு வீடு கழிப்பறை கட்ட முயல வேண்டும் என்பது எமது அவா.

- தமிழ் வண்ணன்

***

0 comments :

Post a Comment