இளமைத் துள்ளும் நவீனத் தமிழ்

ஒரு பக்கத்தில் தமிழ் மொழி ஆங்கிலத் தாக்கத்தினால் அழிவைச் சந்திக்கின்றது என்ற அச்சம் இருக்கின்ற அதே சமயம் மறுபக்கம் தமிழ் வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. சென்ற வருடம் தமிழ்நாட்டுக்கு பயணித்த போது நண்பர்கள், உறவினர்கள் பலரை வெகு காலத்தின் பின்னர் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வெளிநாட்டில் இருந்துவிட்டு திரும்பினால் ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும், தமிழ் மறந்துவிட வேண்டும் என்ற எண்ணமும் எதிர்ப்பார்ப்பும் அவர்களிடம் இருந்தது என்னை வியப்பில் ஆழ்தியது. அதுவும் முழுவதும் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள. எந்த நாடு போனாலும், எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் தாய் மொழியை மறப்பது என்பது பெற்ற தாயை மறப்பதற்கு சமம், அதனால் சாகும் வரை தமிழை மறக்க முடியாது என்றுவிட்டேன்.

ஆனால் உண்மையைச் சொல்லப் போனால் என்னுடைய தமிழ் இப்போது அதிகம் பாலிசாகிவிட்டது. முன்பு எல்லாம் தேவையில்லாத இடங்களில் கூட ஆங்கிலம் போட்டு பேசும் நான், அதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்க்கத் தொடங்கிவிட்டேன். காரணம், ஆங்கிலத்தில் முழுமையாக பல இடங்களில் பேச வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், ஆங்கிலத்தை மீண்டும் தமிழிலும் கலந்து பேச வேண்டியதொரு நிலையோ, அதனால் கிடைக்கும் கவனயீர்ப்போ தேவையற்றுப் போகின்றது. அதுவும் போகும், ஆங்கிலச் சொற்களை தமிழில் போட்டு பேசும் போது, தமிழுக்கும் மட்டுமல்ல ஆங்கில மொழிக்கும் கூட துரோகம் செய்வது போன்றதொரு குற்ற உணர்ச்சி வந்துவிடுகின்றது.

அதே சமயம் சில கலைச்சொற்கள், நவீன பயன்பாட்டுச் சொற்களை முற்றாக தமிழில் இருந்து மாற்றிவிட இயலவில்லை. ஆனால் அந்த சொற்களை தமிழில் பேசும் போது, அவை தமிழ் மயமாகிவிடுகின்றது. உதாரணத்துக்கு தமிழில் ரயில் எனவும் சொல்கின்றேன். இவ்வாறு தமிழ்மயமாக்கி சில சொற்களை பேசுவது கூட தமிழுக்கு அழகு சேர்ப்பதாகவே இருக்கின்றது. அதே சமயம் லைட் ஆப் பண்ணு என்பதை விளக்கு அணைக்கிறியா, பேட்டறி டவுன் என்பதை பேட்டறி செத்துப் போச்சு, லெஃப்ட் ரைட் என்பதை இடப்பக்கம் வலப்பக்கம் என மாற்றிப் பேசத் தொடங்கியுள்ளேன். ஆரம்பத்தில் இது ஏனோ போல அசூயைப் பட்டுக் கொண்டாலும் ஒரு சில நாட்களில் பழகிவிட்டது. ஆனால் சென்னைக்குப் போன போது பழக்கத் தோஷத்தில் இடப்பக்கமாக திரும்பு என சொன்ன போது பலரும் ஒரு சில விநாடிகள் யோசித்த பின்னரே அவர்கள் மூளைக்குள் தகவல் ஏறியிருக்க வேண்டும், ஏனெனில் நான் ஒவ்வொரு முறை இடப்பக்கம் வலப்பக்கம் என சொன்ன போது ஒருவித முகமாற்றம் பலருக்கும் வந்து போனது. ஒரே ஒரு ஆட்டோ ஓட்டுநர் மட்டும், " என்ன நைனா, இவ்வளவு சுத்தமாக தமிழ் பேசுறே, எந்த ஊரு நீ " என்றார். " சென்னை தான்" என்றேன், " நல்ல தமாஷா பேசிறியேப்பா " என்றார்.

பொதுவாக தமிழ் மொழி என்பது வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றது, சங்க காலத்தைச் சேர்ந்த ஒருவர் காலயந்திரத்தில் நுழைந்து இன்று வந்தால், நாம் பேசும் தமிழ் மட்டுமல்ல எழுதும் தமிழும் கூட அவருக்குப் புரியவே புரியாது. ஏனெனில் கடந்த நூறாண்டுகளில் ஆயிரக் கணக்கான புதிய தமிழ் சொற்களை நாம் உருவாக்கித் தள்ளியிருக்கிறோம். தொலைக்காட்சி, வானொலி, மின்சாரம், கணனி என புதிய சாதனங்கள் தொட்டு பல சொற்கள் புழக்கத்தில் கூட வந்துவிட்டது. இவற்றில் பல எழுத்தில் மட்டுமே தங்கிப் போனதற்கு, அந்த சொற்களை தீவிரமாக நடைமுறைப்படுத்த தவறியது மட்டுமே.

அதே சமயம், தமிழுக்கான இடம் என்பது இன்னம் குறையவில்லை. அது மட்டுமா, இளைஞர்கள் மத்தியிலும் தமிழ் நவநாகரிகத் தோற்றத்தோடு நுழைந்திருக்கின்றது. முன்பு எல்லாம் தீ-சட்டைகளில் ஆங்கில வாசகங்கள் தான் இடம்பெற்று வந்தன. ஆனால் சென்னையைச் சேர்ந்த ராகவ் என்ற இளைஞரால் தொடங்கப்பட்ட "அங்கி ஆடையகம்" என்ற நிறுவனம், நவநாகரிக வடிவில் தமிழ் எழுத்துக்கள், திருவள்ளுவர், ஜல்லிக்கட்டு, கரகாட்டாம், கதைக்களி, கோவில் கோபுரங்கள் என தமிழ் மொழி சார்ந்த அடையாளங்கள் பதியப்பட்ட தீ-சட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர். இது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்திருக்கின்றது.

தமிழானது இன்று வணிக மொழியாக இருப்பதை பல சந்தர்பங்கள் நங்கு நிரூபிக்கின்றன. அகமதாப்பாத்தின் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது, தொலைக்காட்சி அலைவரிசையில் ஆங்கிலம், இந்தியோடு தமிழ், தெலுங்கு, வங்காள மொழிகளில் கூட ஏர்டெல் செட்டாப் பாக்சை இயக்கும் வசதி செய்யப்பட்டு இருந்தது ஆச்சர்யபடுத்தியது. ஏர்டெல் மட்டுமல்ல இந்தியாவின் பல நிறுவனங்கள் தமிழ் மொழியில் தம் சேவைகளையும், சாதனங்களையும் வழங்கி வருகின்றன.

அதே போல அயல்நாட்டு வணிகங்கள் இந்தியாவுக்குள் நுழைகின்ற போது, உள்நாட்டு சந்தையில் இடத்தைப் பிடிக்க தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். சாம்சங் செல்பேசியில் தமிழில் இயக்கவும், தமிழில் எழுதவும் கூட உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாம்.  அது மட்டுமல்ல சாம்சங் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள மைக்ரோவேன் ஒவன், வாஷிங் மெஷின்களில் கூட தமிழில் இயக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளனவாம். சமூக வலைதளங்களான கூகிள், முகநூல் போன்றவைகள் ஏற்கனவே தமிழில் தமது சேவைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் பிரபலமான ட்விட்டரும் தமது சேவையை தமிழில் வழங்கத் தொடங்கியுள்ளது.  

ஆங்கிலம் கலந்து தமிழில் விளம்பரங்கள் மூலமாக, சில சமயம் இந்தி கலந்தும் மக்களை ஈர்க்கலாம் என பல இந்திய விளம்பர நிறுவனங்கள் முனைகின்ற இவ்வேளையில், அமெரிக்க நிறுவனமான  Godaddy என்ற இணையதள சேவை நிறுவனம், நல்ல தமிழில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டு வெகுவாக பலரை கவர்ந்துள்ளது. உள்ளூர் சந்தைகளில் கால் பதிக்க உள்ளூர் மொழிகளில் விளம்பரங்களைத் தருவதன் முக்கியத்துவத்தை பன்னாட்டு நிறுவனங்கள் நன்கு புரிந்துள்ளன. முக்கியமாக சிறுவணிகர்கள் இணையதள முகவரி வைத்திருப்பதன் தேவையை விளக்கும் Godaddy நிறுவனத்தின் விளம்பரம் பலரால் பாராட்டப்பட்டு வருகின்றது.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் குபெக் மாநிலத்திற்கு போன போது, அங்குள்ள நடைமுறை என்னை வியக்க வைத்துவிட்டது. குபெக் என்பது கனடாவில் இருக்கும் மாநிலங்களில் ஒன்றாகும். மற்ற மாநிலங்கள் ஆங்கிலம் பேசுவதாக இருக்க, இந்த ஒரு மாநிலம் மட்டும் பிரஞ்சு மாநிலமாக உள்ளது. சொல்லப் போனால் ஒரு சில கரீபியன் நாடுகளில் பிரஞ்சு இருக்கின்ற போதும், வட அமெரிக்க கண்டத்திலேயே பிரஞ்சு பேசப்படும் பெரும் மாநிலம் இதுவாகத் தான் இருக்க முடியும்.

அதுவும் பக்கத்திலேயே அமெரிக்காவின் தாக்கம், கனடாவிலோ குபெக்கை தவிர மற்ற இடங்கள் முழுவதும் ஆங்கிலம். இவ்வளவு பேராபத்தின் மத்தியிலும் குபெக்கில் பிரஞ்சு மொழி சீராக பேணப்பட்டு வருகின்றது. இத்தனைக்கும் குபெக்கில் ஒரு மொழியாக அனைவரும் ஆங்கிலத்தையும் கற்கின்றனர், பலருக்கும் ஆங்கிலம் நல்ல முறையில் பேசவும் வரும். ஆனாலும் குபெக்கின் எல்லைக்குள் நுழைந்து முதல் எங்கும் பிரஞ்சு எதிலும் பிரஞ்சு என்ற நடைமுறை நிறுவப்பட்டு உள்ளது. நீண்ட பயணத்தின் அலுப்பும், அடக்கி வைத்திருந்த சிறுநீரை கழிக்கவும் ஒரு காப்பிக்கடைக்குள் நுழைந்த அங்குள்ளவர்களிடம் வினவி போது ஆங்கிலத்தில் பேசவில்லை, அவர்கள் கூறியது என்னவென்று கூட புரியவில்லை. வேண்டும் என்றே ஆங்கிலம் பேசவில்லையா, அல்லது தெரியாதா என எனக்குத் தெரியவில்லை? இத்தனைக்கும் அந்த கடை ஆங்கிலம் பேசும் ஒண்டாரியோவின் எல்லையிலே உள்ளது. கூட வந்த நண்பர் குபெக்கில் எல்லாமும் இப்படித் தான் என்றார்.

அது மட்டுமல்ல அறிவிப்பு பலகைகள், சாலை வழிகாட்டிகள் என எங்கும் எதிலும் பிரஞ்சு மட்டுமே. ஒரு சில இடங்களில் மட்டும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்த போது எங்கும் ஆங்கிலம் எதிலும் ஆங்கிலம் ஒரு சில இடங்களில் மட்டும் தமிழிலும் எழுதப்பட்டு இருந்ததை ஒப்பிட்டு பார்த்த போது, தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தமது மொழிக்கான இடத்தை இழந்து வருகின்றார்கள் என்றே தோன்றியது. ஏன் இத்தனைக்கும் கேரளத்திலும், கருநாடகத்திலும் கூட அறிவிப்பு பலகைகளில் ஆங்கிலத்தை விட மலையாளமும், கன்னடமும் தான் இடன்பெற்றிருந்தன என்பதையும் கவனித்தேன். தமிழகத்தின் நடைமுறை மட்டும் தலைகீழாகிவிட்டது.

அண்மையில் மதுரை சந்திப்பு ரயில் நிலையத்தில் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் அங்குள்ள சிலரிடும் தனது பயணச்சீட்டைக் காட்டி எதோ கேட்டுக்கொண்டு இருந்தாராம், அந்த தகவல் பின்னர் நிலையத் தலைவரிடம் கொண்டு போகப்பட்டது. அதன் பின்னரே புரியவந்தது, அவர் பலரிடம் தனது டிக்கட்டில் அவர் போகவேண்டிய தன சொந்த ஊரான சங்கரன்கோவில் பெயர் இடம் பெற்று இருக்கின்றதா என குழப்பத்தில் தான் பலரையும் அணுகி கேட்டு இருக்கிறார். அந்த பயணச்சீட்டில் இந்தி ஆங்கிலம் இரண்டு மொழிகளில் மட்டும் தான் எழுதப்பட்டு இருந்தது. தமிழகத்தில் தமிழுக்கே இடம் இல்லாமல் போனதால் இந்தி ஆங்கிலம் வாசிக்க தெரியாதோர் பாடு திண்டாட்டத்தில் உள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு வரை அனைத்து ரயில் நிலையங்களில் வழங்கப்பட்ட பயணச்சீட்டுக்களில் தமிழ் இந்தி ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் இடம்பெற்று வந்தன. ஆனால் அதன் பின் மெல்ல மெல்ல தமிழ் ஒழிக்கப்பட்டுள்ளது. மாநில தேசிய மொழிகளில் டிக்கட் அச்சிடுவது பயணிகளுக்கு நன்மை தரும் என்பது என்னவோ உண்மை தான், ஆனால் தம்மால் என்ன செய்ய இயலும், அனைத்தையும் தில்லியில் உள்ள ரயில்வே வாரியம் தான் முடிவு செய்கின்றது என ரயில் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ரயில் நிலையங்களில் மட்டுமல்ல மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் விமான நிலையங்கள், காப்பீட்டுக் கழகங்கள், கடவுச்சீட்டு நிலையங்கள், சமையல் எரிவாயு நிலையங்கள், நெடுஞ்சாலைகள், குடியேற்றத் துறை, வேளாண் துறை, வங்கிகள் என அனைத்திலும் வேண்டும் என்றே தமிழ் உட்பட இந்தியாவின் பிற மொழிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. மாறாக இந்தி மொழி மட்டும் திணிக்கப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். 

தமிழை ஒரு பக்கம் மத்திய அரசு சிதைக்கின்றது என்றால் மறுபக்கம் நமது தனியார் ஊடகங்கள் குழிதோண்டி புதைக்கின்றன. தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள் என இந்த மூன்று ஊடகங்களுமே மக்கள் மத்தியில் அதிகம் ஊடுருவி இருக்கின்றது. இன்று தமிழ் மொழிச் சொற்கள் பல அழிந்து போனதற்கு இந்த ஊடகங்களே அதிக காரணமாகவும் இருக்கின்றன. இந்த ஊடங்கங்கள் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்காமலேயே தமிழ் ஊடகத் தொழிலில் இறங்கி செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் ஒருசில குறிப்பிட்ட சாதி சமூகத்தவரது கட்டுப்பாடுகளில் இருப்பதும் கூட தமிழ் ஊடகங்களில் ஆங்கிலம் மலிந்து போய் கிடப்பதற்கு காரணமாக அமைகின்றது.

தமிழுக்கான மவுசை புரிந்து கொண்டு அயல்நாட்டு வணிக நிறுவனங்கள் களத்தில் இறங்குகின்ற அதே சமயம், நம் நாட்டு அரசு தமிழ் மொழிக்கான இடத்தை இன்னமும் தராமல் இழுத்தடிக்குது என்றே சொல்லலாம். இந்தியாவில் இந்தி மட்டுமே இந்திய அரசின் செல்லப் பிள்ளையாக பார்க்கப்படும் சூழலில் தமிழ் உட்பட பல்வேறு தேசிய மொழிகள் மாற்றான் வீட்டு பிள்ளைகள் என்ற மனோபாவத்தில் அணுகப்படுகின்றன. தமிழ் மொழியின் தாயகமான தமிழ்நாட்டில் தமிழுக்கு இடம் இல்லையென்றால் உலகில் வேறு எங்கு போய் தமிழ் வளர்க்க போகின்றோம் சொல்லுங்கள்.

- மின் வாசகம்
***

0 comments :

Post a Comment