தமிழ் நாட்டிற்கு இருபத்தோராம் நூற்றாண்டு பல சவால்களை சந்திக்கும் நூற்றாண்டாக மாறியுள்ளது என்பது உண்மை தான். நமது மூதாதையர் நமக்கு விட்டுச் சென்ற இயற்க்கை வளங்களை ஒரே தலைமுறையில் அழித்துவிட்டு நிற்கின்றோம். ஒரு காலத்தில் பசுமை பூத்துக் குலுங்கிய நிலங்கள் எல்லாம் இன்று வறண்டு காணப்படுகின்றன, அவற்றில் கட்டடங்களை எழுப்பி சுற்றுச் சூழலைக் கெடுத்து மாசாக்கியதோடு, அதன் விளைவால் உடல்நலத்தைக் கெடுத்து அவதிப்படுகின்றோம். இயற்கையாக இலவசமாக கிடைத்த நீரும், காற்றும் இன்று விலைக்கு வாங்கும் நிலைக்கு வந்திருக்கின்றோம்மி.

தமிழக சமூகம் என்றுமில்லாத அளவுக்கு மாற்றங்களை கண்டு வருகின்றது, ஆனால் அதன் ஆத்மா அழிந்துவிடவில்லை. தமிழகத்தின் ஆத்மா என்றுமே தன்னிகரற்றவை, அது ஆண்டாண்டு காலம் பல்வேறு சோதனைகளுக்கு மத்தியிலும் அசராது நிமிர்ந்து நின்று கொண்டிருக்கும் ஓர் உன்னத உணர்வு. அது என்ன தமிழக ஆத்மா எனக் கேட்கலாம் ? தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு அதன் ஆத்மா தெரிவதில்லை, புரிவதில்லை, ஆனால் அது நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஆழமாய் புதைந்திருக்கின்றது. அதே சமயம் தமிழகத்தை விட்டு வெளியேறி புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொருவருக்கும் அதன் ஆத்மா எப்படி பட்டது என்பதை நிச்சயமாக உணர்வார்கள். தாயை விட்டு விலகியோருக்குத் தான் அதனருமை என்றுமே விளங்கும்.

இல்லை என்றால் உலகின் உன்னதமான மனிதர்களை இந்த நாடு மீண்டும் தன் வசம் ஈர்த்திருக்காது எனலாம். தமிழகத்தை துறந்து விட்டு போன தமிழர்களை மட்டுமல்ல, அந்நியர்களையும் என்றுமே கவர்ந்துள்ளது என்பதே வரலாறு காட்டும் உண்மை எனலாம். விரும்புவதைக் கொடுத்துள்ளது. அலக்சாண்டர் இந்த மண்ணை ஆள ஆசைப்பட்டார். ரோமானிய, கிரேக்கர்கள் நமது நாட்டின் வாசனைத்திரவியங்களுக்காக ஓடோடி வந்தனர், குடியேறினர். சீனர்களும், சாவகர்களும் வியாபாரம் செய்தததோடு நமது மதங்களையும், தத்துவங்களையும், எழுத்துக்களையும், இதிகாசங்களையும் ஏற்றுச் சென்றனர். அரேபியர்கள், துருக்கியர், முகாலயர்கள், ஐரோப்பியர் என நம் மண்ணின் வளங்களுக்காய் படை எடுத்தனர். ஏன் யாராக இருந்தாலும் இந்த நாடு அவர்கள் விரும்பும் எதனையோ தந்துள்ளது. இன்றும் தந்து கொண்டே இருக்கின்றது, இல்லை என்றால் தமிழகத்தில் வர்த்தகம் செய்ய நவ நவீன காலனித்துவவாதிகள் உலக மயம் என்ற முகமூடிக் கொண்டு நமை நோக்கி படை எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்களே. தமிழகத்தை நோக்கி பலரும் வந்து கொண்டே இருக்கின்றார்கள். அயலகத்தில் இருந்து இங்கே அடைக்கலம் வேண்டியும், படை எடுத்தும், வியாபாரத்துக்காகவும், இன்னும் என்னனென்னவோ காரணங்களுக்காக வந்தவர்களை எல்லாம் இந்த நாட்டின் ஓரங்கமாய் ஏற்றுக் கொண்ட நாடு இது. ஆனால் அதன் ஆத்மாவை உணராமல் நாம் மட்டும் மவுனிகளாக ஐம்புலன்களை தன்வயத்துக்குள் முடக்கிக் கொண்ட ஆமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். 

பக்கத்து வீட்டில் ஒருவன் பசித்திருக்கக் கூடாது என்பதற்காக கதவைத் தட்டி கஞ்சியைக் கூட பகிர்ந்துண்ணும் மான்பும், தன் மனைவியைத் தவிர மற்றவளை ஏறெடுத்து காணக் கூடாது என்ற கட்டுப்பாட்டையும், உழைக்க வக்கில்லாதவர்களைக் கூட அரவணைத்துக் கொள்ள சத்திர சாலைகளையும், வீடற்றோர் படுத்துறங்க கோவில் திண்ணைகளையும் கட்டி எழுப்பிய நாடு தான் இது. மூத்தோருக்கு மரியாதை செய்வதையும், யார் பெற்ற பிள்ளை என்றாலும் சோறூட்டி பாலூட்டி விடும் தாய்மார்களின் அன்பையும் கொண்ட நாடு இது. இன்று கூட பண்டிகை தினங்களில் சாதி, மதம் கடந்து பலகாரங்களை பகிர்ந்துண்பதையும், பக்கத்து வீட்டு வரவேற்பு அறையில் சொந்த வீடு போல எண்ணி குழுமி தொலைக்காட்சி பார்த்து கிடப்பதையும் காண முடியும். வெளிநாடுகளில் இவை எல்லாம் கனவிலும் காணக் கிடைக்காதவை. 

இத்தனை பெருமைகளை கொண்டிருந்தாலும் இந்த நாட்டின் கட்டுமானம் ஏற்றதாழ்வுகளையும், சாதியங்களையும், பாலியல் வன்முறைகளையும், இயற்கைச் சீரழிவுகளையும், உடல நலக் கேடுகளையும், மூட நம்பிக்கைகளையும் தன்னக்கத்தே கொண்டிருப்பது தான் இந்த நாட்டின் முக்கியமான சாபக்கேடாகவும் இருக்கின்றது. எதனையும் விலக்கக் கூடாது ஏற்க வேண்டும் என்ற தமிழக பண்பின் விளைவோ, அல்லது மூத்தோர் சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை ஆழப் பற்றிக் கொண்ட நமது சிந்தனை ஆக்கமோ நாம் இன்று பழமைக்கும் புதுமைக்கும் இடைநிலையில் நின்று கொண்டு அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இதன் கட்டமைப்புக்கள் குழப்பங்களையும், குழப்பங்கள் மத்தியில் எழுந்த தெளிவுகளையும் கொண்டிருக்கின்றது. இந்த நாடு தெளிவுகளையும், தெளிவுகளை தெளிவுடன் தெரியத் தவறியதால் விஞ்சி நிற்கும் குழப்பங்களையும் கொண்டிருக்கின்றது. வளர்ச்சிக்கும் அழிவுக்கும் வித்தியாசங்களை காண இயலாது குழம்பி நிற்கின்றோம். இந்த அதிர்வு நிலை நமது தமிழகத்தின் தனித்தன்மையையும், அது கட்டிக் காத்து வந்த வாழ்க்கையையும், நமது இயற்கை வளங்களையும், எண்ணங்களையும், மொழிகளையும் இழந்து விடும் பேராபத்தான நிலையின் விளிம்பில் நிற்கின்றோம்.;

இதை வாசித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரிடம் நான் வீசும் கேள்வி என்னவென்றால்? இக் கணத்தில் தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கும் மிகப் பெரிய சவால் எது என தங்களால் கூற இயலுமா? ஒன்றிரண்டு என்றால் கூறலாம் ஆனால் ஒட்டு மொத்தமாய் அடித்தளமே ஆடிக் கொண்டிருக்கும் நிலையில் எதைக் கூறுவது எதை விடுவது என்பதே நமக்கு தெரியாமல் இருக்கின்றது. 

எனக்குத் தெரிந்து சில விடயங்களை பட்டியல் இடலாம் என நினைக்கின்றேன். இந்த விடயங்கள் அனைத்தும் தனித் தனியானவை போல காட்சி தந்தாலும், இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று ஒட்டிப் பிறந்த இரட்டயர்கள் போல ரத்தமும் சதையுமாக பின்னி பிணைந்து கிடக்கின்றன. இந்த பின்னல்கள் காட்சிப்படுத்தும் சிக்கல்களே இதனை தீர்க்க முயலத் தடையாகவும் இருக்கின்றது. 

இந்த நாடு உலகின் மிக பழமையான மொழிகளையும், மதங்களையும், கலாச்சாரங்களையும், அறிவியல்களையும் கொண்டு இருப்பதில் நாம் ஒவ்வொருவரும் பெருமை அடையக் கூடிய விடயமே. இன்று மறு சுழற்சியையும், இயற்கை விவசாயத்தையும் உலக நாடுகள் மேடை போட்டு பிரச்சாரம் செய்கின்றன, ஆனால் நம் தாத்தா பாட்டி காலம் வரை இவையிரண்டும் நம் வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கமாய் இருந்தனவே.  உணவே மருந்தாய் இயற்கைக்கும் விலங்குகளுக்கும் கேடில்லாமல் உழுது உண்டு வாழ்ந்தனர். பசுமைப் புரட்சிகள் என்ற பெயரில் மேற்கில் காலாவதியான உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் மண்ணில் கொட்டி மலடாக்கினோம். இயற்கை சாயங்களை விட்டு செயற்கை சாயங்களால் ஆற்று நீரை மாசாக்கினோம், இன்னும் நொய்யல் நதி நச்சு நீரால் நிரம்பி வழிகின்றது. மண், பித்தளைப் பாத்திரங்களையும், வாழை இலை, ஓலைப் பைகளை எல்லாம் மறந்து எவர் சில்வர், பிளாஸ்டிக் என மாறி இன்று நம் மண்ணையும், நீரையும், காற்றையும் மாசாக்கி உடலையும் உள்ளத்தையும் நோய்களால் நிரப்பி வைத்துள்ளோம்.

இது வரைக் காலமும் தமிழகம் ஏற்றத் தாழ்வுகளோடு மாறி மாறி முகிழ்ந்திருந்தாலும், அதன் ஆத்மாவையும், அது வளர்த்தெடுத்த அதன் வாழ்வியலையும் நாம் முற்றாக இழந்திருக்கவில்லை. அதே சமயம் அயலகத்தில் இருந்து வந்த நல்லது கெட்டதுகளையும் சுவீகரித்துக் கொண்டோம். ஆனால், இன்று இந்த நொடியில் இந்த நாட்டின் அங்கத்தவர்களாக நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்பது தான் கேள்வியே.&nbsp

என்றும் இல்லாத அளவுக்கு ஒவ்வொரு தமிழரும் சிந்திக்கும் திறமை என்பது அதிகரித்துள்ளது. ஆனால் அச் சிந்தனையை நல்ல வகையில் எங்கு எப்படி நாட்டை நிர்மாணிப்பதற்கு பயன்படுத்துவது என்பதில் தான் முக்கிய தடைகளே இருக்கின்றன. அதாவது நம் ஒருவருக்கும் இந்த நாட்டை முன்னேற்றிக் காட்ட வேண்டும் என்ற நப்பாசை இருக்கின்றது. ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் குழப்பம் இருக்கின்றது. அந்தக் குழப்பம் நமது எண்ணத்தைக் கட்டிப் போட்டு நாட்டின் நிர்மாணத்தில் பங்கெடுக்க தடைக்கல்லாகவும் இருக்கின்றது. 

அத்தோடு நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலைகளில் அடையாளப்படுத்தப்பட்டு பிரித்து வைக்கப்பட்டுள்ளோம், நாம் ஒரு பொது நலனுக்காக ஒன்றுபடுவது என்பதே சாத்தியமில்லை என்ற நிலையில் நாம் உருவாக்கப்பட்டும் உள்ளோம். காரணம் நாம் சாதிகள், மதங்கள், வர்க்கங்கள், கல்விகள், நிறங்கள், என வகை தொகையாக பிரித்து வைக்கப்பட்டுள்ளோம். நம்மை இணைப்பது என்பது ஒன்றும் இல்லை என்பதாகவே இருக்கின்றது. 

ஆனால் சற்று சிந்தித்துப் பாருங்கள் நம்மை இணைக்க கூடிய விடயங்கள் ஒன்றுமே இல்லையா ? சற்று நேரம் சிந்தித்தாலே தெளிவு பெற்று விடலாம், நம் அனைவரையும் ஒரு சில விடயங்கள் இணைத்துக் கொண்டு தான் இருக்கின்றன. ஆம் ! நாம் நமக்கானவற்றை பெறுவதில் இருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளோம், நமக்கான அடிப்படை உரிமைகளைக் கூட அளிக்கப்படாமல் ஆட விடப்பட்டுள்ளோம், நமக்கான நாட்டில் அனைத்தும் இருந்தும், நமக்கான வாழ்க்கையை நல்ல முறையில் அமைக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருந்தும் நாம் அவற்றை பெற்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக விலக்கி வைக்கப்பட்டுள்ளோம். அந்த ஒற்றை விடயத்தில் தமிழகத்தில் 99 % மக்களும் ஒன்று பட்டே நிற்கின்றோம். 

இங்கு சிக்கல் என்னவென்றால் 99 % மக்களும் தமக்கானவற்றை பெறவும், தாம் பெற்றவற்றை தம் சகாக்கள் பெறவும் வழியும் வாய்ப்பும் இருந்தும், நாம் அவற்றை அடைய முடியாமல் வெறும் 1 % அடக்குமுறையாளர்களின் இடத்தை பெற போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றோம். அந்த 1 % பேரின் வழிநடத்தல்களில் மந்தை ஆடுகள் போல தலையாட்டிக் கொண்டிருக்கின்றோம். அவர்கள் போடும் திட்டங்களில். அவர்கள் காட்டும் திசைகளில், அவர்களின் நற்பயனுக்காக நமது அன்றாட வாழ்வியலையும், அடையாளங்களையும் தொலைத்துக் கொண்டிருக்கின்றோம். நாம் அவர்களால் கூறு போடப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். 

ஏன் அனைத்து வளமுள்ள நாட்டில் குறைந்தது 24 மணி நேரம் மின்சாரம்,நல்ல குடிநீர், சுத்தமான காற்று, மாசற்ற சுற்றுபுறம், ஆரோக்கியமான சத்தான ஆகாரங்கள் கூட கிடைப்பதில்லை. அதே சமயம் 1 % பேருக்கோ அவை தடையில்லாமல் கிடைக்கின்றது. ஏன் நாம் தரமான அடிப்படைக் கல்வியை நம் பிள்ளைகளுக்கு இலவசமாக கொடுக்க முடியாமல் 1 % பேர் உருவாக்கி வைத்திருக்கும் வியாபாரக் கல்விக்காக வரிசையில் நிற்கின்றோம், அவர்கள் நிர்ணயிக்கும் கட்டணங்களை கட்ட முடியாமல் நம் அளவுக்கு மீறி உழைத்துக் கொட்டுக்கின்றோம் என்று என்றாவது சிந்தித்து உண்டா. 

ஏன் நல்ல தட்ப வெட்பமும், இயற்கை வளமும் இருந்தும் கூட நமது சாலைகள் பாழ்பட்டுக் கிடக்கின்றன, நகரங்கள் நரங்கங்களாய் காட்சியளிக்கின்றன. அவற்றால் நாம் தேவையில்லாமல் பெறும் நோய்களும், அந்த நோய்களை குணப்படுத்த நாம் பெறும் வைத்தியங்களும், அதற்கு உண்டாகும் செலவுகளும், அச் செலவுகளை சமாளிக்கவே அடிமாட்டு ஊழியங்களுக்கு கூடுதல் உழைப்பைக் கொட்டிக் கொடுக்க வேண்டிய துர்பாக்கியங்களும் எதனால். 

உலகில் விளைச்சல் நிறைந்த மண்வளமும், வேளாண் தொழில் செய்யவே தம் ஜீவிதம் தொலைத்த பல கோடி மனிதர்களும் தினம் தினம் உணவு விலை ஏறிக் கொண்டிருப்பதால் பசியோடு தூங்கச் செல்கின்றனர். வெங்காயமும், உருளைக் கிழங்கும் கூட ஆபரண விலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இது செயற்கையாக உருவாக்கப்பட்ட போலித்தனமான விலையேற்றங்கள் என்பதை ஏன் நாம் உணர மறுக்கின்றோம். சில ஆயிரம் ரூபாய்கள் கடனைக் கூட திரும்பிச் செலுத்த இயலாத நிலையில் லட்சம் லட்சம் விவசாயிகள் தூக்கில் தொங்குவதும், விவசாயம் பொய்த்து விடுமோ என்ற அச்சத்தில் தம் மாநில தண்ணீரை தாமே அனுபவிக்க முயலும் சூழலால் மாநிலங்களுக்கு இடையிலான பூசல்களும், அதனால் ஏற்படும் பகைமைகள் நம் சகோதர மொழி மக்களையே நமக்கு விரோதிகளாக்கிவிடும் சூழலும் ஏன் எழுந்துள்ளது என்பதை சிந்தித்தது உண்டா? 

நம் நாட்டிற்காக உழைக்க அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் தேர்தல் வாக்குகள் மூலம் நாம் நியமித்தால், அவர்கள் என்னவென்றால் குட்டி ஜமீன்கள் போல இருக்கைகளில் பசைகளைத் தடவிக் கொண்டு புட்டங்களை ஒட்டிக் கொண்டு, அந்த இடங்களை தம் மக்கள், மாமன், மச்சினன் என்போருக்கு பகிர்ந்து கொண்டிருக்கின்றனரே இதை ஏன் நம்மால் தட்டிக் கேட்க முடியவில்லை. அவர்கள் நம் வேலைக்காரர்கள் அல்லவா? ஏன் நம்மை அவர்களின் கொத்தடிமைகள் போல மாற்றி விட்டுள்ளார்கள். 

நம் வீட்டுப் பெண்களுக்கும், சிறுவர், சிறுமியருக்கும் பாதுக்காப்பே இல்லையே. பச்சிளம் குழந்தை முதல் மூதாட்டி வரை கற்பழிக்கப்படுகின்றனர். நகரமோ, கிராமமோ, இரவோ, பகலோ பெண்களுக்கான பாதுகாப்பு குலைந்துள்ளதே. கற்பழிப்புகள், உடல் தீண்டல்கள், வன்பகடிகள் மலிந்து விட்டனவே. ஆண் துணையோடு போனாலும் குடல் கிழிய கற்பழிக்கப்படுகின்றாள், காதலிக்க மறுத்தால் முகத்தில் ஆசிட் வீச்சு, சுயமாய் காதலித்தால் ஊரே சேர்ந்து புணருகின்றது, காதலித்து மணந்தால் உளவியல் நெருக்கடிக்குள் உள்ளாக்கப்பட்டு பிரித்து வைக்கப்படுகின்றனர். பாடம் படிக்க பள்ளிக்கு போனால் நிர்வாண சோதனைகள், தொழில் பயில போனால் நீதிபதியோ படுக்கைக்கு அழைக்கிறான், பத்திரிக்கையாளனோ கட்டிப்பிடிக்கிறான், இவற்றை எல்லாம் விலகிச் சென்றால் உடை மாற்றும் அறையில் காமெரா வைக்கிறான், கோவிலில் பூசாரி மயக்க மருந்தை பிரசாதத்துக்குள் இட்டு வன்புணருகின்றான், ஆசிரமத்தில் கற்பழிக்கின்றான், மருத்துவமனையில் துகிலுறிந்து நிர்வாணப் படம் எடுக்கின்றான். எங்கே இந்நாடு போய் கொண்டிருக்கின்றதோ.கடைசியில் பாதிக்கப்பட்டவரை மட்டுமே குற்றவாளியாக்கின்றனர், குற்றவாளிகளை தண்டிக்க மறுக்கின்றனரே இது ஏன்?

நமக்கான நல்லதொரு குடியிருப்புக்களை அமைத்து தராமல் அதனை தனியாருக்கு விற்றுக் காசாக்கி அத் தனியார்கள் சேர்ந்து நம் நிலங்களை கொள்ளையடித்து புறாக்கூடுகளைக் கட்டி நமக்கே லட்சக் கணக்கில் விற்றுக் காசாக்கி, அதுவும் போதாது என நாம் கஞ்சிக் குடிக்கும் வேளாண் நிலங்களில் இருந்து விவசாயிகளை துரத்தி விட்டு, அந்த நிலங்களையும் பட்டா போட்டு விற்றுக் காசாக்கி நம் தலையிலேயே கட்டி விட்டுள்ளார்களே. இது ஏன் நம் மனதை உறுத்தவில்லை. 

8 கோடி மக்கள் உள்ள தேசம் என்பது ஒரு குட்டி உலகம். இந்த உலகில் உலகிலே தரமான மண் வளமும், நீர் வளமும், அதை நன்கு பயன்படுத்தவல்ல மனித வளமும் கொட்டிக் கிடக்கின்றது. ஆனால் அவற்றை முறைப்படுத்த முடியாமல் வாயில் எச்சில் ஒழுக மேற்கை நோக்கிக் கொண்டிருக்கின்றோம். ஏன் இங்கு படைப்புக்கள், புதிய கண்டுபிடிப்புக்கள் எவையும் உருவாக்கப்படுவதில்லை. 

நமது தேசியம் என்பது வெறும் கொள்ளைக்காரர்களின் கூடாரமாக இருக்கின்றதே, இவற்றை ஏன் நம்மால் தட்டிக் கேட்க இயலவில்லை. இன்று நம் வாழ்க்கையில் அனுபவிக்கு ஒவ்வொரு துன்பத்துக்கும் நம் தலைவிதியே என பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். அந்த விதியை மாற்ற கோவில் குளங்கள், சாமியார் மடங்கள் ஏறி இறங்கினால் போதும் என நாம் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளோம். 

நமது வீட்டுக் குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால், மின்சாரம் வரவில்லை என்றால், நமக்கு விசாலமான வீடுகள் இல்லை என்றால், இலவசமான உலகத் தரமான கல்வி கிடைக்கவில்லை என்றால், கற்றக் கல்விக்கு வேலை கிடைக்கவில்லை என்றால், கிடைத்த வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்றால், சாலையில் இறங்கினால் சாக்கடை ஓடுகின்றது, குப்பை நரல்களில் ஈ மொய்க்கின்றது, மாசுள்ள காற்று நம் நாசுக்களை வறளச் செய்கின்றது என்றால், மிதமான தட்ப வெட்பங்களை இழந்து சுட்டெரிக்கும் சூரியன் நல் தோலை கொதிப்படையச் செய்கின்றது என்றால், பேருந்தில் மூச்சுக் கூட விட முடியாமல் நெறிபட்டு ஆண், பெண் என்ற பேதமின்றி சதையோடு சதை ஒட்டி தன்மானம் இழந்து பயணிக்கின்றோம் என்றால், அந்த போக்குவரத்துக்கே சம்பாத்தியத்தைக் கொட்டிக் கொடுக்க வேண்டும் என்ற நிலை என்றால், இதனால் நோய் பரவுகின்றது என்றால், நோய் தீர்க்க நல்ல மருத்துவம் கிடைக்கவில்லை என்றால், இது தரும் மன அழுத்தங்களால் வாழ்வதே இயலாமல் போய் நொடிந்து ஒடிந்து இதயம் அடைத்து சாகின்றோம் என்றால் இதற்கு யார் காரணம் என சிந்தித்துப் பாருங்கள் ?!!!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் விளைவாக தமிழ்நாட்டு தண்ணீரை உறிஞ்சிக் கொண்டிருக்கும்  பெப்சி கோக் போன்ற அந்நிய பானங்களை விற்க வணிகர்கள் தடை போட்டனர். இதனால் ஓடி வந்தார் பெப்சியின் உலகலாவிய நிருவாக இயக்குனர் இந்திரா நூயி. அவர் மோடியை சந்தித்த மறுநாள் பெப்சி கோக் நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் நீரை உறிஞ்ச போடப்பட்ட தடையை நீக்கியது வழக்குமன்றம்.

தஞ்சை தரணியில் மீத்தேன் இருப்பது பல ஆண்டுகளாக பலரும் அறிந்த உண்மை தான். வயல் வெளிகளில் கொள்ளிவாய் பிசாசாக அலைவது இந்த மீத்தேன் வளி தான். ஆனால் இந்த மீத்தேனை உறிஞ்சி லாபம் பார்க்க மத்திய மாநில அரசுகள் திட்டம் போட்டே மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தனர். ஆனால் பெரு விளைச்சல் தரும் தஞ்சை தரணியில் மீத்தேன் திட்டத்திற்கு தமது பாரம்பரிய நிலங்களை தருவார்களா என்ன? அதனால் தான் கடந்த முப்பது வருடங்களாக காவிரி நீரை ஒழுங்காக வரவிடாமல் விவசாயத்தை அழித்தனர். அதற்கு அப்புறம் தான் மீத்தேன் திட்டத்தைக் கொண்டு வந்தனர். ஆனால் நினைத்தற்கு நேர்மாறாய் மீத்தேன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அத் திட்டத்தை தமிழக அரசு நிறுத்தியது.

ஆனால் அதன் பின் மத்திய அரசு அண்மையில் நீர்மகரிவன (hydrocarbon) திட்டத்திற்கு அனுமதி தந்தது. இந்தியா முழுவதும் 31 இடங்களில் நீர்மகரிவனை (hydrocarbon) தோண்டி எடுக்க 22 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் தமிழ் நாட்டின் நெடுவாசல், புதுவையின் காரைக்கால் ஆகிய இடங்களும் அடங்கும். உண்மையில் மீத்தேன் கூட ஒரு நீர்மகரிவன் (hydrocarbon) தான். பெயரை மாற்றி உள்ளே நுழைந்திருக்கின்றது மத்திய அரசு. இதற்கு தமிழ்நாட்டு அரசும் உடந்தையாகியிருக்கின்றது.

இன்று  தமிழ்நாட்டில் நீரில்லாமல் தினம் தினம் விவசாயிகள் சாகும் நிலையில், தண்ணீரைக் கொண்டுவரவல்லவா முனைப்புக் காட்டியிருக்க வேண்டும் நம் அரசியல் பிரதிநிதிகள். ஆனால், மாறாக சங்கபரிவார காவிகளோடு சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டு அரசியல் பிரதிநிதிகளளும் நெடுவாசல் நீர்மகரிவன திட்டத்தைக் கொண்டு வர உதவி நிற்கின்றனர்.

மத்திய அரசியல்வாதியர் தொடர்ந்து நீர்மகரிவன  திட்டத்தைக் கொண்டு வர முனைப்பு காட்டி வருகின்றனர். இதில் ஏன் இவ்வளவு முனைப்பு இவர்களுக்கு. ஏனெனில் இந்த நீர்மகரிவன திட்டத்தால் பயனடைய போவது ஜெம் லாபாரற்றி என்ற நிறுவனம். இந்த நிறுவனத்தை நடத்துவது பாஜகவை சேர்ந்த கருநாடக அரசியல்வாதி. அடடா ! சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

அதே சமயம் முப்போகம் விளைச்சல் தரும் தமிழ் நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கிய காவிரி மாவட்டத்தின் விவசாயம் இதனால் பாதிக்கப்படும் என்பதையோ, அதனை நம்பி வாழ்கின்ற லட்ச கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிந்துவிடும் என்பதையோ மத்திய மாநில அரசுகள் சாட்டைசெய்யவில்லை. 

ஏற்கனவே தமிழ்நாட்டை அழிக்க கூடங்குளம், நியூட்ரினோ, கெயில், மீத்தேன் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது, இப்போது இத் திட்டம் வேறு. இத்தகைய திட்டங்களால் நல்ல விளைச்சல் தரும் வேளாண் நிலங்கள் மட்டும் அழியபோவதில்லை. இத் திட்டங்களால் சுற்றுச் சூழல் மாசடையும், நிலத்தடி நீர் கெட்டு போகும், காற்றில் கலக்கும் நஞ்சால் நோய்கள் பரவும், ஒட்டு மொத்தத்தில் தமிழ்நாடே வாழத் தகுதியற்று நாசமாய் போகும்.

எண்ணூரில் பெட்ரோல் கசிவால் ஏற்பட்ட மாசைக் கூட சுத்தம் செய்ய திராணியற்ற நாடு இது. நாளை கூடங்குளத்தில் கசிவு ஏற்பட்டால், நியுற்றினோ திட்டத்தில் வெடிப்பு வந்தால் அழியப் போவது அப்பாவி பொது மக்கள் மட்டுமே. வளர்ந்த நாடான ஜப்பானின் புகுஷிமா, ரசியாவின் செர்நோபிலில் நிகழ்ந்தவைகளை எளிதில் மறந்துவிட்டோம்.

வளர்ச்சி வளர்ச்சி என்ற கோஷங்கள் மூலம் நம் நாட்டின் இயற்கை வளங்களையும், மக்களின் நலன்களையும் காலில் போட்டு மிதித்து நம்மை நம் நாட்டின் அரசே அழிவுப் பாதை நோக்கி தள்ளிவருகின்றனர். இதைப் பற்றி ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள், 

நாம் அனைவரும் சிந்திப்பதோடு நில்லாமல் குறைந்தது இனியாவது என்ன செய்யலாம் எப்படிச் செய்யலாம் நமது பிள்ளைகளாவது இந் நாட்டில் நல்ல முறையில் வாழ வழி வகை செய்ய ஒற்றுமையுடன் செயல்படுவோமாக.

- மின் வாசகம் 

0 comments :

Post a Comment