ஒவ்வொரு நொடியும் நாம் இறந்து கொண்டிருப்பதாக சொல்வார்கள். உண்மை தான் ஆனால் ஒவ்வொரு நொடி இறப்பிலும் நாம் புதியவர்களாய் பிறந்து கொண்டிருக்கின்றோம். நம்மை நாம் புதுப்பித்துக் கொண்டும் மாற்றிக் கொண்டும் இருக்கின்றோம் நம்மை அறியாமலேயே. அப்படித் தான் ஆண்டுகளும் புதிதாக பிறந்து கொண்டே இருக்கின்றன. தொடர்ந்து நீண்டுக் கொண்டிருக்கும் மனித ஆயுட்காலத்தை ஆண்டுகளாய் பிரிக்காமல் விட்டுவிட்டால் நமது வாழ்க்கை ஓட்டத்தில் ஒரு நாள் கூட நிறுத்தி நிதானித்து நமது சரி பிழைகளை எடைப் போட்டு திருத்துவதை திருத்தி விலக்குவதை விலக்கி சேப்பதை சேர்த்துக் கொள்ள மாட்டோம். அதனால் தான் புத்தாண்டு கணக்கை சமூகங்கள் ஏற்படுதிக்கொண்டுள்ளன எனலாம்.

இந்த ஆண்டு கூட சிட்னி நகரம் புத்தாண்டை வான வேடிக்கைகளோடு வரவேற்றது. அதை தொடர்ந்து ஜப்பானில் 108 முறை மணி ஒழிக்கப்பட்டு புத்தாண்டை வரவேற்றனர். சீனாவில் பாரம்பரிய சீன கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டம் அமைந்தது. ஆங்காங், சிங்கப்பூர் நாடுகளில் கோலகல வரவேற்புடன் மக்கள் புது வருடத்தை வரவேற்றனர். துபையில் உலகமே வியக்கும் வண்ணம் வான வேடிக்கைகள் கொண்டாட்டம் என உலகின் உயர்ந்த கட்டடமான புர்ஜ் துபை ஜொலித்தது. பாரிஸில் ஈபில் கோபுரமும், லண்டனில் பிக் பங்குமும் ஒளிவெள்ளத்தில் மிதந்தன. நியுயோற்கும், டொரோண்டோவும் நள்ளிரவு வரை மக்கள் கூடத்தால் நிரம்பி புத்தாண்டை வரவேற்றது. ரியோ டி ஜெனிரோ நகரத்தில் இருபது லட்சம் மக்கள் கடல்கரையோரம் குழுமி வானவேடிக்கைகளை ரசித்தபடி புத்தாண்டை வரவேற்றனர்.

புத்தாண்டு பிறந்த கதை: ஆண்டுகள் என்பது நாட்காட்டிகளை கணக்கிடும் ஒரு கற்பனை கால அளவீடுகள் தான். நமது பூமிக் கோள் சூரியனை ஒருமுறைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலப் பகுதி தான் ஆண்டுகள். அவற்றை சரியாக 365 நாட்கள் 5 மணி நேரமாக கணக்கிடுகின்றார்கள். முதன் முதலில் புத்தாண்ட்டைக் கொண்டாடத் தொடங்கியவர்கள் சுமேரியர்கள் தான். மார்ச் மாதத்தில் வரும் இளவேனில் காலத்தின் தொடக்க நாளையே அவர்கள் புத்தாண்டாகக் கொண்டாடினார்கள். 

தென்னமெரிக்கப் பழங்குடிப் பண்பாட்டை நிறுவிய அஸ்டெக் மக்களும் இதேக் காலத்தில் தான் புத்தாண்டைக் கொண்டாடினார்கள். இன்றளவும் இரானியர்களும், இந்திய அரசின் மத்திய நாட்காடியும் இதனையே பின்பற்றி வருகின்றது. இதனால் தான் இந்த காலத்தை ஒட்டி பல பண்பாடுகளை பின்பற்றும் மக்கள் புத்தாண்டுகளையும், விழாக்களையும் கொண்டாடுகின்றனர். அத்தோடு வசந்த காலத்தின் தொடக்குமும் ஆகும். நீண்ட குளிர்காலத்தில் மூழ்கி கிடந்த மரங்களும், புற்களும், பறவைகளும், விலங்குகளும் தமது சோம்பல் முறித்து சுறுசுறுப்பைத் தொடங்கும் பொழுதாக அது இருந்தது. மலர்கள் முகிழும், இலைகள் துளிர்க்கும், பசுமை நிறையும், விவசாயிகள் புதுப் பயிர் நடுவார்கள். அமெரிக்காவில் குடியேறிய மக்கள் கூட 1752 வரை மார்ச் மாதத்தில் தான் புத்தாண்டை கொண்டாடி வந்தனர். 

ஆனால் ஏன் வசந்த காலத்தை விட்டுவிட்டு பனிக் காலத்தில் போய் புத்தாண்டைக் கொண்டாடுகின்றோம் என்றக் கேள்வி பலருக்கும் இருக்கத் தான் செய்கின்றது. 

ஜூலியன் காலண்டர்:முதன்முதலில் குளிர்க்காலத்தின் மத்தியில் புத்தாண்டைக் கொண்டாட நினைத்தவர்கள் ரோமர்கள் தான். அவர்கள் கூட ஆரம்பத்தில் மார்ச் மாதத்தில் தான் புத்தாண்டு விழா எடுத்தார்கள். ஆனால் ஜூலியஸ் சீசரின் ஆட்சிக் காலத்தில் ஜனவரி மாததத்துக்கு புத்தாண்டை மாற்றிவிட்டார். அத்தோடு தொடக்கத்துக்கும், முடிவுக்குமான பெண் தெய்வமான ஜானஸின் பெயரை அம் மாதத்துக்கு சூட்டவும் செய்தார். அதற்கான தக்க காரணம் தெரியவில்லை. 

ஜூலியஸ் சீசரின் காலத்தில் ரோமானியர்கள் சந்திர நாட்காட்டியை பின்பற்றி வந்தனர். ஆனால் சந்திர நாட்காட்டி துல்லியமானது அல்ல. அதன் படி ஆண்டுகளையும், காலத்தையும் கணித்த ரோமானியர்களுக்கு பருவ காலத்தை கணிப்பதில் சிக்கல் எழுந்தது. ஆனால் எகிப்துக்கு படை எடுத்த சீசர் கிளியோபட்ராவின் கணியர்கள் பின்பற்றி வந்த சூரிய நாட்காட்டியை அறிந்து வியந்து போனார். அதன் படி 365 நாட்கள் உள்ளதையும், பருவ காலங்களை துல்லியமாக கணக்கிட முடிவதையும் உணர்ந்தார். 

அதனைப் பின்பற்றி சீசரும் சூரிய நாட்காட்டியை ஐரோப்பாவுக்கு கொண்டு சேர்த்தார். அத்தோடு பனிக்காலத்தில் வரும் சம இரவு நாட்களைக் கணக்கில் கொண்டு குளிர்காலத்தின் மத்தியில் புத்தாண்டையும் தொடக்கினார். ஆனால் ஒவ்வொரு ஆண்டு என்பது 365 நாட்கள், 5 மணி நேரம் 48 நிமிடம் 46 நொடி என்பதாக இருப்பதால். ஒவ்வொரு 130 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு தினத்தை சேர்த்துக் கொண்டு வந்தார்கள். ஆரம்பத்தில் சிக்கல் இல்லாமல் போய் கொண்டிருந்த இக் கணக்கு ஆயிரம் ஆண்டுகள் கழிந்ததும் குழப்பத்தை தரத் தொடங்கியது.

கிரகோரியன் காலண்டர்: இதனைக் கவனித்த போப் கிரிகோரி 1582-யில் ஒரு தீர்வைத் தந்தார். அதன் படி ஒவ்வொரு நான்கு ஆண்டுக்கு ஒருமுறை ஒரு நாளை சேர்த்துவிட்டார். அதனை லீப் ஆண்டு என்றும் அழைத்தனர்.

மிகச் சரியாகக் கணக்கிட்டால் சூரியனை பூமி ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாள் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடி ஆகின்றது. இந்த அடிப்படையில் நாம் ஆணடைக் கணக்கிட்டுக் கொள்ள் முடியாது. ஆகவே முழு எண்களாக 365 என்று வைத்துக் கொண்டுள்ளோம். நமது காலண்டர் அவ்விதமாகத் தான் உள்ளது. ஆனால் இந்த கூடுதல் நேரத்தை (5 மணி 48 நிமிம், 46 வினாடி) கணக்கில் கொள்ளாமல் விட்டு விட்டால் அது சேர்ந்து கொண்டே போய் பிரச்சனையை உண்டாக்கும். அதாவது அக்கினி நட்சத்திரம் மே மாதத்தில் (சித்திரை மாதம்) வருவதற்குப் பதில் ஜூன், ஜூலை மாதங்களில் வர ஆரம்பிக்கும்.

ஆகவே நமது காலண்டரும் இயற்கையும் ஒத்துப் போக வேண்டும். இதைக் கருதித்தான் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை (நான்கினால் வகுபடுகின்ற ஆண்டுகளில்)  கூடுதலாக ஒரு நாளைச் சேர்த்துக் கொண்டார்கள். லீப் வருடத்தில் பிப்ரவரியில் 28 நாட்களுக்குப் பதில் 29 நாட்கள் என்று வைத்துக் கொண்டார்கள். அப்படி ஒரு நாளைச் சேர்த்துக் கொண்டாலும் கணக்கு சரியாக வருவதில்லை.

லீப் வருடம் தெரியுமா?: ஏனெனில் நாம் கூடுதலாக 11 நிமிடம் 14 வினாடியை சேர்த்துக் கொண்டு விடுகிறோம். கணக்குப் பார்த்தால் இது 100 ஆண்டுகளில் 18 மணி 43 வினாடி ஆகிவிடுகிறது.  ஆகவே 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் வருடம் கிடையாது.

அப்படிச் செய்தாலும் கணக்கு உதைக்கிறது. 5 மணி 17 வினாடி குறைந்து போய்விடுகிறது. ஆகவே 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுதலாக ஒரு நாளைச் சேர்த்துக் கொள்கிறோம். 1600 ஆம் ஆண்டு லீப் வருடமாக இருந்தது. ஆனால் 1700, 1800 மற்றும் 1900 ஆம் ஆண்டுகள் லீப் வருடங்கள் இல்லை. 2000 ஆண்டு லீப் வருடமாக இருந்தது. 2004 மற்றும் 2008 ஆம் ஆண்டுகள் லீப் வருடங்களே. அதேபோல் 2012 ஆம் ஆண்டும் லீப் வருடமே.

இந்த மாற்றத்தை கத்தோலிக்க நாடுகள் ஏற்றுக் கொண்டன, ஆனால் பிரிட்டன் உட்பட பிரிவினைவாத கிறித்தவ நாடுகள் 1752-யில் தான் அதனை ஏற்றுக் கொண்டது. அத்தோடு மார்ச் மாத புத்தாண்டை ஜனவரிக்கும் மாற்றியது. அதனையே இந்தியா உட்பட தமது காலனி நாடுகளுக்கும் பரப்பியது. இதனால் தான் இன்று குளிர்க்கால மத்தியில் நாம் புத்தாண்டைக் கொண்டாடுகின்றோம். 

பழைய வைதிக கிறித்தவ நாடுகள் கூட இன்று ரோமன் காலண்டருக்கு மாறிவிட்டன. ஆனால் ரசியா உட்பட கிழக்கு ஐரோப்பாவில் ஜனவரி 14 புத்தாண்டாக இருக்கின்றது. தமிழகத்தில் கூட ஜனவரி 14-ம் தேதியே புத்தாண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இரான், இந்தியாவின் பல மாநிலங்கள், தென் கிழக்காசியா என பல நாடுகளில் மார்ச்- ஏப்ரல் மாதத்தில் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர்.

உலக புத்தாண்டு பிறந்து விட்டது: பொதுவாக இன்று நம் நாட்டில் உள்ளோர் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் புத்தாண்டை ஆங்கிலப் புத்தாண்டு எனக் கூறுகின்றனர். இதனை மேற்கு நாடுகளில் உள்ளோரிடம் கூறினால் கண்டிப்பாக சிரிப்பார்கள். ஏனெனில் உலகின் மிகப் பெரும்பான்மையான நாடுகளில் இப் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். இது ரோமில் அறிமுகப் படுத்தப்பட்ட கிரிகோரியன் காலண்டரின் அடிப்படையில் வருவதாகும். அதுவும் சிலர் கிறித்தவ புத்தாண்டு என்கின்றனர். கிறித்தவர்களுக்கு முந்தைய ஜூலியஸ் சீசரின் காலத்திலேயே இப் புத்தாண்டு நடைமுறைக்கு வந்துவிட்ட பின் எப்படி இது கிறித்தவ புத்தாண்டு என கூறமுடியும். 

இன்று இப் புத்தாண்டு தினத்தை ஜப்பான், தாய்லாந்து, துருக்கி போன்ற நாடுகளும் ஏற்றுக் கொண்டு கொண்டாடுகின்றனர். உலகளாவிய வகையில் பன்னாட்டு புத்தாண்டு தினமாக இதனை மனிதர்கள் ஏற்றுக் கொண்டும் விட்டனர். தயவு செய்து இதனை ஆங்கிலப் புத்தாண்டு என மடத்தனமாக வாழ்த்துரைப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள். 

கொண்டாட்டங்கள் மிக அவசியம், பழங்குடி சமூக காலந்தொட்டு கொண்டாட்டங்கள் உண்டு. ஆனால் கொண்டாட்டங்கள் உறவுகளை வளர்ப்பதில், உள்ளத்தையும் உடலையும் குதூகலப்படுத்தியும் கேடு விளைவிக்காமலும் இருக்க வேண்டும். ஆனால் புத்தாண்டு என்பதை இன்று குடிக்க, ஆட சம்பிரதாய வாழ்த்துரைக்க மட்டுமே பயன்படுத்துவது வேதனை தருவன. அதே போல உலகம் பூராவும் உள்ள மக்களில் பெரும்பான்மையானோர் புத்தாண்டு தினத்தில் புத்தாண்டு சபதங்கள் ஏற்பதை சம்பிரதயமாக்கிக் கொண்டு விட்டனர். ஆனால் பெரும்பான்மையானோர் முதல் மாதம் முடியும் போதே அவற்றை கைவிட்டு விடுவார்கள். என்னைக் கேட்டால் நமது திட்டங்களை சுருக்கமாகவும், நடைமுறை எதார்த்தத்துக்கும் உட்பட்டதாய் வகுத்துக் கொள்வதே சிறந்தது.

முக்கியமாக உடல்நலம், பொருளாதாரம், உறவுகள், மகிழ்ச்சி போன்றவற்றில் அதிக நேரத்தையும் அக்கறையும் செலுத்துங்கள். நல்ல விடயங்களை அதிகம் வாசியுங்கள், நேரத்தை சமூக ஊடகங்கள் போன்றவற்றில் விரயம் செய்யாமல் அவற்றை வேறு பல நல்ல காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்வது சாலச் சிறந்தது. சென்ற ஆண்டு பலருக்கும் பலவிதமான அனுபவங்களை தந்திருக்கலாம். அவற்றில் நல்லதும் கெட்டதும் இருந்திருக்கலாம். ஆனால் அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் வரும் ஆண்டை எவ்வாறு நல்ல முறையில் பயன்படுத்தலாம் என முடிவு செய்வதே மிக நல்லது.

- மின் வாசகம் 

0 comments :

Post a Comment