கடந்த வருடம் கனடாவின் குபெக்கு மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற வால்மோரின் வேல்முருகன் ஆலயத் திருவிழாவிற்கு சென்றிருந்தேன். கனடாவின் பல பாகங்களில் வாழ்கின்ற தமிழர்களும், அமெரிக்காவிலிருந்தும் கூட அங்கே வந்திருந்தனர். கனடாவின் குபெக்கு மாநிலத்தில் மலைகள் நிரம்பிய தமிழர்களோ, வேறு இந்தியர்களோ வசிக்காத ஒரு சின்னஞ்சிறிய ஊரான வால்மோரினில் தான் இந்தக் கோவில் அமைந்திருக்கின்றது. இந்தக் கோவிலையும், அதற்குப் பக்கத்திலிருக்கும் தியான மையத்தையும் பெரும்பாலும் பிரஞ்சு மொழி பேசும் வெள்ளையர்களே நிர்மாணித்து வருகின்றனர். ஒரு சில தமிழ் குருக்கள்மார்கள் அங்கே தங்கியிருந்து கோவில் பூசைகளை செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஜூன்-ஜூலை மாதங்களில் அங்கே திருவிழா நடப்பது வழக்கம். அப்போது மட்டும் ஆயிரக் கணக்கான தமிழர்கள் டொராண்டோ, மொன்றியல், நியுயார்க் போன்ற பகுதிகளிலிருந்து அங்கே போய் சாமி கும்பிட்டு வருவர். அப்படியாக நானும் அங்கே செல்ல நேரிட்டது.

டொராண்டோவிலிருந்து பயணித்த நாங்கள் ஒண்டாரியோ மாநில எல்லையைக் கடந்து குபெக்கு மாநில எல்லைக்குள் நுழைந்த பின்னர் தான் புரிந்தது, என்ன தான் கனடா ஒரே நாடு என்றாலும், ஒரே நாட்டுக்குள் வேறொரு நாடும் இருக்கின்றது அது தான் முற்றிலும் பிரஞ்சு மொழி பேசும் மக்கள் வாழ்கின்ற குபெக்கு என்பது. ஏனெனில் குபெக்கு மாநிலத்தின் அனைத்து நெடுஞ்சாலை பலகைகளும் முற்றாக பிரஞ்சு மொழியிலேயே இருந்தது. துளிக்கும் எங்கும் ஆங்கிலம் இல்லை. இத்தனைக்கும் கனடாவின் இரு ஆட்சி மொழிகளில் ஆங்கிலமும் ஒன்று. அது மட்டுமின்றி கனடாவின் பெரும்பான்மை மக்கள் ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர்கள்.

கனடாவின் பெரும்பான்மை மக்கள் ஆங்கிலம் பேசினாலும், கனடாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆங்கிலம் இருந்தாலும் கூட, பிரெஞ்சு தெரியாத வாகன ஓட்டுநர்கள் பலர் நெடுஞ்சாலைகளை பயன்படுத்துகின்ற போதிலும் கனடாவின் குபெக்கு மாநிலத்தின் நெடுஞ்சாலைகளில் பிரஞ்சு பலகைகள் மட்டுமே காணப்படுகின்றன. தமிழர்களாகிய நாம் குபெக்கின் பிரஞ்சு மக்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் இருக்கின்றன.

தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியில் எழுதுவதாகச் செய்திகள் வந்தன. இதற்குத் தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பும் கிளம்பியது. எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக (இ)டிவிட்டர் தளத்தில் #stophindichauvinism என்ற ஆச்சடுக்கு மூலமாகப் பலரும் தம் விசனத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த (இ)டிவிட்டர் போராட்டத்தில் தமிழர்கள் மட்டுமின்றி கன்னடர்களும் அதிகளவில் பங்கெடுத்து கருநாடு மாநிலத்தில் இந்தி மொழி திணிப்பு எவ்வாறு எல்லாம் நடந்தேறி வருகின்றது என்கிற தமது கோபத்தைக் கொட்டித் தீர்த்தனர். கன்னடர்கள் மட்டுமின்றி தெலுங்கர்கள், ஒடியர்கள், மராட்டியர், பிக்காரிகள், வங்காளிகள் எனப் பலரும் கூடப் பங்கெடுத்திருந்தனர்.

நரேந்திர மோதி ஆட்சியேற்ற பின்னர் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் இந்தி திணிப்பு அரேங்கேறி வருகின்றதை நாம் அறிவோம். கடந்த 2015-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று இதே போன்றொரு (இ)டிவிட்டர் போராட்டம் நடத்தப்பட்டதோடு இந்தியா முழுவதுமிருந்து வந்த மொழிப் போராளிகள் ஒரு மாநாட்டையும் சென்னையில் நடத்தியிருந்தனர். ஏற்கனவே முகநூல் பக்கத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான ஒரு அமைப்பு செயல்பட்டு வருவதோடு, இந்தியா முழுவதும் உள்ள இந்தியை தாய்மொழியாகக் கொள்ளாதோர் தீவிரமாக கருத்துப் பரிமாற்றம் செய்து வருகின்றனர்.

சுமார் ஏழாண்டு வெளிநாட்டில் வசித்து விட்டுக் கடந்த 2014-யில் தமிழகம் திரும்பிய போது, நான் ஒரு விடயத்தை நன்கு கவனித்தேன். இந்த ஏழாண்டுகளில் பொருளாதார நிலையில் நாம் வளர்ந்திருந்தாலும் கூட, நம்மை அறியாமலேயே இந்தி திணிப்பு அரங்கேறி வருகின்றது. ஆம் ! இந்த ஏழாண்டு இடைவெளியில் எல்லா இடங்களிலும் சந்தடி சாக்கில் இந்தி நுழைந்திருக்கின்றது. முன்பு எல்லாம் வெறும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்த நிறுவனங்களில் மட்டுமே இந்தி காணப்பட்டு வந்தது. ஆனால், தற்போது தனியார் நிறுவனங்கள் கூட இந்தியைத் திணித்து வருகின்றன. வங்கிகளின் ஏட்டியம்கள் (ATM), செய்தித் தாள்கள், விளம்பரங்கள், பேரங்காடிகளின் அறிவிப்பு பலகைகள், அவ்வளவு ஏன் திரையரங்குகளில் உள்ள கழிப்பறை வரையில் இந்தி நுழைத்திருக்கின்றது. இவற்றைத் தமிழகத்தில் வாழும் எத்தனைப் பேர் கவனிக்கின்றார்கள் எனத் தெரியவில்லை.

சென்னையிலிருந்து வெளியாகும் தமிழ் செய்தித்தாளில் இந்தியில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்தன. விருகம்பாக்கத்திலிருந்த திரையரங்கின் கழிப்பறையில் இந்தியும், ஆங்கிலமும் மட்டுமே இருந்தது. வளசரவாக்கத்தில் ஒரு மளிகைக் கடை வாசலில் இருந்த சோப்பு விளம்பரம் ஆங்கில எழுத்திலான இந்தியில் இருந்தது. இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம்.

மத்திய அரசாங்கம் கடந்த சில ஆண்டுகளாகத் தீவிரமாக இந்தி மொழியைத் திணித்து வருகின்றது. மத்திய அரசில் பணியாற்றுவோர் இந்தியில் கையெழுத்திடவும், இந்தி மொழியில் பேசவும், இந்தி மொழியில் சமூக ஊட்டங்களை பயன்படுத்தவும் வற்புறுத்தி வருகின்றது. மத்திய அரசின் கல்வி வாரிய பள்ளிகளில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் படிக்க வற்புறுத்தப்படுகின்றனர். அவ்வளவு ஏன் பல பள்ளிகள் சமஸ்கிருத வாரங்கள் கூட கொண்டாடின.

இந்தி மொழியை எப்படியாவது முழு மூச்சுடன் திணித்துவிட மத்திய அரசு முயன்று வருகின்றது. ஐநா சபையில் இந்தியை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கவும், இந்தி மொழியைப் பரப்ப கோடிக் கணக்கான நம் வரிப் பணத்தைக் கொட்டிக் கொடுக்கவும் அதனால் முடிகின்றது. ஆனால், மற்ற இந்திய மொழிகளை நசுக்கவும், அழிக்கவும் அது நினைக்கின்றது.

இந்தியை மூன்றாம் மொழிப் பாடமாக எடுத்துக் கொண்ட பல மாநிலங்களில் அந்தந்த மாநில தாய்மொழிகள் அழியும் நிலையில் இருக்கின்றது. பஞ்சாபில், குஜராத்தில், பீகாரில், மராட்டியத்தில் இளைய தலைமுறையினர் இந்தி மட்டுமே பேசும் சூழல் ஏற்பட்டுள்ளது. வங்காளத்தில், ஒடிசாவில் இந்தி சொற்கள் அதிகம் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தெலங்கானாவில் தெலுங்கு மொழி இல்லாமல் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை. கருநாடகத்தில் இந்தி மொழியை வளர்க்கவும், கன்னட மொழியைப் புறந்தள்ளவும் சகல வசதிகளுடன் வேலைகள் அரேங்கேறி வருகின்றன.

இந்தி மொழியின் அசுரப் பசிக்கு தடையாக இருப்பது நம் தமிழகம் மட்டும் தான். அதனால் தான் என்னவோ, தமிழகத்தின் மொழி மற்றும் கல்வி ஆகியவற்றை நிர்மூலமாக்க திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. அண்மையில் வெளியான ஓர் ஆய்வில் இந்தியாவில் தலைசிறந்த 100 கல்லூரிகளில் 37 தமிழகத்தில் மட்டுமே உள்ளது. தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களில் மட்டும் 51 சிறந்த கல்லூரிகள் இடம்பெறுகின்றன. கூடவே ஆந்திர பிரதேசத்தின் 11-யைம் சேர்த்தால் இந்தியாவின் மூன்றில் இரண்டு சிறந்த கல்வி நிலையங்கள் முன்னாள் மதராஸ் மாநிலத்தில் அமைந்திருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம்,

இன்று தமிழ் மாணவர்கள் அதிகளவில் தேசிய கல்வி நிலையங்களில் இடம் பிடித்து வருகின்றனர். மேலும் பல தமிழர்கள் அமெரிக்கா உட்படப் பல நாடுகளில் தலை சிறந்த பணிகளில் இருக்கின்றனர். உதாரணத்துக்கு கூகிளின் சுந்தர் பிச்சை தொடங்கி பலரும் உலகம் முழுவதும் வெற்றிக் கொடி நாட்டியிருக்கின்றனர். செவ்வாய் கோளிற்கு விண்கலம் ஏவிய ஆராய்ச்சிக் குழுவில் இருந்த சுப்பையா அருணன் உட்படப் பல விஞ்ஞானிகள் தமிழர்களே. வெற்றிகரமாக அணு ஆயுத சோதனை நடத்திக் காட்டிய நம் அப்துல் கலாம் கூட தமிழரே. இவர்கள் என்ன இந்தி படித்தா சாதித்துக் காட்டினார்கள். இவர்கள் எல்லாம் பள்ளிப் படிப்பையே தமிழில் மட்டுமே படித்து முன்னேறியவர்கள்.

இன்று இந்தியை நம் தொண்டையில் திணிப்பதன் மூலம் நம்மையும் மற்றொரு பீகாராக, ஜார்க்கண்டாக மாற்றவே முயல்கின்றார்கள். தமது தாய்மொழியான போஜ்பூரியையும், சாந்தாளியையும் தொலைத்துவிட்டு இந்தி திணிக்கப்பட்டதால் வளர்ச்சியடையாமல் அவர்கள் யாவரும் தென்னிந்தியாவிற்கே பிழைக்க வரும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

மாறாக 1937-யில் முதன் முறையாக இந்தி திணிக்கப்பட்ட போது பெரியார் உட்பட பல தலைவர்கள் அதை எதிர்த்தனர். மீண்டும் 1963-1967 காலப் பகுதியில் ஆங்கிலத்தை நீக்கிவிட நடந்த முயற்சியை முறியடித்து, இந்தி திணிப்பை விரட்டியடித்து இருமொழி கொள்கையாள் தமிழகம் வளர்ச்சி கண்டது. அன்று அறிஞர் அண்ணாவின் நேர் கொண்ட சிந்தனையாலும், வழிகாட்டலாலும் ஆங்கிலம் இந்தியாவில் நிலைநிறுத்தப்பட்டது. அந்த ஆங்கிலமே இந்தியாவை இன்று உலக அரங்கில் உயர்த்தி இருக்கின்றது. அன்றே ஆங்கிலம் நீக்கப்பட்டிருந்தால் ஒட்டுமொத்த இந்தியாவும் உபி, பிகார் போல நாறியிருக்கும்.

அன்று தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை விலக்கியதால், தமிழர்களுக்குத் தேவையற்ற சுமை நீங்கியதோடு தமிழகம் வளர்ச்சிப் பாதையில் நகர்ந்தது. தமிழ் மொழியின் இருப்பும் நிலைநாட்டப்பட்டது. மாறாக மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டதால் இன்று கருநாடகம் இந்தி பேசுவோரது ஆதிக்கத்தில் தள்ளாடுகின்றது. இந்தி மொழி பேசுவோரே பெங்களூரின் பெரும்பான்மை வேலைகளை பறித்துக் கொண்டுள்ளனர். அத்தோடு நிற்காமல் கன்னட மக்கள் மீதும் இந்தி மொழியைத் திணித்து வருகின்றனர். பெங்களூரில் மெட்ரோ ஓடியபோது இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே அறிவிப்புகள் வந்த போது கன்னட மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கு எல்லாம் காரணம் கருநாடத்திற்கு என்றொரு மாநில கட்சி இல்லாமல் போனதும், மும்மொழி கொள்கைகளை ஏற்றுக் கொண்டதுமே ஆகும்.

அதே சமயம் இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியன் எனவும், இந்தி தெரிந்தால் வேலைக் கிடைக்கும் எனப் பழைய பஞ்சாங்கம் பாடுவோரும் நம் தமிழகத்தில் இருக்கத் தான் செய்கின்றனர். இந்தி இந்தியாவில் இருக்கின்ற ஏனைய மொழிகளைப் போன்று ஒரு மொழி அவ்வளவே. உதாரணத்துக்கு ஒரு தாயிற்கு 18 பிள்ளைகள் இருக்கின்றன, ஆனால் அந்தத் தாய் ஒரே ஒரு பிள்ளைக்கு மட்டும் நல்ல சட்டை, சாப்பாடு என கவனித்துக் கொண்டு ஏனைய பிள்ளைகளை பட்டினி போட்டும், கிழிந்த ஆடைகளோடு அலைய விட்டால், அந்தத் தாய் ஒரு நல்ல தாயாக கருதப்பட மாட்டாள். இன்று இந்தியாவின் நிலையும் இது தான். இந்தியாவின் மற்ற மொழிகளை ஒதுக்கிவிட்டு இந்திக்கு மட்டும் சகல சௌபாக்கியங்களையும் தந்து அகமகிழ்கின்றது மத்திய அரசாங்கம். ஏனிந்த மாற்றாந்தாய் மனப்பான்மையோ?

இந்தி என்றொரு மொழியைத் தமிழர்களாகிய நாம் வெறுப்பதில்லை. இந்தி மொழி பேசப்படுகின்ற மாநிலத்திற்குச் செல்கின்ற தமிழர்கள் அங்கேயே நிரந்தரமாக வசிக்க நேரிடும் போது குறுகிய காலத்தில் இந்தியைக் கற்று மிக அழகாக இந்தி பேசுவதை நான் பார்த்திருக்கின்றேன். அதே சமயம் ஆந்திராவிற்கோ, கருநாடகத்திற்கோ, வங்காளத்திற்கோ குடிபுகும் தமிழர்கள் முறையே தெலுங்கு, கன்னடம், வங்காள மொழிகளைக் கற்று பேசி வருகின்றனர். ஆனால், எங்கோ இருக்கின்ற இந்திக் காரன் இங்கே சாமி கும்பிட வருவதற்கும், நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவற்காகவும், இங்கே நம் தமிழகத்தில் வேலைக்கு வருவதற்காகவும், ஏழரைக் கோடி தமிழர்களும் இந்தி படிக்க வேண்டும் எனச் சொல்வது மடத்தனமாகப் படவில்லை.

உலகமே சுருங்கி உலகமய பொருளாதாரக் கால கட்டத்தில் நாம் கொரியாக் காரனோடும், சீனாக் காரனோடும், ஜெர்மன் காரனோடும் வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றோம், அவர்களும் நம் தமிழகத்திற்கு வந்து போகின்றனர். அதற்காக இந்தியர்கள் அனைவரையும் கொரியின் மொழியையும், சீன மொழியையும், ஜெர்மன் மொழியையும் கற்றுக் கொள்ளுங்கள் எனச் சொன்னால் எவ்வளவு நகைச்சுவையாக இருக்குமோ அவ்வளவு நகைச்சுவையாக இருக்கின்றது தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் இந்தி படியுங்கள் என்ற கோஷமும்.

கடந்த 50 ஆண்டுகளாகத் தென்னிந்திய மாநிலங்கள் இந்தி படித்து வருகின்றன. ஆனால் எதாவது ஒரு வட இந்திய மாநிலத்தில் எதாவது ஒரு தென்னிந்திய மொழியை அவர்கள் படிக்கின்றனரா என்ன? இல்லவே இல்லை. இதென்ன நியாயம் சொல்லுங்கள். சொல்லப் போனால் முதலில் உபி, பிகார், ராஜஸ்தான் போன்ற இந்தி மொழி மாநிலங்களில் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளைக் கட்டாயமாக்குங்கள். ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கான இந்தி மொழி பேசுவோர் தென்னிந்தியாவிற்குத் தொழில் செய்யவும், வேலை தேடியும் வருகின்றனர். இனி வருங்காலங்களில் மேலும் பல லட்சம் பேர் இங்கே குடியேறும் சூழல் தான் உள்ளது. அவர்கள் இந்த மொழிகளைக் கற்பது பயன் தரலாம். அப்போது நிச்சயம் வட இந்திய ஓட்டுநர்களுக்கு தமிழகத்திலோ, கருநாடகத்திலோ இந்தியில் பெயர் பலகைகள் தேவைப்படாது தானே.

- மின் வாசகம் 

0 comments :

Post a Comment