கடந்த மூன்று வாரங்களாக, தமிழ் நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தஞ்சாவூர், திருச்சிராபள்ளி மாவட்ட விவசாயிகள் ஜந்தர் மந்தரில் ( புது தில்லி ) போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ் நாட்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் பிரச்சனைகளை வெளிப்படுத்த மண்டை ஓடுகள், எலும்புக் கூடுகளை வைத்து போராட்டம் நடத்துகின்றனர்.

தமிழ் நாட்டில் நிலவி வருகிற மோசமான சூழ்நிலையால் தற்கொலை பண்ணி கொண்ட விவசாயிகளோட மண்டை ஓடுகள் தான் அது என அவர்கள் சொன்னார்கள். கடந்த நூறாண்டில் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள கடும் வறட்சியாலும், கூடவே கடன் சுமைகளைத் தாங்க முடியாமலும் ஒரே மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 106-க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

மத்திய அரசாங்கம் உடனடி வறட்சி நிவாரணமாக 40, 000 கோடி ரூபாயை தர வேண்டும் எனவும், தமது உற்பத்திக்கு ஏற்ற நல்ல விலையை அறிவிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோருகின்றனர். சொல்லப் போனால் வடக்கு மாநிலத்தின் ( உத்தர பிரதேசம் ) புதிய முதலமைச்சர் யோகி ஆதித்தியநாதர் அம் மாநில விவசாயிகளின் 36, 359 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது, இந்த விவசாயிகளின் கோரிக்கைக்கு வலு சேர்ப்பதாகவே உள்ளது. 

இங்கே நம் மனதில் எழும் கேள்வி என்னவென்றால் வடக்கு மாநில விவசாயிகளுக்கு உதவுகின்ற பாஜக அரசாங்கம் ஏன் தமிழ் நாட்டு விவசாயிகளிடம் மட்டும் வேறு விதமாக நடந்து கொள்கின்றது. நடுவண் அரசோ மிக எளிதாக கடன் சுமையை தள்ளுபடி செய்ய வேண்டியது மாநில அரசின் அதிகாரத்துக்குள் வருகின்றது, ஆகவே அது மாநில அரசின் கடமை என கையை விரிக்கின்றது.  

ஆனால், ஒவ்வொரு பச்சட்டிலும் நடுவண் அரசு கொண்டு வருகின்ற விவசாயக் கொள்கைகள் மாநிலங்கள் மீதும், இந்திய விவசாயிகள் மீதும் அதிக கடன் சுமையை ஏற்றிக் கொண்டே போகின்றது.

விவசாய செய்கையில் அதிகரித்து வருகின்ற உற்பத்தி செல்வுகள் தான் கடன் சுமைக்கு முதல் காரணமாகும். ஏனெனில் விதைகள், உரங்கள், உயிர்க்கொல்லி மருந்துகள், எந்திரங்கள் போன்றவற்றை சார்ந்தே விவசாயம் நடைபெறும் சூழல் எழுந்துள்ளது. கூடவே விவசாய உற்பத்து பொருட்களின் விலையும் சரிந்து வருகின்றது. விவசாயிகளுக்கு வருவாயை விட உற்பத்தி செலவு அதிகமாக இருக்கின்றது. இதனால் எதிர்மறை பொருளாதார வட்டத்துக்குள் விவசாயிகள் சிக்கிக் கொண்டுள்ளனர்.

இந்த கடன் பிரச்சனையானது பசுமை புரட்சி என்ற பெயரில் கெமிக்கல் உரங்களை கொண்டு வந்து சேர்த்ததிலிருந்து தொடங்குகியது. பசுமை புரட்சி காலக் கட்டத்தில் ஏற்பட்ட கடன் சுமையானது பொதுக் கடனாக இருந்தது. விவசாய அமைப்புகள் வருவாய் தரக் கூடிய விலைகளை அறிவிக்க கோரிக்கை வைத்தனர். அதனால், கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலை என்பதை கடைப்பிடிக்கத் தொடங்கியது அரசு. 

ஆனால், உலக மயமாதல் மற்றும் புதிய தாராளமய சீர்த்திருத்தக் கொள்கைகள் வந்த போது விவசாயக் கொள்கைகளை தீர்மானிப்பவர்களாக பன்னாட்டு கார்ப்பிரேட்டு நிறுவனங்கள் மாறின. இதனால் உற்பத்தி செலவுகள் அதிகமானது, விவசாயப் பொருட்களின் விலை வீழ்ச்சிக் கண்டது. 

காங்கூனில் ( மெக்சிக்கோ ) நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் அமைச்சர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்ட கணிப்பின் பிரகாரம் விவசாய பொருட்களின் விலை வீழ்ச்சியால் இந்திய விவசாயிகள் ஆண்டுக்கு ஏறத்தாழ 250 கோடி அமெரிக்க டாலர்களை இழந்து வருகின்றனர்.

அது ஒரு பக்கம் என்றால், அமெரிக்காவைச் சேர்ந்த வேளாண், வேளான் வேதிப் பொருள் நிறுவனமான மான்சாண்டோ அறிமுகம் செய்த பீட்டி பருத்தி விதை வழக்கு தற்போது வழக்கு மன்றத்தில் இருக்கின்றது. இந்த  நிறுவனம் அறிமுகம் செய்த மரபணு மாற்றப்பட்ட பீட்டி பருத்தி விதையை நம்பி வாங்கி பயிரிட்டதால் தெக்கண பகுதிகளைச் சேர்ந்த எண்ணற்ற விவசாயிகள் நஷ்டமடைந்தனர். 1995-யிலிருந்து தற்கொலை செய்து கொண்ட ஏறத்தாழ 3,10,000 விவசாயிகளில் நிறையப் பேர் பருத்தி பயிரையே நம்பி வாழ்ந்த தெக்கண (மராத்திய மாநிலத்தின் விதர்பா, மராத்தவாடா, தெலங்கானா, மற்றும் கருநாட்டு மாநில தாரவாடா) விவசாயிகளே ஆவார்கள். ஆனால், மான்சாண்டோ நிறுவனமோ 5, 000 கோடிக்கும் அதிகமான வருவாயை இந்தியாவிலிருந்து எடுத்துக் கொண்டு போய் விட்டது. இறுதியில் கடனில் தத்தளித்து என்னவோ இந்திய விவசாயிகள் தான்.

அதே சமயம், இந்திய விவசாயத்தின் மீதான பன்னாட்டு விதை மற்றும் கெமிக்கல் நிறுவனங்களின் தாக்குதல் வலுத்துக் கொண்டே வருகின்றது. இதற்கு பெருந்துணையாக இருப்பதோ புதிய தாராளமய பொருளாதார கொள்கைளே. காலத்துக்கும் நிலைத்து நிற்கக் கூடிய குறைந்த செலவிலான வளங்குன்றா (Sustainable) விவசாய முறைகளை ஊக்குவிக்காமல், விவசாயிகளுக்கு அதிக கடன்களை வழங்கும் திட்டங்களையே கொண்டு வருகின்றது. 2017-18 ஆண்டுக்கான பச்சட்டில் மட்டும் ஏறத்தாழ ஒரு லட்சம் கோடி ரூபாய்களை விவசாயக் கடனாக அறிவித்திருக்கின்றது இந்தியாவை ஆட்சி செய்து வரும் பாஜக அரசாங்கம். இது கடந்த பட்சட்டில் அறிவிக்கப்பட்ட 90,000 கோடி ரூபாயிலிருந்து அதிகமாக்கப்பட்டுள்ளது. 

நிச்சயம் விவசாயிகளுக்கு கடன் உதவிகள் தேவைப்படுகின்றன. ஆனால், அதே சமயம் அதிக உற்பத்தி செலவுகளைத் திணித்து அவர்களை கடன் வலைக்குள் தள்ளிவிடுவதில் என்ன நியாயம்? அதே மாதிரி, விவசாயிகளுக்கு தாம் உற்பத்தி செய்கின்ற பொருட்களுக்கு நியாயமான சரியான விலையும் தேவைப்படுகின்றது. நீடித்து நிலைத்திருக்கக் கூடிய வளங்குன்றா முறையிலான சுற்றுச்சூழல் சார்ந்த விவசாய செய்முறைகளை விவசாயிகள் மேற்கொள்ளவும், மண்ணின் வளத்தை பெருக்கவும், மாறி வரும் காலநிலைக்கும், வறட்சிக்கும் ஈடுகொடுக்கும் வகையிலான பயிர்முறைகளை செய்யவும், ஒவ்வொரு ஏக்கருக்கும் அதிக சத்து நிறைந்த, அதிக வருவாயைத் தரக்கூடிய வேளாண்மை முறைகளை கைக்கொள்ளவும் அரசு சார்ந்த பொது திட்டங்கள் உதவ வேண்டும்.

விவசாயிகளை கடன் சுமைகளிலிருந்து மீட்டு தரக் கூடிய வகையில் பொது முதலீடுகளுக்கு என எந்தவொரு பணத்தையும் பட்சட்டில் ஒதுக்கவில்லை இவர்கள். கடந்த 30 ஆண்டுகளாக நவதானியா என்றொரு அரசு சார்ப்பற்ற அமைப்பு உயிர் பன்முகத் தன்மையை காக்கவும், சூழலியல் சார்ந்த இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தவும், செலவே இல்லாத வகையில் விவசாயம் செய்து நல்ல சத்தான உணவுப் பொருட்களை இரண்டு மடங்கு உற்பத்தி செய்து, நாலு மடங்கு விவசாயிகளின் வருவாயைப் பெருக்க வல்ல விவசாய முறைகளை பரவலாக்கி வருகின்றது. 

ஒரு தனி நிறுவனத்தால் இதைச் செய்ய முடிகின்றது, ஆனால் அரசாங்கமோ விவசாயிகளின் வருவாயை இரு மடங்காக அதிகரிப்போம் என கூவுகின்ற போதும், அது விவசாயிகளின் ஒட்டு மொத்த வருவாயா, அல்லது நிகர வருவாயா என்பதில் கள்ள மௌனம் காட்டுகின்றது. ஒட்டு மொத்த வருவாய் அதிகரித்தல் என்பது விவசாயி அதிக லாபம் தரும் பணப் பயிரை அதிக கடனைப் பெற்று, தமது குடும்பத்தின் உணவு மற்றும் சத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நடத்தப்படும் ஒரு முறையாகும். இவ்வாறு செய்யப் படுகின்ற விவசாயத்தில் செலவையும் வருவாயையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது தனிப்பட்ட நிகர வருவாய் குறைவானதாகவே இருக்கும். பல சமயம், அதிக கடன் சுமையை விவசாயிகளின் தலையில் அது ஏற்றி வைத்து வைத்துவிடுவதோடு, தனிப்பட்ட நிகர வருவாய் செலவை விட குறைவானதாக இருக்கும். அப்படிப்பட்ட நிலை தான் கடன் பிரச்சனைக்கு மூல காரணமாக அமைவதோடு, விவசாயிகளின் தற்கொலைக்கு முதல் காரணமாகவும் இருக்கின்றது.

இந்த நிலையில், ஓரளவு கடன் தள்ளுபடி மட்டும் செய்வது என்பது ஓட்டை வாளியிலிருந்து வழியும் நீரை துடைத்துக் கொண்டிருப்பது போல தான் இருக்கும். நமது இன்றைய விவசாயம் சீரழிந்து போயுள்ளது. ஏனெனில், அது மண்ணின் நலத்தைப் பற்றியோ, உயிர் பன்முகத்தன்மை பற்றியோ, நீராதாரத்தைப் பற்றியோ, நமது சிறு விவசாயிகளின் நிலைத்த வாழ்வாதரத்தைப் பற்றியோ சிறிதும் கவலைப்படுவதாக இல்லை. மாறாக, அது விதைகளை விற்கும், கெமிக்கல் உரங்களை விற்கும் பெரு நிறுவனங்களின் நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளது.

எங்கெல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின் கைகள் நமது உணவு மற்றும் விவசாயத்திற்குள் நுழைகின்றதோ அங்கெல்லாம் கடன் சுமை அதிகரிப்பது நிகழ்ந்து வருவதை அனைத்து வித ஆய்வுகளும் தெளிவுப்படுத்துகின்றன.

மாற்றந்தரும் இந்திய தேசிய நிறுவனம் ( நிதி ஆயோக் ) என்கிற விவசாய நலன் காக்கும் மத்திய அரசு நிறுவனத்தை இனி கார்ப்பிரேடு நிறுவனங்களின் ஆலோசகர்களே நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நம் விவசாயிகளை மேலும் கடன் சுமைக்குள் தள்ளப் போகின்றது. 

விவசாயிகளைச் சுரண்டக் கூடிய புதிய வகை தண்டல் முறை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு விவசாயியும் பன்னாட்டு வலைப்பின்னலுக்குள் பிணைக்கப்படுவார்கள். இந்த வலைப்பின்னல் மூலமாகவே ஒவ்வொரு விவசாயியும் விதைகளைப் பெறுவது முதல் சந்தைப்படுத்தல் வரை பன்னாட்டு நிறுவனங்களை சார்ந்தே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகின்றது.

வேளாண் சூழலியல், மண் பாதுகாப்பு, நீராதார மேம்பாடு, புத்துயிரூட்டல், இனப்பெருக்கம் என விவசாயம் சார்ந்த பல துறைகளில் நமக்கு மிகச் சிறந்த பாரம்பரிய அறிவு இருக்கின்றது. அதனால் தான் நம் நாட்டில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான நெல் ரகங்களையும், 1500-ம் அதிகமான கோதுமை, மா, வாழை, பருப்பு வகைகள், மற்றும் கால்நடை ரகங்களை நம்மால் உருவாக்க முடிந்திருக்கின்றது.

ஆனால் காப்பிரேட்டு நிறுவனங்களோ நமது உணவாதாரத்தை புதிய காலனித்துவ முறைகள் மூலம், நமது அரசாங்களின் துணையோடு கொள்ளையடித்து வருகின்றன. அதற்காகவே புதிது புதிதாக கடன் முறைகளை ஏற்படுத்தி வருகின்றன.

மாண்சாண்டோ நிறுவனம் உலகின் மிகப் பெரிய காலநிலை தகவல் நிறுவனத்தையும், மண் சார்ந்த ஆய்வு நிறுவனத்தையும் வாங்கியிருக்கின்றது. சிலிக்கான வேலியில் உள்ள பல முன்னணி உளவு மென்பொருள் () நிறுவனங்களை வாங்கி, அவற்றை நவீன விவசாய கருவிகளில் பொருத்தி வருகின்றது. இதன் மூலம் விவசாயம் சார்ந்த தகவல்களைத் திருடுவதோடு, அதை மேம்படுத்தி மீண்டும் அந்த விவசாயிகளுக்கே விற்கவும் திட்டம் தீட்டு வருகின்றது.

காலநிலை சார்ந்த தகவல்களையும், காப்பீட்டு திட்டங்களையும் கொண்டு விவசாயிகளிடமிருந்து ஆண்டுக்கு மூன்று லட்சம் கோடி அமெரிக்க டாலர்களை லாபம் பார்க்க அது திட்டமிட்டு வருகின்றது. இந்த லாபம் எங்கிருந்து வரும் என்றால் விவசாயம் பொய்ப்பதிலிருந்தும், விவசாயக் கடன்களிலிருந்தும், விவசாயிகள் தற்கொலை செய்வதிலிருந்தும் தான் வரப் போகின்றது.

திருட்டுத் தனமாக நம் விவசாயிகளை விதைகள் விற்கும், கெமிக்கல் உரங்களை விற்கும், காப்பீட்டு திட்டங்களை விற்கும், காலநிலை தகவல்களை விற்கும் பன்னாட்டு பெருநிறுவங்களிடம் சிக்க வைப்பதன் மூலம் புதிய காலனித்துவத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த காலனித்துவம் மூலமாக நமது உலகமும், நமது சுதந்திரமும் முற்றாக நசுக்கப்பட்டு அழிக்கப்படும் என்பதில் துளி சந்தேகம் இல்லை.

- வந்தனா சிவா [ தமிழில் : திரு. மின் வாசகம் ]

1 comments :

    On 7 April 2017 at 03:15 விமலன் said...

    மக்களின் வரிப்பணத்திலிருந்து விவசாயிகளுக்கு கடன் வழங்குவது, அக் கடனை பெற்று அதிக லாபம் தரும் என்ற எண்ணத்தில் அவர்கள் பன்னாட்டு நிறுவனங்கள் விற்கின்ற விதைகள், உயிரிக்கொல்லி மருந்துகள், எந்திரங்களை எல்லாம் வாங்கி விவசாயத்தில் ஈடுபடுவது. அது லாபம் தராமல் நட்டமடைகின்ற போது, அந்த கடன்களை எல்லாம் விவசாயிகளின் தலையிலோ, அல்லது மாநில அரசின் தலையிலோ கட்டுவது. கொள்ளை லாபமடையும் பெருமுதலாளி நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் கொழுத்துக் கொண்டே போவது இதைத் தான் மத்திய அரசு விரும்புகின்றது.

     

Post a Comment