சென்னையின் மாங்காட்டு பகுதியில் பத்து வயது சிறுமியை பக்கத்து வீட்டில் வசித்து வந்த இளைஞன் ஒருவன் பாலியல் பலவந்தம் செய்து, பின்னர் அவளைக் கொன்று வீசியெறிந்த செய்தியைக் கேட்ட போது நெஞ்சம் படபடத்தது. வீட்டில் பெற்றோரில்லாத சமயத்தில் விளையாடிக் கொண்டிருந்த அச் சிறுமியிடம் நாய் குட்டியோடு விளையாடலாம் வா என உள்ளே அழைத்த அந்த கொடூரன், பச்சிளம் சிறுமி என்றும் பாராது பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கின்றான். பின்னர் அவளை கிரிக்கெட் பையில் மறைத்து கொண்டு ஆளரவமற்ற காட்டுக்குள் எரித்துவிட்டு வந்திருக்கின்றேன். அத்தோடு நின்றுவிடவில்லை, பின்னர் பெற்றோர் அச் சிறுமியைத் தேடுகின்ற போது நல்லவன் போல நடித்து காவல்துறையில் புகார் கொடுக்கவும் உதவியிருக்கின்றான். அந்த கொடூரன் எதோ சாதாரண படிப்பறிவற்ற ஒருவன் கூட இல்லை, நன்றாக படித்து ஐடி துறையில் வேலையும் பார்க்கின்றான். நல்லவன் போல இதுவரை காலமும் காட்டிக் கொண்டு வந்திருக்கின்றான். அது அண்ணனாகவோ, அப்பனாகவே யாராக இருந்தாலும் குழந்தைகளை தனியாக யாரையும் நம்பி விட வேண்டாம் என அச் சிறுமியின் தாய் கதறிக் கொண்டு அழுதக் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்த போது மனம் உறைந்து விம்மியது.

கொஞ்ச நாளைக்கு முன்னர் அரியலூரைச் சேர்ந்த நந்தினி என்ற இளம்பெண், அதே பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட தலைவர் ராஜசேகர் என்பவரால்  பாலியல் வன்படுகொலை செய்யப்பட்டார். ஆனால், இச் சம்பவமும் வெகுமக்கள் ஊடகங்களால் பத்தோடு பதினொன்றாம் செய்தியாக்கப்பட்டு மறக்கப்பட்டது. சென்ற ஆண்டு, சென்னையில் பட்டப்பகலில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். ஆனால், கொஞ்ச நாளிலேயே அதுவும்  மறக்கப்பட்டு வழக்கமான வாழ்க்கைக்கு திரும்பிவிட்டோம்.

இதற்கு முன்பு புது தில்லியில் நிகழ்ந்த நிர்பயா சம்பவம் உட்பட இந்தியக் கண்டத்தில் நடந்த பல்லாயிரக் கணக்கான சம்பவங்களை செய்தியாக்கும் ஊடகங்களின் போலித் தனங்கள் எப்படிப்பட்டது எனில் வியாபாரத்துக்காக பெண்ணுரிமை பேசிவிட்டு, அது இது எனக் குதித்து விட்டு, அடுத்த கணத்திலோ அரைநிர்வாண பெண்களின் படங்களையும், ஆபாச காட்சிகளையும் காட்டுகின்றனர். எந்த மாதிரியான கொள்கையை உடையவர்கள் இவர்கள். பெண்களை அழகியல் நோக்கில் சித்தரிப்பது என்பது வேறு, ஆனால் அவளை விற்பனை பொருளாக உடலை மட்டும் குறி வைத்து அட்டைப் படம் போடுவது, சினிமா எடுப்பது, பாடல்கள் எழுதுவது, கதைகள் எழுதுவது என சுற்றிசுற்றி அங்கேயே பிணத்தின் மீது வட்டமடிக்கும் கழுகுகளை போல வட்டமடிக்கும் இவ்வாறானவர்கள் தான் பிறிதொரு சந்தர்பங்களில் தொலைக்காட்சிகள் தோன்றியும், பத்திரிக்கைளிலும் பெண்ணுரிமை என விளம்பித் திரிகின்றனர். அல்லது பெண்கள் முக்காடு போடட்டும், வீட்டுக்குள் கிடக்கட்டும், இரவில் எதற்கு சினிமா பார்க்க போக வேண்டும், இவள் சிரித்திருப்பாள், இவள் கண்ணடித்திருப்பாள் என கதை அளக்கின்றனர்.

***

கேரள மாநிலத்தில் 1996-யில் பள்ளிக்கு போன பதினாறு வயது பெண்ணைக் கடத்திக் கொண்டு போய் காட்டுப் பங்களாவுக்குள் அடைத்து வைத்து போதை ஊசி ஏற்றப்பட்டு 40 நாட்கள் எண்ணற்ற ஆண்களால் தொடர் வன்புணர்வு செய்யப்பட்ட சூரியநெல்லி சம்பவத்தை நம்மில் எத்தனை பேர் ஞாபகம் வைத்துள்ளோம். இதில் சம்பந்தப்பட்ட அப்போதைய காங்கிரஸ் அமைச்சர் பிஜே குரியன் என்ற அரசியல்வாதி மீது என்ன நடவடிக்கையை எடுத்தார்கள். இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு 2006-ஆம் ஆண்டில், அச்சன் உறங்காத வீடு என்ற மலையாளத் திரைப்படம் வெளியானது. இத்தனைக்கு இது நடந்தது பெண்கள் மீது வன்முறை மிகவும் குறைவானதாகவும், பெண் கல்வியில் முன்னேற்றம் கண்டதாகவும் அறியப்படும் கேரள மாநிலத்தில். அங்கே அப்படி என்றால் இந்தியாவின் பிற பாகங்களில் நடப்பவைகளை எல்லாம் பட்டியலிட்டால் பூமி தாங்காது.

எண்பதுகளில் தொடங்கப்பட்ட வரதட்சணைக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கி இன்று பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டங்கள் வரை பெண்ணிய போராட்டங்கள் வளர்ந்தே வந்துள்ளது. ஆனால் அவை சாதிக்க வேண்டியவைகள் நெடுந்தூரம் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு சம்பவங்களும் சமூகத்தில் சலனத்தை உண்டாக்கியே இருக்கின்றது. 1972-யில் மதுரா பலாத்கார வழக்கு, தர்வீந்தர் கௌரின் வரதட்சணை கொலை வழக்கு, 1987-யில் ரூப் கன்வாரின் உடன்கட்டை ஏற்றப்பட்ட வழக்கு, 1992 பன்வாரி தேவி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு என பல வழக்குகளை இத் தேசம் சந்தித்து விட்டது. ஒவ்வொரு சம்பவங்களும் சட்டத்தை மாற்றச் செய்துள்ளதே தவிர சமூக கண்ணோட்டத்தை பெரிதாக மாற்றிவிடவில்லை.

வழக்கம் போல சமயத் தலைவர்கள், அரசியல் பெருசுகள் அரைத்த மாவைத் தான் அரைக்கின்றனர். பெண்கள் உடை அணிவதும், அசட்டையாக இருப்பதும் தான் பெண்கள் மீதான வன்முறைக்கு காரணம் என்கின்றனர். இத்தனை சம்பவங்களுக்கு பின்னரும் கூட சமூகத்தில் படித்த மரமண்டைகளுக்குள்ளேயே சமூகப் பிரச்சனையின் ஆணிவேரைக் கூட அசைக்கும் மாற்றுக் கருத்தை உண்டாக்க முடியவில்லையே என்பது தான் வருத்தமளிக்கின்றன.

கற்பழிக்கும் போது அண்ணா என காலில் விழுந்தால் காப்பாற்றப்பட்டு இருக்கலாமேஎன்ற உலக மகா புத்திசாலித்தனமான கருத்தை முன்மொழிந்தவரே வயது வராத பெண்களை ஆசிரமத்துக்கு அழைத்து அசிங்கம் செய்து மாட்டிக் கொண்டுள்ளார் என்ற போது, கருத்துக் கந்தசாமிகள் பலரும் கருத்து சொல்வதே எங்கே தாம் மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சம் தான் போலிருக்கு.

ஓப்பன் இதழில் வெளியான பிரியா என்ற பெண்ணின் கதையை வாசித்த போது மண்டையில் சம்மட்டியால் ஓங்கி அடித்தது போலிருந்தது. நிர்பயாவின் சம்பவத்தை கிழி கிழியென தொலைக்காட்சிகளில் கிழித்துக் கொண்டிருந்த அதே வேளையில் பிரியாவும் அவளது அண்ணனும், தகப்பனும், தாயும் கூட இருந்துள்ளார்கள். ஆனால் அதற்கு மேல் அவள் சொன்னதை வாசித்த போது நெஞ்சம் கலங்கியது. அன்றிரவே தகப்பனே அவளை பலாத்காரம் செய்துள்ளான். அது அவளது தாயுக்கும் நன்றாகவே தெரியும், ஏனெனில் பிரியா வயது வந்த நாள் முதலே இது நடக்கின்றதாம். கொடுமை என்னவெனில் அவளது அண்ணனும் அவனது இச்சையை தங்கை மூலம் நிறைவேற்றிக் கொண்டுள்ளான்.

பொருளாதார பலவீனம், சமூக கௌரவ அச்ச உணர்வு, துணைக்கு யாருமே இல்லை, குடும்பத்தை பகைத்துக் கொண்டு தனியாக வாழ் முடியுமா என்ற துர்ப்பாக்கிய நிலைகளுக்குள் முடக்கப்பட்ட அப்பாவி பெண் ஒரு நாள் கொடுமை தாங்காமல் உத்தரபிரதேச மாநில முதல்வர் நடத்தும் மக்கள் சந்திப்பு முகாமுக்கு சென்று தனது நிலையை எடுத்துக் கூறி இருக்கின்றாள். உடனடியாக விரைந்து சென்ற அரசு பெற்றோரை கைது செய்தததோடு, அவளையும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இச் செய்தி அறிந்த பின் பிரியா எதிர்பாரா வண்ணம் சமூகத்தின் பலரும் அவளுக்கு உதவ முன்வந்துள்ளனர், அவளது தைரியத்தை பாராட்டவும் செய்துள்ளனர்.

சோபா சக்தியின் ஒரு நாவலில் இதே போன்றதொரு கதைக்கருவை தமிழ் குடும்பம் ஒன்றில் நடப்பதாக சித்தரித்திருக்கின்றார். இது தான் எதார்த்தம். நாம் தான் கண்ணை மூடிக் கொண்டு ஒவ்வொரு சம்பவங்களும் எங்கோ நடப்பது போல நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோம்.  சொந்தக் குடும்பத்துக்குள் பெற்ற தந்தை, உடன்பிறந்த சகோதரன், சிற்றப்பன், பெரியப்பன்ன, மாமன், மச்சினன் தொட்டு உடன் படிப்பவன், பக்கத்துவீட்டுக்காரன், கடைக்காரன், பணியிடத்தில் பணியாற்றுவோன், முக்கியமாக உயரதிகாரிகள், ஆசிரியர்கள் என இந்த வன்கொடுமை சங்கிலியில் குற்றவாளிகளாக நல்ல பிள்ளை முகமூடி அணிந்து பலரும் உலாவி வருகின்றனர். அனைவரையும் அரசோ, ஊடகமோ கண்டறிந்து தண்டிக்கும் என கனவு காண்பது மடத்தனம். பாதிக்கப்பட்டவரும், பாதிக்கப்பட்டவருக்கு அருகில் இருப்பவரும், நாம் ஒவ்வொருவரும் குற்றம் செய்வோரின் முகத்திரையை கிழித்து தண்டனை பெற்றுதர முன்வர வேண்டும்.

தெகல்கா பத்திரிக்கையில் புதிதாக பணிக்கு சேர்ந்த இளம் பெண் மீது அந்த பத்திரிக்கையின் முதன்மை ஆசிரியரும் புகழ் பெற்றவருமான தருண் தேஜ்பாலே தகாத முறையில் நடந்த சம்பவத்தை அப் பெண் நினைத்திருந்தால் மூடி மறைத்து மனதுக்குள் புழுங்கி இருக்க முடியும். ஆனால் தமது பொருளாதாரம், கேரியர் என எதையும் பொருட்படுத்தாமல் தன்மானம் ஒன்றுக்காக முன்வந்து புகார் அளித்தார். பெண்கள் முதலில் செய்ய வேண்டியது அது தான். தன்மானத்தை இழந்து விட்டு சமூகத்துக்காக போலியான கௌரவத்தோடும், வசதியோடும் வாழ்வதை விட கேவலம் வேறு ஒன்றுமில்லை.

இதை எல்லாவற்றையும் விட பெருங்கொடுமை பெண்ணை கலியாணம் கழித்து மனைவியாக்கி விட்டால் அவள் தம் அடிமை என்ற மனோபாவம். வெளியே பிறர்த்தியாளாள் பெண்கள் அனுபவிக்கும் பாலியல் வக்கிரங்களை விட வீட்டுக்குள் அதுவும் கட்டியோனால் தரப்படும் பாலியல் வன்கொடுமைகள் என்பவை ஆயிரம் பக்கங்களுக்கு நீளும் சோகக் கதை என்பதையும் நாம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நினைத்துக் கூட பார்ப்பதில்லை.

***

நம் ஒவ்வொருவரையும் பெற்றவள் ஒரு பெண் தான். நமது வாழ்வில் சகோதரியாக, தோழியாக, காதலியாக, மனைவியாக, மகளாக வாழ்வின் இறுதி வரை நம்மைச் சுற்றி பெண்கள் நிரம்பி உள்ளனர். நம் வாழ்வின் அந்திமக் காலங்களில் கூட மனைவியாக, மகளாக ஏன் ஒரு செவிலித் தாதியாக நமது வாந்திகளை துடைத்து, மூத்திரத்தை கழுவி, மலத்தைச் சுத்தம் செய்து கவனித்துக் கொள்பவளாக இருப்பவர்களும் பெண்கள் தான்.

பல பெண்கள் திருமண பந்தத்தில் நுழைந்ததும் தமக்கான கனவு, லட்சியங்கள், உறவுகள், வாழ்க்கை முறைகள், உணவு பழக்க வழக்கங்கள் என பலவற்றையும் மாற்றிக் கொள்கின்றனர். மாதவிடாய் காலங்களில் மாத மாதம் வலிகளை சுமக்கின்றனர். கருப்பக் காலங்களில் சொல்ல முடியாத அளவுக்கு உடல் அளவிலும், உள்ள அளவிலும் துன்பத்தை அனுபவிக்கின்றனர். இப்போது எல்லாம் வேலைக்கும் போய் சம்பாதித்து பொருளாதார சுமைகளை பெண்களும் பகிர்ந்து கொள்ளத் தொடங்கிவிட்டனர்.

ஒரு பிள்ளையை பெற்றுத் தந்தும் அவளது உடல், உள்ளம், அழகு என அனைத்து சீர்குலைந்தும் விடுகின்றது. பிள்ளைப் பேற்றோடு அவளது சுமை இரட்டிப்பாகி விடுகின்றது. பிள்ளையை வளர்ப்பது, கணவன்மார்களை கவனித்து கொள்வது தொடங்கி பல பெண்கள் கணவன்மாருக்கு தொழில்களிலும் துணையாக இருக்கின்றனர். எல்லாம் போக இரவுகளில் படுக்கையையும் பகிர்கின்றனர்.

இத்தனை வலிகளையும், ரணங்களையும், தியாகங்களையும் சுமந்து கொண்டு அலையும் பெண்களை நமது சமூகம் எத்தனை வன்மத்துக்கு உள்ளாக்குகின்றன என்பதை என்றாவது ஒரு நாள் நாம் அறிந்திருக்கின்றோமா?

பெண் பிள்ளைகள் பிறந்ததுமே பலரும் ஒரு இரண்டாம் பட்ச மனோபாவத்தோடு தான் அவர்களை எதிர்நோக்குகின்றனர். காரணம் நம்மில் பலருக்கும் ஆண் பிள்ளைகள் வேண்டும், ஏனெனில் சமூகத்தில் அதிகாரம் செலுத்துவது தொடங்கி பொருளாதார வலிமைகள் உள்ளடங்கலாக அனைத்தையும் ஆண்கள் தான் அனுபவிக்கின்றோம். அதனால் தான் பெண்களை வளர்ப்பதைக் கூட பல பெற்றோர் தியாக மனோபாவத்துடன் செய்கின்றனர். அது போக ஒரு பெண் பிள்ளைக்கான குறைந்த பட்ச சுதந்திர வெளியும், பாதுக்காப்பும் மிகவும் குறைவானதாகவே இச் சமூகம் கொண்டிருக்கின்றது.

இந்த தேசத்தில் பெண் பிள்ளைகள் மீது திணிக்கப்படும் மரபு சார்ந்த நெறிமுறைகளை ஆண் பிள்ளைகள் மீது திணிப்பதில்லை. உடுத்துவது, உண்பது தொட்டு அனைத்தையும் என்றோ ஒருவன் எக்காலத்திலோ கூறி வைத்தவைகள் படியே நடத்தப்படல் வேண்டும் என நாம் நிர்பந்திக்கின்றோம். அது கூட பரவாயில்லை, பெண் பிள்ளைகளின் கல்வி, சிந்தனை போன்றவற்றில் கூட சுயமான சுயாதீனமான முடிவுகளை மேற்கொள்ள முடியாமல் திண்டாட வைக்கப்படுகின்றார்கள்.

அதனினும் கொடுமை, சமூகம் பெண்களை மிக முக்கியமான வியாபார பொருளாக மாற்றியமைத்துள்ளமை தான். சற்று சிந்தித்துப் பாருங்கள், சுதந்திரம் வாங்கி விட்டோம் என்கின்றோம், ஜனநாயக நாடு என்கின்றோம், சுமார் 60 கோடி பெண்களை உடைய இந்தியாவில் பெண்களின் சமூக பொருளாதார நிலை எந்தளவுக்கு உள்ளது என்பதை உற்று நோக்குங்கள்.

அனைத்து துறையிலும் பெண்களும் முன்னேறுகின்றார்கள் எனக் கூறிக் கொள்கின்றோம், அதாவது பெரிய மனது பண்ணி பெண்களுக்கு வாய்ப்பளித்துள்ளது போல பேசிக் கொள்கின்றோம். ஒரு லட்சம் ஆண்டுகளாக மனித சமூக பண்பாட்டு நாகரிக வளர்ச்சியில் பெண்களும் பங்காற்றி உள்ளார்கள் என்றிருக்கும் போது, அனைத்து நிலைகளிலும் பெண்கள் குறைந்தது கணிசமான பங்காவது இருக்க வேண்டாமா?

ஒன்றுமில்லை ! இந்திய பல்கலைக்கழங்களில் துணை வேந்தர்களாக எத்தனை பெண்கள் இருக்கின்றார்கள். அது கூட வேண்டாம், நமது பாராளமன்றத்தில் எத்தனை பெண் உறுப்பினர்கள் உள்ளார்கள் என எண்ணிப் பாருங்கள் மூன்றில் ஒன்று கூட கிடையாது. கடந்த முப்பது ஆண்டுகளில் ஒரு பெண் கூட பிரதமர் ஆகவில்லை. சர்வ வல்லமை படைத்த அரசியல் பொருளாதார ஜாம்பவான்களின் மகள்களாக, மனைவிகளாக, காதலிகளாக இருந்தால் மட்டுமே இந்த உயர்பதவிகளை தொட்டாவது பார்க்க இயலும் என்ற நிலை இருக்கின்றது. சுயமாக எந்த பெண்ணும் உயர் ஸ்தானங்களை அடைந்து விடும் நிலை என்பது கற்பனையிலும் இல்லை என்பது தான் நிஜம்.

சமூகத்தில் முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கும் சினிமா மற்றும் விளையாட்டுத் துறையை எடுத்துக் கொள்வோம். கடந்த 75 ஆண்டுகால இந்திய சினிமா வரலாற்றில் கதாநாயகர்களின் காமுகிகளாக மட்டுமே பெண்கள் சித்தரிக்கப்பட்டுள்ளனர். விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய படங்களே பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப் படுத்தி வந்துள்ளது, அதிலும் கூட சொற்பமான அளவுக்குத் தான் பெண் படைப்பாளிகள் பங்காற்றி உள்ளனர். குறைந்தது மூன்றில் ஒரு பங்காவது பெண்கள் பெற்றிருக்க வேண்டுமே.

பல விருதுகளை அள்ளிய பெண் வீராங்கணைகள் முகவரியே இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளனர். பெண்களால் இயலாது என்ற மனோபாவத்தை சமூகமே தீர்மானித்து, அவர்களுக்கான வாய்ப்பை அளிக்காமலேயே கதையை முடித்துள்ளனர் என்பதே எதார்த்தம்.

ஆண்களில் கூட குறிப்பிட்ட சாதிக்குத் தான் இந்த பணம் கொழிக்கும் மத, சினிமா, விளையாட்டு வியாபார பதவிகள் என்றாகிவிட்ட நிலையில் பெண்களுக்கு இடமளிப்பார்கள் என நினைப்பது வடிக்கட்டின முட்டாள் தனம் தான்.

***

இன்று நெருக்கும் பொருளாதார சுமைகளால் தான் பெண்கள் பலரும் படிக்க வைக்கப்பட்டு, வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். பெண் தான் விரும்பும் துறையில் சாதித்து வெற்றியாளனாக வளர வேண்டும் என்றால் அவள் பல்வேறு பெற்றோர், உற்றார் , உறவினர்களின் சம்மதங்களை பெற்று பல தடைக்கற்களை தாண்ட வேண்டியுள்ளது. தன்னால் சாதிக்க இயலும் என அவளே நம்ப வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை எட்டவே காலங்கள் கரைந்து விடுகின்றன. காரணம் ஆணின் நிழலில் ஆணுக்கான தாசியாக இருப்பதே பெண்களின் பிறப்பின் கடமை என்றே கற்பிக்கப்பட்டு வருகின்றனர். பொது வெளிக்கு வந்தால் பலராலு பல இடங்களிலும் பெண்களை மீண்டும் வீட்டுக்குள் திருப்பி அனுப்பவே பெருங்கும்பல்கள் தீயாக வேலை செய்கின்றன.

அவர்களில் மிகப் பெரும்பான்மையோனோர் பெண்களை பாலியல் இச்சைக்கு பலியாக்க துடிக்கின்றனர். தனது அதிகார வரம்பை பயன்படுத்தி தனக்கு கீழுள்ள பெண்களை படுக்கை அறைக்குள் வீழ்த்த வேண்டும் என்ற பாலியல் வறட்சித் தன்மை நிரம்பியே காணப்படுகின்றது. குறிப்பாக பொருளாதார பலவீனமான பெண்களால் இத்தகைய தடைகளை தாங்கிக் கொள்ள இயலுவதில்லை. ஒன்று மானத்தை விற்க வேண்டும், அல்லது பொருளாதாரத்தை இழக்க வேண்டும் என்ற நிர்பந்தத்துக்குள் உள்ளாக்கப்படுகின்றனர். இந்த நிலை பெரிய தொலைக்காட்சி சேனல்கள், பத்திரிக்கைகள் தொடங்கி உள்ளூர் ஜெராக்ஸ் கடை, துணிக்கடை வரைக்கும் நீள்கின்றது.

இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் பெண்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியவர்கள் உடனடியாக குடும்பத்தவர்கள், நண்பர்கள் தான். ஆனால் மானம் மண்ணாங்கட்டி என்ற கற்பனாவாதங்களாலும், போராடும் குணத்தை இழந்துவிட்ட சொரணைக்கெட்ட கோழைத்தனமான வாழ்வியல் சித்தாந்தகளாலும் அவர்கள் அந்த இடங்களில் நிராகரிப்பின் விளிம்புகளுக்குள் தள்ளப்படுகின்றனர். குடும்பத்தவர்கள் உதாசீனம் செய்யும் பட்சத்தில் பொது சமூகம் தான் முன் வந்து உதவ வேண்டுமல்லவா. காரணம் நாம் ஒன்றும் காட்டுமிராண்டி கால பாமரச் சமூகத்துக்குள் வாழவில்லை.

கற்றறிந்த தொலை தொடர்புகள் நிரம்பி வழிகின்ற ஜனநாயத்தையும், பகுத்தறிவையும் கொண்டிருக்கும் முன்னேற்றமான சமூகம். சமூகத்தின் அங்கத்தவர்கள் ஒருவர் பாதிக்கப்பட்டாலும் நீரில் எறிந்த கல்லால் எழுந்த அலைகள் போல அனைவரையும் அது பாதிக்கும் என்பதை உணர வேண்டும் தானே. ஆனால் இந்த பொது சமூகம் எப்படி பட்டது தெரியுமா? சுயநலமிக்கது உதவ முன்வராது உதவ முன்வரவில்லை என்றாலும் கூட பரவாயில்லை ஆழ ஆராயமல் நியாயம் பேசவும், பெண்களையே குற்றப்படுத்தவும் தொடங்கிவிடும்.

மும்பையின் காமாத்திபுராவுக்கோ, கொல்கத்தாவின் சோனாகாச்சிக்கோ போய் பார்த்தால் லட்சம் நாவல்கள் எழுதக் கூடிய அளவில் ஒவ்வொரு அபலைகளுக்கு பின்னாலும் ஆயிரம் ஆயிரம் கொடூரக் கதைகள் புதைந்திருக்கின்றன. ஆனால் நம் கண்களுக்கு தெரிவதோ பெண்ணின் உடல் மட்டுமே. அவர்களது வறுமையும், சமூக அவலங்களின் இடுக்குகளுக்குள் இடறி விழுந்து 15 வயதுக்குள்ளேயே வாழ்க்கை இழந்து தினம் தினம் குமுறிக் கொண்டிருக்கும் அப்பாவி பெண்களும் பெண்களை தேவமாதாவாக, சக்தியாக பூஜித்து பய பக்தியோடு வழிபட்டுக் கொண்டிருக்கும் இதே தேசத்தில் தான் இருக்கின்றார்கள்.  ஒரு சர்வ வல்லமை படைத்த ஜகன்மாதாவும் அவர்களின் மாதவிடாய் உதிரத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கும் ஆணாதிக்க லிங்கங்களை அறுத்துப் போட வந்த பாடில்லையே.

பிணந்தின்னி சமூகம் பெண் இறந்தாலும் புணர்ந்துவிட்டே புதைக்கும் சர்வ கொடூர மனோபாவத்தை உடைத்தெறிய இன்னும் எத்தனை அவதாரங்கள் இங்கு தோன்ற வேண்டுமோ. தோன்றும் அவதாரங்கள் கூட தம் குஞ்சுமணிகளை ஆட்டிக் கொண்டு அர்த்த ராத்திரி சாம பூஜைகள் கோரும் என்பது மட்டும் நிதர்சன உண்மை. ராணுவமே கற்பழித்தாலும் தகும் என்ற சட்டத்தை வைத்துக் கொண்டு அதற்கு எதிராகஊணுறக்கம் இல்லாமல் போராடிக் கொண்டிருக்கும் சர்மிளா போன்ற இரும்பு பெண்மணிகளின் தியாகங்கள் வீண் போகக் கூடாது. மீண்டும் ஒருமுறை முதல் பத்தியை வாசித்துப் பாருங்கள், உறங்குவோரையும், உறங்குவோர் போல நடிப்போரையும் வைத்துக் கொண்டு சமூக வளர்ச்சியையும் பெண்ணுரிமைகளையும் எவ்வாறு தான் நாம் அடையப் போகின்றோமோ.

எதோ அவ்வவ்போது ஒரு சிலரால் ஏற்படுத்தப்படும் அபாயச் சங்கு ஒலிப்புகளால் தில்லி மாணவி நிர்பயாவின் மரணத்தை போன்ற சம்பவங்களை மட்டும் முன்மொழிந்து போராடுவது போல பாசாங்கு செய்துவிடுகின்றோம். ஆனால் உண்மையில் நம் அருகே, நம் வீடுகளுக்குள் கூட நடைபெறும் குற்றங்களையும், அநியாயங்களையும் தட்டிக் கேட்கவே திராணியற்ற கோழைத்தனமான சமூகத்தில் தான் நாம் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றோம்.

- மின் வாசகம் 

0 comments :

Post a Comment