உலகின் பார்வைக்கு இந்தியா ஒரே நாடு, ஆனால் உண்மையில் இந்தியா பல நாடுகளின் கூட்டமைப்பு என்றே சொல்ல வேண்டும். எவ்வாறு ஐரோப்பா ஒரே மொழி ஒரே மக்கள் ஒரே பண்பாடு இல்லையோ, இந்தியாவும் ஒரே மொழி ஒரே மக்கள் ஒரே பண்பாடு கொண்டது கிடையாது. 

ஆனால் சிந்து முதல் வங்கம் வரை, இமயம் முதல் குமரி வரை அடங்கிய இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவுகள் அடங்கிய இந்த தெற்காசிய துணைக் கண்டத்து மக்கள் அனைவரும் பொதுவில் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டவர்கள் என்பதில் ஐயமில்லை. நமக்கிருக்கும் பொதுப் பெயர் மாநிற மக்கள் ( பிரவுன் ). 

ஆம் ! இந்தியாவுக்குள் வாழ்கின்ற நாம் நம்மை ஜாதி, மதம், மொழி, இனம், நிறம் என பாகுபாடு செய்து கொண்டு அதில் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொண்டிருந்தாலும் நாம் அயலகத்தை அடைகின்ற போதும் நம்மை பிறர் ஒரே குடைக்குள் தான் வைத்துப் பார்க்கின்றனர். இந்தியாவுக்குள் நாம் எவ்வளவு வெளுப்பானவராக இருந்தாலும், கறுப்பானவராக இருந்தாலும் மேற்கு நாடுகளில் நமக்கு இருக்கும் ஒரே பெயர் மாநிற மக்கள் மட்டுமே. 

ஆனால், இதை எல்லாம் மறந்துவிட்டு இந்தியாவுக்குள் வாழ்கின்ற குறிப்பாக இந்தியாவின் வடக்கில் வாழ்வோர் தம்மை வெளுப்பானவர்கள் என்பதாக கருதிக் கொண்டு தென்னிந்தியர்கள் மீதான இன வன்மத்தை ஆண்டாண்டு காலமாக உமிழ்ந்து வருகின்றனர். அந்த வகையிலேயே அண்மையில் பாஜக எம்பி தருண் விஜய் வெளியிட்ட கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. வடக்கில் ஆப்பிரிக்க மாணவர்கள் மீது நிகழ்த்தப்படும் இனவெறி தாக்குதல் குறித்த பேச்சில், இந்தியர்கள் ஒன்றும் இனவெறியர் இல்லை எனவும், கறுப்பினத்தோரை வெறுப்போர் இல்லை எனவும் கூறியதோடு நிற்காமல், தாம் இனவெறியர் என்றால் கறுப்பான தென்னிந்தியர்களோடு எப்படி இணக்கமாக வாழ் முடிகின்றது என்றார். இப்படி கூறியதற்கு நாம் உண்மையில் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஏனெனில் வடக்கில் வாழ்வோரது பொதுப்புத்தியை தான் அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார். ஆம் ! வடக்கில் வாழ்வோர் தாம் எவ்வளவு கறுப்பாக இருந்தால் கூட தம்மை விட தென்னிந்தியர்கள் என்னவோ கறுப்பானவர்கள் என்பது போல, தம்மை என்னவோ ஐரோப்பிய மக்களின்  நிறம் கொண்டோர் என கருதிக் கொண்டிருக்கின்றனர். நாமும் பல காலம் தென்னிந்தியர்கள் தான் கறுமையானவர்கள், வடக்கில் உள்ளோர் எல்லாரும் வெளுப்பானர்வர்கள் என்ற எண்ணத்தில் தான் வாழ்ந்திருந்தோம்.

ஆனால், இந்தியா முழுவதும் பயணம் செய்து பல வித மக்களை சந்தித்த அனுபவம் உடைய எவருக்குமே மிக எளிதில் ஒரு விசயத்தை தெரிந்து வைத்திருக்கும் வாய்ப்பிருக்கிறது. இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களில் எல்லா பகுதிகளிலும் எல்லா நிற மக்களும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். நான் பார்த்த வரையில் வங்காளம், பிகார், ஜார்க்காண்டு, ஒரிசா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் வாழ்கின்ற பெரும்பான்மையானோர் கருமையானவர்கள் தான். 

அது மட்டுமின்றி மராத்தியம், குசராத்து மாநிலத்தில் கூட பெரும்பான்மை மக்கள் தென்னிந்தியர்களை ஒத்த நிறம் உருவம் கொண்டோராகவே காணப்படுகின்றனர். சரி எஞ்சிய பகுதிகளான உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், மத்திய பிரதேசத்தில் வாழ்வோர் அனைவரும் வெள்ளையானவர்களோ என கருதலாம் என்றால் அதுவும் இல்லை. இந்த மாநிலங்களில் பாதிக்கு பாதியளவு மக்கள் கறுப்பானவர்களே. ஆக, கஷ்மீர், மற்றும் இமாச்சல பிரதேசத்தில் தான் பெரும்பங்கானோர் வெள்ளை நிறமுடையோராக இருக்கின்றனர். 

அப்படி இருக்க ஏன் இந்த தருண் விஜய் உட்பட பல வடக்கத்திய மக்கள் தென்னிந்தியர்கள் மட்டுமே கறுப்பானவர்கள் என பேசுகின்றனர். அப்படி தெற்கில் உள்ளோர் எல்லோரும் கறுப்பானவர்களா என்ன? உண்மையில் ஏனைய இந்தியாவை போல தெற்கிலும் அனைத்து ஜாதி, மதம், மொழி, இன மக்களிலும் வெளுத்த நிறமுடையோர் வாழ்கின்றனர். 

அத்தோடு தெற்கில் பிராமணர் மட்டுமே வெளுப்பானவர் மற்ற ஜாதியினர் கறுப்பானவர் என்ற எண்ணமும் இருக்கின்றது. ஆனால், தெற்கில் வாழ்கின்ற பிராமணர்களிலேயே கூட கறுப்பானவர்கள் அதிகம் இருக்கின்றனர். பிராமணரல்லாத திராவிட ஜாதியினர் மற்றும் தலித்களில் கூட வெளுப்பானவர்கள் அதிகம் இருக்கின்றனர். குறிப்பாக மலை வாழ் மக்களான தோடர், கோத்தர், படகர், குடவர் தொடங்கி பல இன மக்களில் வெளுமையான நிறமுடையோர் அதிகமாகவே காணப்படுகின்றனர். இந்தியா முழுவதும் வாழ்கின்ற ஒரு சில பழங்குடி மக்களைத் தவிர ஏனைய பொது சமூகம் முழுவதிலும் கறுப்பு, வெளுப்பு, மாநிறம் என பல வண்ணத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒரே குடும்பத்தில் கூட பலரும் ஒருவர் கறுப்பாகவும், மற்றொருவர் வெளுப்பாகவும், பலர் மாநிறமாகவும் இருப்பதைக் காணலாம். இது தான் எதார்த்தம். அப்படியிருக்க இந்த வடக்கத்தியர்கள் ஏனோ தென்னிந்தியர்கள் மட்டும் கறுப்பு என்ற கருத்து மாக்ஸ் முல்லர் போன்ற மேலைநாட்டு ஆரிய சித்தாந்தவாதிகளால் வளர்க்கப்பட்ட இந்துத்வா கோஷ்டிகளின் வாதம் சிரிப்பை வரவழைக்கின்றது. 

வடக்கில் பஞ்சாப், இமாச்சலம், தில்லியில் வெளுத்த நிறமுடையோர் சற்றே அதிகம் என்றால் தெற்கில் மங்களூர், கொங்கண், மலபார், குடகு, நீலகிரியில் வெளுத்த நிறமுடையோர் அதிகம். தெற்கில் கறுத்த நிறமுடையோர் ஏனைய பகுதியில் அதிகம் எனில் வடக்கில் பிகார், வங்காளம், ஒரிசா போன்ற பகுதியில் கறுத்த நிறமுடையோர் அதிகம். ஆக மொத்தம், வடக்கிலும் சரி தெற்கிலும் சரி அனைத்து வண்ண மக்களும் நிகராகவே இருக்கின்றனர். ஆதி இந்தியர்களான திராவிடர்கள் கருத்த நிறமுடையோர் தான் என்றாலும், காலப் போக்கில் மத்திய கிழக்கிலிருந்தும், மத்திய ஆசியாவிலிருந்தும் குடியேறிய பல மக்கள் திராவிடர்களோடு கலந்து ஒட்டு மொத்த இந்திய மக்களும் கலப்பினமாகவே இருக்கின்றனர். வட இந்தியாவில் வாழ்கின்ற இடைநிலை சாதி மக்கள் அனைவருமே மாநிறமாகவும், கருநிறமாகவும் தான் காணப்படுகின்றனர். இவர்கள் யாவரும் ஒரு காலத்தில் வடக்கில் வாழ்ந்திருந்த திராவிட மக்களின் வழிதோன்றல்கள் என்பதில் ஐயமில்லை. தெற்கிலோ வடக்கிலோ கிழக்கிலோ மேற்கிலோ இந்திய கண்டத்தின் அனைத்து பகுதிகளில் வாழ்கின்ற கருப்பு வண்ண மக்கள் தான் உண்மையான திராவிட இன மக்கள் ஆவார்கள்.

காலப்போக்கில் வடக்கில் உள்ளோர் தமது பாரம்பரிய மொழி, பண்பாட்டை கைவிட்டு வந்தேறிய பாரசீகர்களின் ( பிரமாணர் ) மொழி, பண்பாட்டை பின்பற்றி தமது திராவிட மொழி பண்பாட்டை நாளடைவில் கைவிட்டு விட்டனர். தெற்கில் உள்ளோர் தமது பூர்விக மொழி, பண்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். இது தான் நமக்குள்ள வேறுபாடு. இன்று தென்னிந்தியர்கள் தமக்கே உரிய தனித்துவமான பண்பாட்டையும், மொழியையும், வாழ்வியல் முறையையும் கைக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். வடக்கிற்கும் தெற்கிற்குமான வேறுபாடு நிற வேறுபாடு கிடையாது மாறாக பண்பாட்டு வேறுபாடு என்பதை வடக்கத்திய வெள்ளைக்காரர்கள் உணரட்டும். இதை வெறும் வள்ளுவரின் சிலையை உறரித்துவாரில் வைத்து விட்டு தென்னிந்தியர்கள் மீதான இனவெறியை காட்டி மூக்குடைந்து போன தருண் விஜய் போன்றோருக்கு எடுத்துக் கூறினால் சால நன்று. 

0 comments :

Post a Comment