என்று தணியுமோ இந்த மானிட இனவெறி




இனங்களை பாகுபடுத்தி காழ்ப்புணர்ச்சியையும், வெறுப்பையும் காட்டுவதே இனவெறி எனப்படுகின்றது. எந்தவொரு மனிதனும் பிறக்கும் போதே இனவெறியாளனாக பிறப்பதில்லை, ஆனால் இந்த சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் எண்ணற்றக் காரணிகள் அவனை இனவெறியாளனாக வளர்த்தெடுக்கின்றன. மனித வரலாற்றில் பெரும்பாலான சமயங்களில் ஆட்சியாளர்களாலும்,  சமூக வழிக்காட்டிகள் என்ற பேர்வழிகளாலும் தான் இனவெறி பரப்பப்பட்டு வந்திருக்கின்றது.

டொனால்டு ட்ரம்பின் பதவியேற்பின் பின்னர், அமெரிக்கா மட்டுமில்லை கனடாவில் கூட தீவிர வலதுசாரிகளின் பேச்சிலும் செயலிலும் உத்வேகம் காணப்படுகின்றது பல்லின சமூகங்கள் வாழ்கின்ற கனடாவுக்கு அவ்வளவு நல்லதில்லை.

கடந்த ஞாயிற்றுக் கிழமை, ஜனவரி 29 அன்று கனடாவின் கூபெக் நகரில் பள்ளிவாசல் ஒன்றில் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்குத் தொழுகையில் ஈடுபட்டிருந்த ஆறு பேரை சுட்டுக் கொன்றார். இது தாக்குதலில் மேலும் 19 பேர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதல் கனடா முழுவதுமுள்ளோரை அதிர்ச்சியில் உறையச் செய்தது.

மறுநாள் "அலெக்சாண்டரே பீஸோனேட்" என்கிற 27 வயது மிக்க மாணவர் தான் குபெக் நகரில் தாக்குதல் நடத்திய நபர் என்பது தெரியவந்தது. இஸ்லாமிய மக்கள் மீது கடும் வெறுப்புணர்வை வளர்த்துக் கொண்டிருந்த இந்த நபர் பல நாள் திட்டங்களுக்கு பின் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில் இறந்தோர் அனைவரும் அப்பாவி பொது மக்கள். ஆனால், "அல்லாஹு அஃபர்" எனக் கத்திக் கொண்டே சரமாரியாகச் சுட தொடங்கியது தான் பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. இச் சம்பவம் வரலாற்றின் முக்கியமான மற்றொரு சம்பவத்தை நினைவு படுத்தியது.

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு, ஜனவரி 30-ம் நாளில் தில்லியிலிருக்கும் பிர்லா ஹவுஸ் மைதானத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மோகன்தாஸ் காந்தி அவர்களை ஒரு மர்ம நபர் சுட்டுக் கொண்டார். காந்தியை சுட்டுக் கொன்ற அந்த நபர் தம்மை ஒரு முஸ்லீம் நபரைப் போல காட்டுவதற்காகவே முஸ்லீம் போலவே உடையணிந்து, கையில் பச்சக் குத்திக் கொண்டு, சுன்னத் கூடச் செய்து கொண்டு திட்டமிட்டு இந்தப் படுகொலையை நிகழ்த்தினான். ஆனால், கைது செய்யப்பட்ட பின்னர் அவனை விசாரணை நடத்தியே போது அவன் பெயர் நாதுராம் கோட்ஸே என்பதும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு இந்து தேசியவாதி என்பதும் தெரியவந்தது.

இந்த இரு தாக்குதலின் "குறிக்கோள்" என்பது கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கின்றது. அதாவது இத் தாக்குதலின் பின்னர் பெரும் மதக் கலவரம் வெடிக்க வேண்டும், அதன் மூலம் சிறுபான்மை இஸ்லாமிய மக்களைப் பெரும்பான்மை சமூகம் வெறுத்து ஒதுக்க வேண்டும் என்பது தான்.

இத்தனை ஆண்டுக் காலம் மாறியும் உலகம் முழுவதும் வன்மமும், வன்முறையும் குறையவில்லை, மாறாக வெவ்வேறு சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கின்றது என்பதை நினைத்தால் அதிர்ச்சியடைய வைக்கின்றது. மனிதக் குலம் எந்தளவிற்கு வன்மத்தையும் வன்முறையையும் தனகுள்ளே சுமந்து கொண்டிருக்கின்றது என்பதை அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த மாதிரியான வன்முறைச் சம்பவங்கள் நமக்குத் திரும்ப திரும்ப நினைவுப் படுத்திக்க கொண்டே இருக்கின்றன.

*

ஏனெனில், இன்றைய நிலையில் உலகம் முழுவதிலுமே வலதுசாரிகள் எழுச்சி காணப்படுகின்றன. பிரான்சு, இந்தியா, இலங்கை எனப் பல நாடுகளில் வலதுசாரிகள் ஆட்சியைப் பிடித்திருக்கின்றனர். அதன் வழியிலேயே இன்று அமெரிக்காவிலும் தீவிர வலதுசாரி குணமுடைய டொனால்டு டிரம்ப் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கின்றார்.

ஆட்சிக்கு வந்த சில தினங்களிலேயே ஏழு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தோர் அடுத்த 90 நாடுகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அதிரடி தடை விதித்தது தொடங்கி அமெரிக்காவுக்குள் ஹிஸ்பானிய மக்கள் நுழைவதைத் தடுக்க மெக்சிகோ எல்லையில் பெருஞ்சுவரை எழுப்பவும், அமெரிக்காவில் வெளிநாட்டவர் குடியேற, வேலை செய்ய பல கட்டுப்பாடுகளை விதிக்கவும் பல திட்டங்களை அரங்கேற்ற இருப்பதால் உலகம் முழுவதும் இவற்றுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கின்றது.

இன்றைய நிலையில் மேற்கு நாடுகளில் எழுந்திருக்கும் இந்தத் தீவிர வலதுசாரிகள் நிலைப்பாடானது வெறும் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு நிலை மட்டுமில்லை. முஸ்லீம், யூதர், கறுப்பர், ஹிஸ்பானியர், இந்தியர், சீனர் உட்பட மற்ற குடிவரவாளர்கள், அமெரிக்க செவ்விந்திய முதற்குடிகள் எனச் சமூகத்தில் இருக்கின்ற வெள்ளையினத்தவர் அல்லாத சகல தரப்பினரையும் குறிவைத்திருக்கின்றது.

அமெரிக்காவில் காணப்படுகின்ற இனவெறியானது அதன் காலனித்துவ காலத்திலிருந்தே தொடங்குகின்றது. ஐரோப்பியர்கள் அமெரிக்க கண்டத்தை அடைந்த போது இங்கு வாழ்ந்த செவ்விந்திய முதற்குடிகளோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு வணிகத்தில் ஈடுபட்டனர். பின்னர் மெல்ல கரையோர் நிலங்களில் குடியேறினர். அதன் பின்னர் மெல்ல மெல்ல செவ்விந்தியர்களை விரட்டி ஒட்டு மொத்த கண்டத்தையும் தமதாக்கிக் கொண்டனர். அக் காலக் கட்டங்களில் ஆப்பிரிக்காவிலிருந்து கறுப்பின மக்களை மிருங்கங்களைப் போல பிடித்து வந்து அடைத்து வைத்து வேலை வாங்கினர். மெல்ல மெல்ல கறுப்பின மக்கள் கொத்தடிமை முறையிலிருந்து விடுதலை அடைந்த போதும், மாற்றின மக்கள் மீதான துவேஷமானது இன்றளவும் வெள்ளையின மக்களில் சிலரிடம் காணப்படுகின்றது என்பதை நம்மால் மறுத்துவிட முடியாது. 

*

இந்த இனவெறி என்னும் சாக்கடைக்குள் இந்தியாவொன்றும் சிக்கிக் கொள்ளாமல் இல்லை. சொல்லப் போனால் கடந்த இரண்டாயிரம் வருடங்களாக நாமும் இனவெறியை வெவ்வேறு வடிவங்களில் ஆழமாக பின்பற்றிக் கொண்டே வருகின்றோம். இன்று இந்தியாவின் பெரும்பான்மை அடையாளமாக வட இந்திய உயர்சாதி வெள்ளையின இந்துத்துவ அடையாளமே பிரதிநிதித்துவ படுத்தப்பட்டு வருகின்றது.

மேரி மார்சல் தெக்கேகரை நியு இண்டர்நேசனலிஸ்ட் சஞ்சிகையில், இனவெறியும், காழ்ப்புணர்ச்சியும், நிறவெறியும் இந்தியா எங்கும் பரவிக் கிடக்கின்றன. காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் சமூக பாகுபாடுகளையும், அறியாமைகளையும், காழ்ப்புணர்ச்சிகளையும் கொண்ட ஒருவித விசித்திரமான கலவையாகும். சமூகங்கள் சாதிகளாக தமக்குள்ளே பிரிந்து கிடக்கின்றனர், ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதைக் கூட தவிர்த்து வருகின்றனர். தமது சாதியைச் சாராதோரோடு சாப்பிடுவதோ, திருமணம் செய்வதைக் கூட தடுக்கின்றனர். என இந்திய சாதிய, இனவெறிக் குறித்து எழுதுகின்றார். 

இனவெறிகளை அகற்றுவதிலும், சமூகத்தைக் கட்டி எழுப்புவதிலும் ஊடகங்கள் பெரும் பங்காற்றக் கூடியன. ஆனால் இந்திய ஊடகங்களோ பெரும்பாலும் மேற்கத்திய கலாச்சாரங்களையும், வெள்ளை நிறத்தையும், பணக்காரர்களையும், உயர்ந்த சாதியினரையும், நகர் புறத்தவர்களையும் தான் எப்போதும் கொண்டாடுகின்றன. 

திரைப்பட நட்சத்திரங்களும், விளையாட்டு வீரர்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், பல நிறுவனங்களும் இனவெறிகளை தத்தமது திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் கூடாகவும் பரப்பி வருகின்றனர். இந்தியர்களை பொறுத்தவரை வெள்ளை நிறத்தோல் மீது தீராத மோகம் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் கறுப்பு நிறமுடையோரை கடுமையாக வெறுக்கவும் செய்கின்றனர். இவ்வாறாக இனவெறி என்பது தேசம் முழுவதும் விரவிக் கிடக்கின்றது, ஆனால் இத் தேசத்தில் எவரும் எதோ இனவெறியே இங்கு இல்லாதது போல பாவனை செய்கின்றனர்.

தென்னிந்தியர்கள் தமது தனித்துவமான உணவு பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள், உடைகள் மற்றும் நிறத்தினைக் கொண்டிருப்பதை சுட்டிக் காட்டி தில்லி, மும்பை நகரங்களில் தொடர்ந்து வெறுக்கப்பட்டு வருவதை நாம் நன்றாகவே அறிவோம். தென்னிந்தியர்கள் பலரும் மாநிறமாகவும், கறு நிறமாகவும் இருப்பதால் மதராசிகள் என்று இழிவாக அழைக்கப்படுகின்றனர். 

இந்தியாவை தமது கட்டுக்குள் வைத்திருக்கும் இந்த இனவெறி அதிகார மையமானது மற்ற இனங்களை தமது இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கின்றது. பன்முக அடையாளங்களைச் சிதைத்துவிட்டு ஒற்றை முக வட இந்திய உயர்சாதி வெள்ளையின இந்துத்துவ அடையாளத்தை நிறுவ முயல்கின்றது.

கஷ்மீரில் தம் சொந்த மண்ணிலேயே அந்நியப் படுத்தப்படும் கஷ்மீரிகள் தொடங்கி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வாழ்கின்ற மங்கோலிய இனங்களும், மத்திய இந்தியாவில் வாழ்கின்ற ஆதிவாசி சமூகங்களும் தம் மண்ணிலேயே இரும்புக் கரங்களால் அந்நியப்படுத்தப்படுவதும். இந்தியாவெங்கும் வாழ்கின்ற தலித், இஸ்லாமிய மக்களின், தென்னிந்திய தமிழ் திராவிட இனங்களின்  மொழிகள், மதங்கள், வாழ்வியல் பண்பாட்டு அடையாளங்களையும், அவை சார்ந்த சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டு உரிமைகளையும் பறித்து அந்நியப் படுத்துகின்றன.

மூன்றாண்டுகளுக்கு முன்பு தில்லியில் உள்ள ஒரு பகுதியில் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த நிடோ தனியம் என்ற 19 வயது மாணவன் இத்தகைய இனவெறி தாக்குதல்களுக்கு உள்ளாகி பலியாகினான். கடை ஒன்றில் முகவரிக்கு வழி கேட்க போன இடத்தில், கடைக்காரர்களால் நீ என்ன சீனாவில் இருந்தா வர எனவும், சிகை அலங்காரத்தையும் கிண்டல் செய்யப்பட்டுள்ளான். இது வாய்ச் சண்டையாக உருமாறி, கடைக்காரர்களால் கத்தி, கபடாக்கள் கொண்டு தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளான் நிடோ தனியம். இத்தனைக்கும் அவன் அருணாச்சல பிரதேச சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் ஆவான். 

இவ்வாறாக வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்தோர் மீது நடத்தப்பட்டு வரும் இனவெறி தாக்குதல் இது முதன் முறையுமல்ல. பெங்களூரில் லய்தம் ரிச்சர்ட், புது தில்லியில் ராம்சான்பி ஒங்கிரே, மற்றும் டானா சங்கமா என பலரும் இத்தகைய இனவெறி தாக்குதல்களுக்கு பலியாகி உள்ளனர். 

இனவெறி கருத்தால் ஏற்பட்ட பிணக்கு ஆபத்தில் முடிந்துள்ளது. மங்கோலைட் தோற்றத்தில் உள்ள ஒரு மாணவன் மீது நடத்தப்பட்ட அப்பட்டமான இனவெறி தாக்குதல் இது என்பதில் சந்தேகமே இல்லை. ஒட்டுமொத்த இந்தியாவே இப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றது என்றார். இந்தியா பல்லினங்களையும், மாறுபட்ட கலாச்சாரங்களையும், பல்வேறு மக்களையும் கொண்டுள்ள நாடாகும். இந்த தேசத்தில் தாம் சார்ந்த பகுதியை விட்டு மற்றொரு பகுதிக்கு போகும் போது ஒவ்வொருவரும் ஒருவகையிலான இனவெறித் தாக்குத்தல்களை சந்திக்க நேரிடுகின்றது என்பது தான் எதார்த்தம்.

மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் போட்டு தந்த ஆரிய சித்தாந்தத்தின் வழியே தாம் எல்லாம் ஒரே வெள்ளையின ஆரியர் என்ற நினைப்பில் இந்தியாவில் உள்ள இந்து தேசியவாதிகள் மேலை நாட்டு வெள்ளையின நிறவெறியாளர்களை வெளிப்படையாகவே ஆதரிக்கின்றனர். ஆனால், உண்மையில் உலகளாவிய வெள்ளையின நிறவெறி வட்டத்திற்குள் வடநாட்டு ஆரிய இந்து தேசியவாதம் கூட அந்நியமே என்பதை உணர மறுக்கின்றனர்.

அதனால் தான் என்னவோ அமெரிக்காவில் வாழ்கின்ற இந்தியர்களில் சிலர் டொனால்டு டிரம்பை ஆதரித்துக் கூட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அவ்வளவு ஏன் ஆளும் பாஜகவின் எம்.பி ஒருவர் டொனால்டு ட்ரம்பின் நடவடிக்கையை வெளிப்படையாகவே ஆதரித்தும் பேசியிருந்தார்.

*

அதாவது, ஒரு தேசத்தின் பெரும்பான்மை சமூகத்தின் அடையாளங்களுக்குள் வராத மற்ற சமூகத்தினரை அடக்கி ஒடுக்கி அழித்தொழிக்கும் மனப்பாங்கானது மனித சமூகத்தை பிடித்திருக்கும் ஒருவித நோய் என்றே சொல்ல முடியும்.

உலகம் முழுவதுமே அந்தந்த நாடுகளில் வாழ்கின்ற பெரும்பான்மை சமூகம் மற்ற சமூகங்களை ஏறி மிதிக்கின்றன. அதற்கு தக்கவாறு தமது சட்டங்களையும் திட்டங்களையும் வகுத்துக் கொள்கின்றார்கள்.

கடந்த ஐந்து நூற்றாண்டுகளாக உலகை தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஐரோப்பிய இனத்தவர். உலகம் முழுவதிலும் தமது சொந்த நன்மைக்காக புதிய புதிய எல்லைக் கோடுகளை வரைந்தனர். புதிய புதிய தேசங்களைப் போகிற போக்கில் உருவாக்கினார். ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் ஆண்டாண்டு காலம் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையை மாற்றி செயற்கையான ஒன்றைப் புகுத்தினர், சேர்ந்திருந்த இனங்களைப் பிரித்தனர், பிரிந்த இனங்களை வலுக்கட்டாயமாகச் சேர்த்தனர்.

அமெரிக்க கண்டத்தில் காலம்காலமாக வாழ்ந்து வந்த பல இனங்களை முற்றாக அழித்தொழித்து அந்த நிலங்கள் மீது அமெரிக்கா, கனடா போன்ற புதிய குடியேற்ற நாடுகள் உருவாக்கப்பட்டன. இந்த நாடுகள் யாவும் இந்த மண்ணிலேயே ஆண்டாண்டு காலம் வாழ்ந்திருந்த ஆதிக் குடிகளை ஒதுக்கியும், கொன்று குவித்தும் அவர்களின் ரத்தம் தோய்ந்த சதைகளின் மீது கட்டப்பட்டதாகும், அத்தோடு நின்றுவிடவில்லை ஆப்பிரிக்காவிலிருந்து, உலகின் பல பாகங்களிலிருந்தும் அடிமைகளாகவும், கூலிகளாவும் கொண்டு வரப்பட்ட எண்ணற்ற பாவ ஜீவர்களின் உழைப்பை அடடே உறிஞ்சுவது போல உறிஞ்சியே உண்டாக்கப்பட்டது. இதன் விளைவாக இன்றளவும் உலக நாடுகளில் போர்களும் பிரச்சனைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

ஆனால், அவற்றை எல்லாம் எளிதில் மறந்துவிட்டு அல்லது மிகச் சுலபமாக புறந்தள்ளிவிட்டு, எதோ இந்த காலனி நாடுகள் ஐரோப்பிய வம்சாவளியினரது பாட்டன் சொத்து போல தாமதாக்கிக் கொள்ள நினைப்பது மடத் தனம். இன்று கூட இந்த நாட்டை நோக்கி வருகின்ற, அல்லது பாலாறும் தேனாறும் ஓடுகின்ற சொர்க்க பூமி என நம்ப வைக்கப்பட்டு உள்வாங்கப்படுகின்ற ஸ்பானியர், இந்தியர் , சீனர், ஆப்பிரிக்கர், அரேபியர் என உலகின் மூன்றாம் நாடுகளிலிருந்து வருகின்ற லட்சாதி லட்ச மக்களின் உழைப்பில் தான் உயிரூட்டப்பட்ட வருகின்றன என்பதை மறந்துவிட்டனர்.

ஒரே நாளில் தாம் வாழும் மண்ணிலிருந்து அந்நியமாகிப் போவது வலிகள் நிறைந்த ஒன்றாகும். ஒரு தனி நபரோ, சமூகமோ ஏனைய பொது சமூகத்திலிருந்து அந்நியப்படுத்தப்படும் போது, அதனால் எழுகின்ற எதிர்மறை விளைவுகள் இரு சாரரையும் கடுமையாகப் பாதிக்கின்றது. தூயவாதம் பேசுகின்ற வன்மம் மிக்க எண்ணம் கொண்டோரால் வழிநடத்தப்படுகின்ற தேசங்கள் யாவும் போர்களையும் இழப்புகளையும் என்றும் சந்தித்திருக்கின்றது. அதனால் ஏற்பட்ட இழப்புக்களைச் சரிநிகர் செய்ய ஆண்டுகள் பல கடந்தும் முடியாமல் தவிக்கின்றன என்பதை மறந்து விட்டு, இன்று குடியேற்றவாசிகளை தடுத்து நிறுத்தும் டொனால்டு டிரம்பின் திட்டமானது, அமெரிக்காவின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கப் போகின்றது என்பதில் ஐயமில்லை.

- மின் வாசகம் 

0 comments :

Post a Comment